கரு.முத்து
muthu.k@kamadenu.in
“திருச்சி துறையூர் ரோட்டுல மண்ணச்சநல்லூர் பக்கத்துல பூனாம்பாளையம் ரைஸ்மில் ஸ்டாப்லருந்து மேற்கால ஒரு கிலோமீட்டர் வந்தீங்கன்னா ஒரு ஃபேக்டரி இருக்கும். அங்கேதான் இருக்கேன்” என்று எனக்கு வழி சொன்னார் எழுத்தாளர் இதயா ஏசுராஜ். சுற்றிச்சுற்றி வந்தும் இடத்தைக் கண்டுபிடிக்க முடியாததால், “என்னால இடத்தைக் கண்டுபிடிக்க முடியல. என்னை வந்து பிக்கப் பண்ணிக்க முடியுமா?” என்று கேட்டேன். “இன்னும் ஒரு கிலோமீட்டர்தான் சார். என்கிட்ட வண்டி எதுவுமில்லை. நடந்துதான் வரணும்” என்று வெள்ளந்தியாகப் பதில் சொன்னார்.
அலைந்து திரிந்து அந்தக் கட்டிடத்தை அடைந்தால், வாசலில் பிரம்மாண்டமான கேட்டுக்கு முன்னால் நாற்காலி போட்டு அமர்ந்திருந்த செக்யூரிட்டி ஒருவர் எழுந்து வணக்கம் போட்டார். அவரிடம், “எழுத்தாளர் இதயா ஏசுராஜைப் பார்க்கணும்” என்றால், “அது நான்தான் சார்” என்றார் புன்னகையுடன்.
‘இல்லம் சொர்க்கமாக’, ‘மனிதனின் தேடலும், மகத்தான வெற்றியும்’, ‘உலக மாமேதை அண்ணல் அம்பேத்கர்’, ‘மேஜிக் செய்வது எப்படி?’, ‘நிகரில்லா தலைவன் சே குவேரா’, ‘சர்வாதிகாரி ஹிட்லர்’, ‘அறிஞர் அண்ணா, கடையேழு வள்ளல்கள்’, ‘தமிழ் சினிமாவின் வரலாறு’ என்று பன்முகத் தலைப்புகளில் 12 நூல்களை எழுதியிருக்கும் இதயா ஏசுராஜ், இரவு வேளைகளில் இப்படிப் பாதுகாவலராகப் பணிபுரிகிறார்.