தொடாமல் தொடரும் - 1

By பட்டுக்கோட்டை பிரபாகர்

மேகத்தின் பார்வையில் கொத்துக் கொத்தான மரங்கள், பழமுதிர்சோலையில் அடுக்கிவைத்த பச்சை காலிஃபிளவர் போல இருந்தன. பறவைகளற்ற சாம்பல் நிற வானம் வெடித்து அழுவதற்கு முன் ஒத்திகையாக, செல்லமான குட்டி மழையைத் தெளித்துக் கொண்டிருந்தது.

மலையேறும் வாகனங்களும் மலையிறங்கும் வாகனங்களும் வைப்பர்ஸ் மற்றும் பனிப்புகையை ஊடுருவும் மஞ்சள் விளக்கு போட்டுக்கொண்டு, ஸ்ட்ரிக்ட்டான கல்லூரியின் மாணவர்களும் மாணவிகளும் போல உரசிவிடாமல் எச்சரிக்கையாகக் கடந்தன.
குன்னூர் பஸ் நிறுத்தத்தில் அந்த நேரத்துக்கு மூன்றே பஸ்கள் நின்றிருக்க… அதன் ஓட்டுநர்களும் நடத்துநர்களும் டீக்கடைகளில் சுடச்சுட மிளகாய் பஜ்ஜி கடித்துக்கொண்டு, ஆவி பறக்கும் டீயை கிளாஸ் அசைத்துக் குடித்தார்கள்.

பஸ்களுக்குள்ளும் வெளியிலும் காத்திருந்த பயணிகளிடம் பிளம்ஸும் கேரட்டும் விற்கும் சிறுவர்கள், சிறுமிகள் நனைந்தபடி ஓடி ஓடிக் கெஞ்சினார்கள்.

ஈரத்தில் ஊறிப் பாதி தொங்கிய போஸ்டர் ஒன்றில் ‘சிவகார்த்' வரைதான் தெரிந்தார். பக்கத்திலேயே, மூலம், படைக்கு லாட்ஜ் விலாசம் போட்டு அழைத்தார்கள். நிரம்பி வழிந்த குப்பைத் தொட்டியின் மீது தாவிய மூன்று குரங்குகள் அழுகிய பழங்களைப் பொறுக்கின.

ஸ்வெட்டர், ஜெர்கின் போட்டு குடை பிடித்த மனிதர்கள் அவசரமில்லாமல் நடந்தார்கள். ரெயின்கோட் போட்டவர்கள் இருசக்கர வாகனங்களில் விரைந்தார்கள்.

அந்த ரெடிமேட் கடையின் வாசலில் மழை ஓயக் காத்திருந்த சிலரில் ஒருவன் பிடித்த சிகரெட் புகை நெடியால் இருமிய அஞ்சலி, சற்று விலகி நின்றாள்.

சேலை மேல் சிவப்பு நிறத்தில் முழுக்கை ஸ்வெட்டர் போட்டிருந்தாள். வட்ட முகத்தில் மழையின் சாரல் மைக்ரோ புள்ளிகள் வைத்திருந்தது. கூந்தலோரம் காலையில் செருகிய மஞ்சள் ரோஜா கொஞ்சம் வாடிப்போனதற்காகத் தலை குனிந்திருந்தது. கைப்பையைத் தோளின் குறுக்கே கண்டக்டர் போல அணிந்திருந்தாள்.

அதிலிருந்து செல்போனெடுத்து மருதாணி போட்ட விரல்களால் எண்கள் ஒற்றி, “சத்யா, பேங்க் வேலை முடிச்சிட்டேன். மழை பிடிச்சிடுச்சி. கொஞ்சம் லேட்டாகும் வர்றதுக்கு. மேனேஜர் கேட்டா சொல்லிடறியா?'' என்றாள்.

எதிர் முனையில்… கிளாசிக் டீ ஃபேக்டரியின் அலுவலகத்தில் கம்ப்யூட்ட ரைத் தட்டியபடி பேசிய சத்யா, “இப்ப எங்க இருக்கே அஞ்சலி?” என்றான்.

“ராயல் ரெடிமேட்ஸ் வாசல்ல. ஏன்?”

“பக்கத்துல நம்ம டெலிவரி வேன் வந்துட்டிருக்கு. உன்னைப் பிக்கப் பண்ணிக்கச் சொல்றேன். அங்கயே இரு”

“சரி. தேங்ஸ் சத்யா.”

செல்போனைக் கைப்பைக்குள் வைத்துக்கொண்ட அஞ்சலி, தன் தோளைத் தொடுவது யாரென்று திரும்பிப் பார்த்தாள்.
புன்னகைத்த சத்யாவின் அம்மாவுக்கு ஒரு பல் தங்கப் பல்.

“எப்படி இருக்கே அஞ்சலி? வீட்டுக்கு வந்து நாளாச்சு.''

“ஆபீஸ் வேலை சரியா இருக்கும்மா. எப்படி இருக்கீங்க?”

“இந்த மூட்டு வலிதான் உயிரை எடுக்குது. ஆபரேஷன் செய்யலாம்னு சொல்றான் சத்யா. நான்தான் வேணாங்கறேன்”
“ஏம்மா… பண்ணிக்கலாமே…நிறைய பேர் பண்ணிக்கறாங்க.”

“எதுக்கு செலவுன்னுதான். ஏற்கெனவே வீடு கட்ட வாங்குன கடனே இன்னும் அவன் கட்டி முடிக்கலை. இப்படி வா... ஒரு கேக் சாப்புடலாம்.''

அஞ்சலி மறுத்தும் கேட்காமல், அடுத்திருந்த பேக்கரிக்குக் கூட்டிவந்து உட்காரவைத்து கேக்கும் சமோசாவும் சொன்னாள் சத்யாவின் அம்மா.

“எனக்கு ஒரு ஹெல்ப் செய்யணுமே.''

“சொல்லுங்கம்மா.''

“நான் பேச்செடுத்தாலே எரிஞ்சி விழறான். சத்யாட்ட நீதான் பேசணும்”

“எதைப் பத்திம்மா?''

“அவன் கல்யாணம் பத்திதான். சொந்தத்துலயே ரெடியா இருக்கும்மா. எல்லாம் பேசி வெச்சிட்டேன். இவன்தான் பிடிகுடுக்காம அடம் பிடிக்கிறான்.”

“இது ரொம்பப் பர்சனலான விஷயம்மா. நான் எப்படி...?”

“என்ன பொடலங்கா பர்சனல்? நியாயம்னு ஒண்ணு இல்ல? என்ன வயசு? இருபத்தேழு! அப்படியே விட்ற முடியுமா? ஊர்ல உலகத்துல எவனுமே ரெண்டாம் கல்யாணம் பண்ணலையா?''

“பேசிப் பாக்கறேன்.”

“பேரனோ, பேத்தியோ பாக்காம செத்துப் போனா உங்கம்மா ஆவியா அலைவான்னு சொல்லு. பரணி எப்படி இருக்கான்?”
“நல்லாருக்கான். சுட்டித்தனம்தான் ஜாஸ்தியாகிட்டே இருக்கு.”

“இருக்கட்டும். இருக்கட்டும். திட்டாத. பெருசானா தானா சரியாயிடும். அன்னிக்கு வீட்டுக்கு வந்தப்போ பாட்டி, பாட்டின்னு பாசமா கூப்ட்டுச்சி. ஒரு நிமிஷத்துக்கு ஒம்போது கேள்வி கேட்டுச்சி புள்ளை. நான்தான் மக்கு… எதுக்கும் பதில் தெரியல.”
கிளாசிக் டீ ஃபேக்டரி என்று பெயருடன் நயன்தாரா பீங்கான் கோப்பையில் ஸ்டைலாக டீ பருகும் ஸ்டிக்கர் ஒட்டின டெலிவரி வேன், கடை வாசலில் வந்து நின்று ஹார்ன் அடித்தது.

விடைபெற்று கைப்பையைத் தலைக்கு மேல் பிடித்தபடி கொஞ்சமாய் ஓடி வந்து முன்புறம் ஏறிக்கொண்டு, “போலாம் முத்து” என்றாள் அஞ்சலி.

டிரைவர் முத்து ஸ்வெட்டரும், காதுகளைப் பதுக்கிக் குரங்கு குல்லாயும் போட்டிருந்தான்.

அவன் கண்களில் இருந்த சோகம் கவனித்து, “என்ன முத்து டல்லாருக்கே?” என்றாள்.

“போன வார மழையில பாறை உருண்டு விழுந்து தங்கச்சி வீடு போயிடுச்சிம்மா. குழந்தைங்களோட பள்ளிக்கூடத்துல உக்காந்திருக்கா. அஞ்சாயிரம் வேணுமாம். ஏற்கெனவே ஆபீஸ்ல எக்கச்சக்கமா அட்வான்ஸ் வாங்கிருக்கேன். மறுபடி கேட்டா வீட்டுக்குப் போடான்னுடுவாங்க. புரிஞ்சிக்க மாட்டேன்றா.''

“மச்சான் எஸ்டேட்ல சூபர்வைசரா வேலை பாக்கறதா சொன்னியே… அவரால ஏற்பாடு செய்ய முடியலையா?”

“அது ஒரு கழிசடைம்மா. வீடு இடிஞ்சி கெடக்குது. கொஞ்சம்கூட கவலையே இல்லாம குழந்தை கொலுசைக் கழட்டிட்டுப் போயிக் குடிச்சிட்டு வர்றான். சீக்கிரம் செத்துத் தொலைச்சா பரவால்லைன்னு வேண்டிட்டிருக்கேன்.''

“எங்கிட்டயும் இப்ப அஞ்சாயிரம் இருக்காது முத்து. என் கணக்குல வேணும்னா அட்வான்ஸ் போட்டு வாங்கித் தரட்டா?”
“அய்யோ! வேணாம்மா. ஆபீசரு வந்து கணக்கெடுத்துக்கிட்டு ரேஷன் கார்டு குறிச்சிட்டுப் போயிருக்காரு. கார்டுக்கு இருபதாயிரம்னு சொல்றாங்க. நடுவுல எல்லாரும் ஆளுக்குக் கொஞ்சம் புடுங்குனது போக பத்தாயிரமாவது கிடைக்கும்.''

அடுக்கடுக்கான தேயிலைத் தோட்டத்திற்கு நடுவில் ஊடுருவி ஓடிய பாதையின் கடைசியில், அழகாக அமைந்திருந்த கிளாசிக் டீஃபேக்டரி வாசலில் வேன் நின்றதும் இறங்கினாள்.

அலுவலக வாசலில் பரணியின் ஸ்கூல் நண்பன் சார்லஸும், அவன் அம்மாவும் நின்றிருந்தார்கள். சார்லஸ் நெற்றியில் போடப்பட்டிருந்த வெள்ளை பேண்டேஜையும் மீறி ரத்தம் தெரிந்தது.

“வாம்மா மகாராணி. என்ன காரியம் பண்ணி வச்சிருக்கான் பாரு உன் புள்ளை! ஏழு தையல் போட்ருக்கு! புள்ளையைப் பெத்திருக்கியா? பிசாசைப் பெத்திருக்கியா?”

“பரணி எங்க?'' என்றாள் அஞ்சலி உச்சமான ஆத்திரத்துடன்.

(தொடரும்)

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE