என்.சுவாமிநாதன்
swaminathan.n@kamadenu.in
டீக்கடைகள் என்றாலே அரசியல் புகுந்து விளையாடும். ‘இங்கு அரசியல் பேசக் கூடாது’ என்று போர்டு வைக்கும் அளவுக்கு டீக்கடை விவாதங்கள் போர்க்களமாக மாறிய சம்பவங்கள் உண்டு. இந்தச் சூழலில், நகைச்சுவையான விஷயங்களைப் பேசுவதற்காகவே டீக்கடை நடத்திவருகிறார் ஜெயசிங். நாகர்கோவில் தளவாய்புரத்தில் இருக்கும் இந்த டீக்கடையின் பெயரே ‘சங்கி மங்கி சிரிப்பு டீக்கடை’ என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.
இந்த டீக்கடைக்கு பாக்கெட் நிறைய பிரச்சினைகளு டன் வருபவர்கள்கூட டீயுடன் ஜோக்ஸைச் சுவைத்துவிட்டு, கலகலப்பான மனநிலையுடன் வெளியே வருகிறார்கள்.
கடைக்குள் நுழைந்து, டீ ஆர்டர் செய்தால், “ஒட்டகப் பால்ல போடவா... புலிப் பால்ல போடவா?” என்று எடுத்த எடுப்பிலேயே கலாய்க்கிறார் ஜெயசிங். “சரி, புலிப் பால்ல போடுங்க” என்று நானும் பதிலுக்குக் கலாய்க்க, “கொஞ்சம் வெயிட் பண்ணுங்க பாஸ். கடைக்குப் போய் புலி பொம்மை வாங்கிட்டுவந்து பால்ல அந்தப் புலியை முக்கி டீ போட்டுத் தர்றேன்”எனச் சொல்லிவிட்டு சிரிக்கிறார். “உங்க இஷ்டம். அப்படியே செய்ங்க” என்று நாம் விடாமல் சொல்ல, “காசு இருக்குல்ல… ஏன்னா கடன் மற்ற கடைகள்ல அன்பைத்தான் முறிக்கும். நம்ம கடையில எலும்பையே முறிக்கும்” என்று கேட்டுவிட்டு டீ ஆற்றத் தொடங்குகிறார்.