பேசும் படம் - 41: காவலிருக்கும் கார்களின் காதலர்!

By பி.எம்.சுதிர்

மனிதர்களின் வாழ்க்கையில் போர் எந்த அளவுக்கு பாதிப்புகளை ஏற்படுத்தும் என்பதை வெளிப்படுத்தும் படத்தைத்தான் நீங்கள் இங்கே பார்க்கிறீர்கள். `அலெப்போ மேன்’ என்ற பெயரில் உலகெங்கிலும் பிரபலமான இந்தப் படத்தை எடுத்தவர் ஜோசப் ஈத்.

மத்திய கிழக்கு மற்றும் வடக்கு ஆப்பிரிக்க நாடுகளில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக ஆட்சி நடத்திவந்த தலைவர்களுக்கு எதிராக 2010-ம் ஆண்டில் மக்கள் கிளர்ந்து எழுந்தார்கள். வடக்கு ஆப்பிரிக்க நாடான துனீஷியாவில் தொடங்கிய இந்தப் புரட்சி, எகிப்து, லிபியா எனப் பல்வேறு நாடுகளுக்கும் பரவி அந்நாடுகளின் ஆட்சியாளர்களைப் பந்தாடியது.

இந்தப் புரட்சிகளின் தாக்கம் 2011-ல், சிரியாவுக்கும் பரவியது. அந்நாட்டின் அதிபரான பஷார் அல் அசாத்துக்கு எதிராக ஏற்கெனவே கோபம் கொண்டிருந்த மக்கள், புரட்சியில் ஈடுபட்ட மற்ற நாடுகளைப் போல் தங்கள் நாட்டின் அரசையும் தூக்கியெறிய விரும்பினர். முதல் கட்டமாக பொடெர்ரா நகரின் தெற்குப் பகுதியில் 2011 மார்ச் மாதத்தில் அரசுக்கு எதிராக ஒரு கண்டனப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தப் போராட்டத்தைக் கண்டுகொள்ளாமல் விட்டால், தனது பதவி ஆட்டம் கண்டுவிடும் என்று பயந்த அதிபர் பஷார், ராணுவத்தைப் பயன்படுத்தி, போராட்டக்காரர்களை அடக்க முயன்றார். அதிபரின் இந்தச் செயலால் அவருக்கு எதிர்ப்பு வலுத்தது. அதிபருக்கு எதிரான போராட்டமானது நாடு முழுவதும் பரவியது. ஆரம்பத்தில் சாத்வீகமான முறையில் தொடங்கிய இந்தப் போராட்டம் கொஞ்சம் கொஞ்சமாக ஆயுதப் போராட்டமாக உருவெடுத்தது.

அதிபர் அசாத்துக்கு ஆதரவாக சீனா, ஈரான் மற்றும் ரஷ்ய அரசுகள் இருக்க, அவருக்கு எதிரான கிளர்ச்சிப் படையினருக்கு ஆதரவாக துருக்கி உள்ளிட்ட சில நாடுகளும், தீவிரவாத அமைப்புகளும் உள்ளன. இப்படி இரு பிரிவினருக்கும் சம அளவில் ஆதரவு இருப்பதால் கடந்த 8 ஆண்டுகளாக உள்நாட்டுப் போரால் சின்னாபின்னமாகிக் கிடக்கிறது சிரியா.

உள்நாட்டுப் போர், பலரை அகதிகளாக்கி துரத்த, ஒருசிலர் மட்டும் விடாப்பிடியாக தங்கள் சொந்த மண்ணிலேயே உயிர்விட வேண்டும் என்ற வைராக்கியத்துடன் இருக்கிறார்கள். அப்படிப்பட்ட வைராக்கிய மனிதர்களில் ஒருவரான முகமது மொய்தீன் அனிஸைத்தான் இங்கே படம்பிடித்திருக்கிறார் ஜோசப் ஈத்.

சிரிய நகரங்களில் ஒன்றான அலெப்போவில், போரின் தாக்கத்தால் முற்றிலும் சிதைக்கப்பட்ட ஒரு வீட்டின் படுக்கையறையில், பாதி நாசமான நிலையில் இருக்கும் தனது படுக்கையில் அமர்ந்து பைப்பில் புகை பிடித்துக்கொண்டே, கிராமபோனில் பாடல்களைக் கேட்டுக்கொண்டிருக்கிறார் 70 வயது முதியவரான மொய்தீன் அனிஸ். இவரது இந்தப் படம், ‘அலெப்போ மேன்’ (Aleppo man) என்ற தலைப்பில் சர்வதேச பத்திரிகைகளில் வெளியாகி கோடிக்கணக்கான மக்களின் கவனத்தை ஈர்த்தது. சமூக வலைதளங்களிலும் இப்படம் அதிகமாக பகிரப்பட்டுள்ளது.

அபு ஓமர் என்று அழைக்கப்படும் மொய்தீன் அனிஸ், 1970-ல், ஸ்பெயின் நாட்டில் உள்ள சரகோசா என்ற நகருக்குச் சென்று மருத்துவம் படித்தவர். சிறு வயதில் இருந்தே கார்களின் மீது மோகம் கொண்டதால், ஃபியட் கார் தொடர்பான மேனுவலை இத்தாலிய மொழியில் இருந்து அரேபிய மொழியில் மொழிபெயர்க்கும் வேலையையும் செய்தார். இந்தக் காலகட்டத்தில் பழங்கால கார்கள் சிலவற்றையும் அவர் வாங்கினார்.

பின்னாளில் அலெப்போ நகருக்குத் திரும்பியவர், ‘மிலா ராபின்சன்’ என்ற பெயரில் நறுமணப் பொருட்களைத் தயாரிக்கும் நிறுவனத்தைத் தொடங்கினார். கார்களையும் தொடர்ந்து நேசித்துவந்த இவர், முப்பதுக்கும் மேற்பட்ட பழைய கார்களை வீட்டில் சேகரித்து வைத்தார். பிற்காலத்தில் அலெப்போ நகரில் தீவிரமான உள்நாட்டு போர் நடந்தபோதிலும், தனது வீட்டையும், உயிருக்கு உயிராய் மதிக்கும் கார்களையும் விட மனமில்லாமல் அங்கேயே தங்கியிருக்கிறார்.

இவரைப் படமெடுத்ததைப் பற்றி கூறும் ஜோசப் ஈத், “என் நண்பர் ஒருவர் மூலமாக அனிஸைப் பற்றிக் கேள்விப்பட்டு அவரைச் சந்திக்க சென்றேன். உள்நாட்டுப் போர் காரணமாக மனிதர்கள் வாழ்வதற்கே தகுதியற்ற நிலையில் இருந்த அந்த வீட்டில், இருக்கும் சவுகரியங்களை வைத்து தனது கார்களுடன் வாழ்ந்து வந்தார் அனிஸ். குண்டுவீச்சுகளால் சேதமடைந்து, எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழலாம் என்ற நிலையில் அவரது வீடு இருந்தது. கற்குவியலுக்கு நடுவில் இருந்த படுக்கையில் அமர்ந்து புகை பிடித்துக்கொண்டு கிராமபோனில் இசையை ரசித்துக்கொண்டிருந்தார் அனிஸ்.

கார்களுடனான அவரது காதலைப் பற்றிக் கேட்டபோது விழிகள் விரிய அவற்றைப் பற்றி சொல்லத் தொடங்கினார். ‘நான் கார்களை மிகவும் நேசிக்கிறேன். அவை பெண்களைப் போன்று அழகாகவும், உறுதியாகவும் இருக்கும் என்பதே அதற்குக் காரணம்’ என்று சொன்ன அனிஸ், தனக்கு பிரியமான பத்துக்கும் மேற்பட்ட கார்கள் குண்டுவீச்சில் சேதமடைந்ததைப் பற்றிக் கூறும்போது கண்கலங்கிவிட்டார்.

வீட்டுக்கு வெளியில் பாதி நொறுங்கிப்போய் இருந்த ஒரு காரைக் காண்பித்த அவர், ‘இந்தக் காரைப் பாருங்கள். குண்டுவீச்சால் இவள் காயமடைந்து இருக்கிறாள். உதவிகேட்டு இவள் அழைப்பதை என்னால் கேட்க முடிகிறது. ஆனால், இவளுக்கு உதவ முடியாத நிலையில் இருக்கிறேன்’ என்கிறார்.

அவரது கார்களுக்கு ஏற்பட்ட நிலையைப் பற்றி கேள்விப்பட்டு பல வெளிநாட்டவர்களும் அவற்றைப் பராமரிக்க முன்வந்துள்ளனர். ஆனால், அவற்றைத் தன் மகன்களுக்கும், மகளுக்கும் மட்டுமே உரிய சொத்தாக விட்டுச்செல்ல விரும்புவதாகக் கூறும் அனிஸ், மற்றவர்களை நம்பி அந்தக் கார்களை ஒப்படைக்க மறுக்கிறார். இப்போதைக்கு கஷ்டப்பட்டாலும், வெகு விரைவில் எல்லாம் சரியாகிவிடும் என்ற நம்பிக்கை அவரது முகத்தில் தெரிந்தது. அவர் நினைத்தபடி எல்லாம் நல்லபடியாக முடியட்டும் என்று வாழ்த்திவிட்டு வந்தேன். அவரைப்போன்ற மனிதர்களுக்காகவாவது சிரியாவில் உள்நாட்டுப் போர் நிற்க வேண்டும்” என்கிறார்.

ஜோசப் ஈத் (Joseph Eid)

லெபனானை அடிப்படையாக கொண்டு இயங்கும் புகைப்படக் காரரான ஜோசப் ஈத், பொலிடிக்கல் சயின்ஸ் பாடத்தில் பட்டம் பெற்றவர். பின்னாளில் ஏஎஃப்பி நிறுவனத்தில் புகைப்படக்காரராக பணியில் சேர்ந்த இவர், வளைகுடா நாடுகள் முழுவதும் சுற்றி அப்பகுதி மக்களின் பல்வேறு பிரச்சினைகளை தன் கேமராவில் படம்பிடித்து வருகிறார். தற்போது லெபனானில் தங்கியிருக்கும் இவர், புகைப்படங்களை எடுப்பதுடன் பத்திரிகைகளுக்கு செய்திக் கட்டுரைகளையும் எழுதி வருகிறார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE