பேசும் படம் - 43: சிக்ஸர் சிங்காய் மாறிய யுவராஜ் சிங்!

By பி.எம்.சுதிர்

இந்திய கிரிக்கெட் ரசிகர்களால் மறக்க முடியாத சாதனைகளில் ஒன்று ஒரே ஓவரில் யுவராஜ் சிங் அடித்த 6 சிக்ஸர்கள். 2007-ம் ஆண்டு செப்டம்பர் 19-ம் தேதி நடந்த டி20 உலகக் கோப்பை போட்டியில்தான் இந்த அசுர சாதனையை நிகழ்த்தினார் யுவராஜ் சிங்.
இங்கிலாந்து பந்துவீச்சாளரான ஸ்டூவர்ட் பிராட் வீசிய 6 பந்துகளையும் யுவராஜ் சிங் சிக்ஸர்களாக பறக்கவிட்ட தருணத்தைப் பற்றி இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் இன்றும் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். அந்த 6 சிக்ஸர்களில் யுவராஜ் சிங் அடித்த நான்காவது சிக்ஸரைத்தான் இங்குள்ள படத்தில் பார்க்கிறீர்கள். இந்தப் படத்தை எடுத்தவர் ஜிம்பாப்வே நாட்டைச் சேர்ந்த புகைப்படக்காரரான அலெக்ஸாண்டர் ஜோ (ALEXANDER JOE).

2007-ம் ஆண்டின் தொடக்கம் இந்திய கிரிக்கெட்டுக்கு அப்படி ஒன்றும் சிறப்பானதாக அமையவில்லை. இந்திய அணியின் பயிற்சி
யாளராக அப்போது இருந்த கிரேக் சேப்பலுக்கும் முன்னணி கிரிக்கெட் வீரர்களுக்கும் இடையே மோதல் போக்கு இருந்த காலம் அது. அதுமட்டுமல்ல, அணிக்கு உள்ளேயே சில சச்சரவுகள் அந்தக் காலத்தில் இருந்ததாக கூறப்பட்டது. அதனால்தானோ என்னவோ, 2007-ம் ஆண்டில் நடந்த உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி மோசமாகத் தடுமாறியது.

சச்சின் டெண்டுல்கர், கங்குலி, சேவக், ராகுல் திராவிட், யுவராஜ் சிங், தோனி என்று பேட்டிங் ஜாம்பவான்கள் பலர் அணியில் இருந்தும், வங்கதேசம், இலங்கை ஆகிய அணிகளிடம் தோற்று முதல் சுற்றிலேயே வெளியேறியது இந்தியா. 

இந்தத் தோல்வியின் காரணமாக சில ரசிகர்கள், இனி கிரிக்கெட்டைப் பற்றியே பேசக்கூடாது என்று முடிவெடுத்தனர். முன்னணி வீரர்களின் வீடுகள் தாக்கப்பட்டன.

உலகக் கோப்பையில் பெற்ற படுதோல்வியைத் தொடர்ந்து இந்திய அணிக்கு புத்துயிர் ஊட்டும் முயற்சியில் தேர்வுக்குழு ஈடுபட்டது. இந்தச் சமயத்தில்தான் 2007 செப்டம்பர் மாதத்தில் தென் ஆப்பிரிக்காவில் முதலாவது டி 20 உலகக் கோப்பை போட்டி நடைபெற்றது. ஒரு மாற்றத்துக்காக சச்சின், கங்குலி, திராவிட் ஆகிய பெரிய நடசத்திரங்கள் இல்லாத, புதிய வீரர்களைக் கொண்ட அணி இதற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டது. அந்த அணியின் கேப்டனாக மகேந்திர சிங் தோனி நியமிக்கப்பட்டார்.

அணியில் அப்போது மூத்தவராக இருந்த யுவராஜ் சிங்கை கேப்டன் ஆக்காமல், அவருக்கு பதிலாக தோனியை கேப்டன் ஆக்கியது சர்ச்சையை ஏற்படுத்தியது. தனது மகனுக்கு அவமரியாதை செய்யப்பட்டதாக யுவராஜ் சிங்கின் தந்தை புகார் கூறினார். இதனால் டி20 உலகக் கோப்பையில் தோனியின் தலைமையின்கீழ் யுவராஜ் சிங் சிறப்பாக ஆடுவாரா, அல்லது வேண்டுமென்றே சொதப்புவாரா என்ற கேள்விக்குறி இருந்தது.

