தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் மிக வேகமாகப் பரவிவரும் நிலையில், அரசு மருத்துவர்கள் மீண்டும் வேலைநிறுத்தப் போராட்டம் அறிவித்திருப்பது மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது. டெங்கு சிகிச்சைக்கு மருத்துவர்களின் தேவை மிக அவசியம் எனும் சூழல் நிலவும்போது, அரசு மருத்துவர்கள் போராட்டத்தில் இறங்குவது விரும்பத்தகாத விளைவுகளுக்கு இட்டுச்செல்லும்.
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, கடந்த மாதம் வேலைநிறுத்தப் போராட்டம் நடத்திய அரசு மருத்துவர்கள், அரசு கொடுத்த உறுதிமொழியின் பேரில் அதைக் கைவிட்டனர். அரசு கொடுத்த 6 வார கால அவகாசம் முடிவடையும் தறுவாயில், அது தொடர்பான நடவடிக்கைகள் குறித்த எந்த அறிகுறியும் இல்லாததால்தான் போராட்டத்தை மீண்டும் கையில் எடுத்திருக்கிறார்கள்.
அரசு மருத்துவர்களுக்குப் பதவி உயர்வு, நோயாளிகளின் எண்ணிக்கைக்கேற்ப மருத்துவர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பது, ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர்களுக்குப் பட்ட மேற்படிப்பில் 50 சதவீத இடஒதுக்கீடு, உள்ளிட்ட கோரிக்கைகளை மாநில அரசே நிறைவேற்றிவிட முடியும். அதற்கான கால அவகாசம் அதிகம் என்று அரசு கருதினால், அதை மருத்துவர்களிடம் எடுத்துச் சொல்லியிருக்க வேண்டும். போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டிய சூழலில், இப்படி ஒரு நிலை உருவாவதை அரசு எப்படிக் கவனிக்கத் தவறியது எனும் கேள்வி எழுகிறது.
தமிழகத்தில் சுமார் 2,500-க்கும் மேற்பட்டோர் டெங்கு காய்ச்சலுக்காகச் சிகிச்சை பெற்றுவருகிறார்கள். சென்னை உள்பட பல மாவட்டங்களில் டெங்கு பரவிவருவதாக செய்திகள் வெளியாகின்றன. இந்நிலையில், அரசும் மருத்துவர்களும் தங்கள் தரப்பு நியாயங்களை மட்டும் பேசிக்கொண்டிருக்காமல் மக்களின் உயிர் காக்கும் நடவடிக்கைகளில் முழுமூச்சாக இறங்க வேண்டும்.
இக்கட்டான சூழலில், மக்களைக் கைவிடுவதற்கு எந்தக் காரணத்துக்கும் நியாயம் இருக்காது என்பதை இரு தரப்பும் உணர வேண்டும்.