வில்லங்க இடமும் விஎச்பி திட்டமும்!
அயோத்தியில் சர்ச்சைக்குரிய நிலம் யாருக்குச் சொந்தம் என்பது தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு இன்னும் ஓரிரு மாதங்களில் வெளியாகலாம் என்கிறார்கள். தீர்ப்பு தங்களுக்கே சாதகமாக வரும் என இத்துத்துவ அமைப்புகள் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றன. அதேசமயம், தீர்ப்பு வெளியானதுமே அந்த இடத்தில் ராமர் கோயிலைக் கட்டிமுடிக்க விஷ்வ இந்து பரிஷத் இப்போதே திட்டமிட்டு வருகிறது. இதற்காக ‘தர்ம ரக்ஷா சேனா’ என்ற அமைப்பைத் தயார்படுத்தி இருக்கிறார்கள். இந்த அமைப்பானது அயோத்தியின் கரசேவகபுரத்தில் தயாராகி வரும் தூண்களை அங்கிருந்து எடுத்துச் சென்று அசுரகதியில் கோயிலைக் கட்டிமுடிக்கத் திட்டமிட்டிருக்கிறதாம். ஒருவேளை, முஸ்லிம்கள் தரப்பில் சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டால் மீண்டும் ராமருக்கு கோயில் கட்டுவது தடைபடும் என்பதால் இந்த அவசரம் என்கிறார்கள்.
திருச்சி போலீஸ் vs திருவாரூர் போலீஸ்
திருச்சி லலிதா ஜூவல்லரி கொள்ளை வழக்கில் திருச்சி போலீஸுக்கும் திருவாரூர் போலீஸுக்கும் ஈகோ யுத்தம் உச்சத்தில் நிற்கிறது. கொள்ளையர்களைக் கண்டுபிடிக்க திருச்சி போலீஸார் அமைத்த ஆறேழு தனிப்படைகளில் எதுவுமே கொள்ளையர்
களை நெருங்கவில்லை. ஆனால், திருவாரூரில் ஒரு ஆய்வாளரும் ஏட்டய்யாவும் கொள்ளையர்களில் ஒருவனை வாகனச் சோதனையில் மடக்கிப் பிடித்துவிட்டார்கள். இதற்காக அவர்களைப் பாராட்டி ரிவார்டு அளிக்கும்படி டிஜிபி உத்தரவிட, அதன்படியே செய்தார் திருச்சி மத்திய மண்டல ஐஜியான வரதராஜு. இதில் தான் திருச்சி போலீஸுக்கு ஈகோ. “வழக்கின் விசாரணை அதிகாரிகள் திருச்சியில் இருக்கும் போது அவர்களுக்கே தெரியாமல் திருவாரூர் போலீஸுக்கு இவ்வளவு அவசரமாக ரிவார்டு கொடுத்தது ஏன்?” என்று சூடாகும் திருச்சி போலீஸ், “கொள்ளையர்கள் பற்றிய விவரங்களை திருவாரூர் போலீஸார் வெளிப்படையாகச் சொன்னதால் தான் அவர்களை எங்களால் இப்போது நெருங்கமுடியவில்லை” என்று வண்டியைத் திருப்புகிறதாம். இதனால், “கொள்ளையனை பிடிச்சுக் குடுத்தது குத்தமாய்யா..?” என்று வெந்து நொந்து நிற்கிறது திருவாரூர் போலீஸ்!