ஆனால், கேப்டன் பதவியைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல், இந்தத் தொடரில் அணிக்காக உயிரைக் கொடுத்து ஆடினார் யுவராஜ் சிங். அவரது பேட்டிங்கும் பந்துவீச்சும் இந்தத் தொடரில் தோனிக்கும், இந்திய அணிக்கும் மிகப்பெரிய பலமாக அமைந்
தது. ஒவ்வொரு போட்டியிலும் எதிரணியினரைக் கதறடித்தார் யுவராஜ் சிங். அதில் உச்சகட்டம்தான் இந்த சிக்சர் சாதனை.
இங்கிலாந்து அணிக்கு எதிராக செப்டம்பர் 19-ம் தேதி நடந்த இப்போட்டி இந்திய அணியைப் பொறுத்தவரை மிகவும் முக்கியமானதாக இருந்தது. உலகக் கோப்பை போட்டியின் அரை இறுதிச் சுற்றுக்குள் நுழைய வேண்டுமானால் இங்கிலாந்தை வென்றாக வேண்டும் என்ற நிலையில் இருந்த இந்திய அணி, இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்தது. முதல் 18 ஓவர்கள் வரை இரண்டு பக்கமும் சாயாமல் சமமாகத்தான் சென்றுகொண்டிருந்தது போட்டி. 18-வது ஓவரின் இறுதியில் இந்திய அணி 3 விக்கெட் இழப்புக்கு 159 ரன்களை எடுத்திருந்தது.

இந்த நேரத்தில்தான் விஸ்வரூபம் எடுத்தார் யுவராஜ் சிங். ஸ்டூவர்ட் பிராட் வீசிய 19-வது ஓவரில் ஒன்றன் பின் ஒன்றாக அடுத்தடுத்து 6 சிக்ஸர்களைப் பறக்கவிட்டார் யுவராஜ் சிங். 

இதில் அவர் 4-வது சிக்ஸரைப் பறக்கவிட்டபோது இந்தப் படத்தை எடுத்துள்ளார் அலெக்ஸாண்டர் ஜோ.

இப்போட்டியில் அடித்த 6 சிக்ஸர்கள் மூலம் சர்வதேச டி20 போட்டிகளில் முதல் முறையாக ஒரே ஓவரில் 6 சிக்ஸர்களை அடித்த வீரர் என்ற சாதனையை யுவராஜ் சிங் படைத்தார். மேலும், அனைத்து விதமான சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலும் இந்தச் சாதனையைப் படைத்த 2-வது வீரர் என்ற பெயரையும் பெற்றார். யுவராஜ் சிங்குக்கு முன்னதாக, தென் ஆப்பிரிக்க வீரரான ஹெர்ஷெல் கிப்ஸ், நெதர்லாந்து அணிக்கு எதிரான போட்டியில் இந்தச் சாதனையைப் படைத்திருந்தார். இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் தொடர்ந்து 6 சிக்ஸர்களை அடித்ததுடன் நில்லாமல் 12 பந்துகளில் அரைசதம் அடித்தும் யுவராஜ் சிங் சாதனை படைத்தார். சர்வதேச அளவில் இன்றுவரை இந்தச் சாதனையை யாரும் முறியடிக்கவில்லை.

இப்போட்டியில் யுவராஜ் அடித்த சிக்ஸர்கள், இந்திய வீரர்களிடையே புத்துணர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த உத்வேகத்தால் அடுத்தடுத்த போட்டிகளில் வென்ற இந்திய அணி, 2007-ம் ஆண்டில் நடந்த முதலாவது டி20 உலகக் கோப்பையையும் கைப்பற்றியது. முழுமனதுடன் தோனிக்கு தோள் கொடுப்பாரா என்று சந்தேகக் கண்களால் பார்க்கப்பட்ட யுவராஜ் சிங், இந்தத் தொடரின் அனைத்து போட்டிகளிலும் சிறப்பாக செயல்பட்டு இந்தியாவின் வெற்றிக்கு காரணமாக விளங்கினார்.

அலெக்ஸாண்டர் ஜோ

ஜிம்பாப்வே நாட்டில் பிறந்த அலெக்ஸாண்டர் ஜோ, தனது 19-வது வயது முதல் புகைப்படங்களை எடுத்து வருகிறார். இங்கிலாந்தைச் சேர்ந்த பேஷன் புகைப்படக்காரரான டேவிட் பெய்லியால் ஈர்க்கப்பட்டு இவர் இத்துறைக்கு வந்தார். முதலில் ஜிம்பாப்வே நாட்டில் பணியாற்றிய இவர், பின்னர் லண்டனுக்கு வந்து பல்வேறு செய்தி நிறுவனங்களுக்குப் படங்களை எடுத்துக் கொடுத்தார். இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, கென்யா, பிரான்ஸ், மாலி உள்ளிட்ட 13 நாடுகளில் இவர் புகைப்படக்காரராகப் பணியாற்றி உள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE