லதா ரகுநாதன்
lrassociates@gmail.com
மாதத்திற்கு ஒரு முறை குளிர்சாதனப் பெட்டியைச் சுத்தம் செய்பவர்கள் எதிர்கொள்ளும் குழப்பங்களுக்கு அளவே இருக்காது. “சாயங்காலம் வச்ச சாம்பார் நாளைக்கு வரைக்கும் தாங்குமா?”, “க்ரீம் கேக்கை ஃப்ரீஸரில் வச்சது யாருப்பா?” என்று கேள்விகளால் வேள்வி செய்து கொண்டிருப்பார்கள். வர்ஜா வர்ஜ்யம் இல்லாமல் வகை வகையான உணவுப் பொருட்களைக் குளிர்சாதனப் பெட்டிக்குள் குவிப்பது என்பது கிட்டத்தட்ட நமது பாரம்பரியப் பழக்கமாகிவிட்டது.
மேற்கத்திய நாடுகளில் பருவநிலை பெரும்பாலும் குளிராக இருப்பதால், உணவு வெளியே வைக்கப்பட்டால்கூட கெட்டுப்போவதில்லை. எனவே, குளிர்சாதனப் பெட்டியில் நீண்ட நாட்கள் இருப்பது அங்கே பெரிய பிரச்சினை இல்லை.
நம்மூரில் அப்படியா? தினமும் சமைக்கிறோம். மிச்ச மீதிகளைப் பாத்திரத்தில் மூடி குளிர்சாதனப் பெட்டிக்குள் தள்ளிவிடுகிறோம். மறுநாள் அதை எடுத்து உண்ணவும் பெரும்பாலும் மறந்துவிடுகிறோம். ஆக, எங்கே பூஞ்சைகள் வளராது என்று நம்பி வைக்கிறோமோ, அங்கேயும் அவை செழித்து வளர வழிவகுத்துவிடுகிறோம்.
குளிர் பிரதேசங்களைப் போல் நாமும் உணவு வகைகளை, குளிர்சாதனப் பெட்டிக்கு வெளியே வைக்க முடியுமா? முடியும் என்கிறது ஸ்மார்ட்டர் வேர் (Smarter Ware) கொள்கலன். ஓவி (Ovie) நிறுவனத்தின் தயாரிப்பு இது.