தமிழகப் பள்ளிகளில் புதிய பாடநூல்கள் அறிமுகப்படுத்தப்பட்டு இரண்டு வருடங்களாகியிருக்கும் நிலையில், அவற்றைக் கொண்டு மாணவர்களுக்குக் கற்பித்தலில் இருக்கும் பிரச்சினைகள் தொடர்பான குரல்கள் எழுந்திருக்கின்றன.
ஏற்கெனவே, கற்பித்தலையும் தாண்டி பல்வேறு பணிகளின் சுமையை எதிர்கொண்டிருக்கும் ஆசிரியர்கள், புதிய பாடநூல்களின் அடிப்படையில் பாடம் நடத்துவதில் பல நடைமுறைச் சிக்கல்களை எதிர்கொள்வதாகப் புலம்பிக்கொண்டிருக்கிறார்கள்.
வெறும் தகவல் களஞ்சியங்களாக மட்டுமே புதிய பாடநூல்கள் உருவாக்கப்பட்டிருக்கின்றன. பாடநூல் தயாரிப்புக் குழுவில் இருந்த ஆசிரியர்கள், தங்களது பாடப் பொருள் அறிவையெல்லாம் காட்டி போட்டி போட்டுக்கொண்டு அவற்றை உருவாக்கியிருக்கிறார்கள். ஆனால்,அவற்றைக் குழந்தைகள் எப்படி எதிர்கொள்வார்கள் என்பதில் அவர்கள் அதிக அக்கறைகாட்டவில்லை என்பதுதான் துரதிருஷ்டம்.
அழுத்தம் தரும் பாடங்கள்
கிட்டத்தட்ட அனைத்து வகுப்புகளுக்குமான பாடநூல்களிலும் சிக்கல்கள் இருக்கின்றன என்கிறார்கள். உதாரணமாக, பத்தாம் வகுப்பு கணக்குப் புத்தகத்தில் அளவு கடந்த எண்ணிக்கையில் கணக்குகள் உள்ளன. அவற்றை முழுமையாகக் கற்பிக்க போதிய அவகாசம் இல்லை. புதிய கணிதப் பாடநூல்களில் விகிதமுறு எண்கள், பின்ன எண்கள், தலைகீழி போன்றவை குழப்பமூட்டும் வகையில் குறிப்பிடப்பட்டிருக்கின்றன. இது தொடர்பாக எழும் சந்தேகங்களைத் தீர்ப்பதற்கான பயிற்சிகளும் குறித்த காலத்தில் தரப்படுவதில்லை. அப்படி நடக்கும் பயிற்சிகளும் போதிய பலன் தருவதில்லை என்கிறார்கள்.