1968-ம் ஆண்டு பிப்ரவரி 1-ம் தேதி, தெற்கு வியட்நாமின் சாய்கான் நகரில் கேமராவுடன் சுற்றிக்கொண்டிருந்தார் அசோசியேடட் பிரஸ் நிறுவனத்தின் புகைப்படக்காரரான எட்டி ஆடம்ஸ். தெற்கு வியட்நாம் படைகளுக்கும், விடுதலைப் படைகளுக்கும் இடையே கடும் உள்நாட்டுப் போர் நடந்துகொண்டிருந்த சமயம் அது. கண்ணில் கண்ட காட்சிகளையெல்லாம் தன் கேமராவால் படம் பிடித்துக் கொண்டிருந்தார் எட்டி ஆடம்ஸ். போர்க்காட்சிகளில் ஒன்றைக்கூட தவறவிட்டு விடக்கூடாது என்ற தீவிரம் அவரது செயலில் தெரிந்தது.
அவர் அப்படி இயங்கிக் கொண்டிருந்த நேரத்தில் தெற்கு வியட்நாமின் படை வீரர்கள், விடுதலைப் படையைச் சேர்ந்த ஒருவரை கைவிலங்கிட்டு அழைத்து வந்துகொண்டிருந்தனர். சரி...
அந்தக் கைதியை என்னதான் செய்யப் போகிறார்கள் பார்ப்போம் என்ற எண்ணத்தில் எட்டி ஆடம்ஸ் அவரைப் பின் தொடர்ந்தார். சிறிது தூரம் சென்ற வீரர்கள், ராணுவ ஜெனரல் ஒருவரின் முன் அந்தக் கைதியை நிறுத்தினர். சிறிது நேரம் அந்தக் கைதியிடம் பேசினார் ராணுவ ஜெனரல். ஏதோ விசாரணை நடக்கிறது என்று நினைத்த எட்டி ஆடம்ஸ், அங்கிருந்து விலக நினைத்தபோதுதான் அது நடந்தது.
கைதியுடன் பேசிக்கொண்டு இருக்கும்போதே, தனது உறையில் இருந்து துப்பாக்கியை எடுத்த ராணுவ ஜெனரல், அவரை நோக்கி குறிபார்த்தார். ஏதோ அசம்பாவிதம் நடக்கப் போகிறது என்பதை உணர்ந்த எட்டியும், தனது கேமராவைத் தயாராக வைத்து படமெடுக்க தோதான இடத்தில் நின்றுகொண்டார்.
கைதியை சுட்டுக் கொல்வது என்று முடிவெடுத்த பின், அவருக்கு அருகில் இருந்த ராணுவ வீரர்களைத் தள்ளிப் போகச் சொல்கிறார் ராணுவ ஜெனரல். துப்பாக்கி குண்டு குறிதவறி, அவர்கள் மீது பட்டுவிடக் கூடாது என்பதற்காக அவர் அப்படிச் செய்தார். இதைத் தொடர்ந்து தனது வலக்கையில் துப்பாக்கியை உறுதியாகப் பிடித்தபடி, அந்த கைதியின் வலது நெற்றியை நோக்கி குறிவைத்தார். தன்னை ராணுவ ஜெனரல் சுடப்போவது உறுதி என்ற நிலையில் பயம் கலந்த மவுனத்துடன் அந்தக் கைதி நிற்க, டிரிக்கரை அழுத்துகிறார் ராணுவ ஜெனரல். கைதியின் நெற்றிக்குள் குண்டு பாயும் நேரத்துக்குள், அதாவது கால் வினாடிக்கும் குறைவான நேரத்தில் இந்தக் காட்சியைப் படம் பிடித்தார் எட்டி ஆடம்ஸ். கைதியை ராணுவ வீரர்கள் கொண்டுவந்த காட்சி முதல் அந்தக் கைதியின் ரத்தம் சாலையில் உறைந்து கிடக்கும் காட்சி வரை அங்கு நடந்த அத்தனை காட்சிகளையும் தன் கேமராவில் பதித்தார் எட்டி.
படமெடுத்த பின்னர் சம்பந்தப்பட்டவர்கள் யாரென்று விசாரித்தார் எட்டி. கைதியைக் கொன்ற ராணுவ ஜெனரலின் பெயர் நூயன் நாக் லான் என்பதும் சுடப்பட்ட கைதி, விடுதலைப் படையைச் சேர்ந்த நூயன் வான் லெம் என்பதும் அவருக்குத் தெரியவந்தது. உள்நாட்டுப் போரில் காவல்துறையினர் பலரைக் கொன்ற வழக்கில் வான் லெம்மை தாங்கள் கைது செய்ததாக ராணுவத்தினர் தெரிவித்தனர். குறிப்பாக, அன்று காலையில் வான் லெம் தலைமையிலான விடுதலைப் படையினர் நடத்திய திடீர் தாக்குதலில் 7 வியட்நாமிய காவல்துறை அதிகாரிகள், 3 அமெரிக்க வீரர்கள் உட்பட 34 பேர் கொல்லப்பட்டனர் என்றும் அதற்காகத்தான் நூயன் வான் லெம் சுட்டுக் கொல்லப்பட்டார் என்றும் ராணுவ வீரர்கள் தெரிவித்தனர்.
அடுத்த நாள் இந்தப் புகைப்படம் சர்வதேச பத்திரிகைகளில் வெளியானதும், மக்கள் கொதித்தெழுந்தனர். சுட்டுக் கொல்லப்பட்டவர் சாதாரண உடையில் இருந்ததால், அவர் சாதாரண பொதுமக்களில் ஒருவர் என்றே மக்கள் கருதினர். அப்பாவி மக்களை வியட்நாம் படை சுட்டுக் கொல்வதாக தகவல் பரவியது. இது அந்நாட்டின் ராணுவத்துக்கும், அவர்களுக்கு உதவியாக இருந்த அமெரிக்காவுக்கும் மிகப்பெரிய அவப்பெயரைத் தந்தது.
இதுபற்றி கூறும் எட்டி, “சுட்டுக் கொல்லப்பட்டவர் பலரை கொலை செய்துள்ளார் என்று தெரியாமல் மக்கள் அந்த ராணுவ அதிகாரியைக் கரித்துக் கொட்டினர். இப்படி நடக்கும் என்று தெரிந்திருந்தால் நான் அந்தப் படத்தையே வெளியிட்டிருக்க மாட்டேன்” என்கிறார்.
எட்டி ஆடம்ஸ் (Eddie Adams)
1933-ம் ஆண்டு அமெரிக்காவில் உள்ள பென்சில்வேனியா மாகாணத்தில் பிறந்தவர் எட்டி ஆடம்ஸ். 1951-ம் ஆண்டு அமெரிக்க கடற்படையில் இணைந்தார். கடற்படையில் புகைப்படக்காரராக பணியாற்றிய இவருக்கு, கொரிய போரை படம் பிடித்துக் கொடுக்கும் வேலை தரப்பட்டது. பின்னர் கடற்படையில் இருந்து விலகியவர், அசோசியேடட் பிரஸ் நிறுவனத்துக்காக புகைப்படங்களை எடுத்துக் கொடுத்தார். வியட்நாம் போர் தொடர்பாக ஏராளமான புகைப்படங்களை இவர் எடுத்துள்ளார். இங்கு நீங்கள் காணும் புகைப்படத்துக்காக 1969-ம் ஆண்டின் புலிட்ஸர் விருதையும், வேர்ல்ட் பிரஸ் போட்டோ விருதையும் இவர் வென்றார். 2004-ம் ஆண்டு நியூயார்க் நகரில் இவர் காலமானார்.