நம்பிக்கையூட்டும் நல்லதொரு நகர்வு!

By காமதேனு

நதிநீர் பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தைக்காக கேரள முதல்வர் பினராயி விஜயனைச் சந்தித்திருப்பதன் மூலம் புதிய நம்பிக்கையை விதைத்திருக்கிறார் தமிழக முதல்வர் பழனிசாமி.

தமிழக முதல்வரின் தரப்பிலிருந்து முன்னெடுக்கப்பட்ட இந்த முயற்சிக்குக் கேரள முதல்வரும் ஒத்துழைப்பு தந்திருப்பது மகிழ்ச்சி தருகிறது. 15 ஆண்டுகளுக்குப் பிறகு திருவனந்தபுரத்தில் நிகழ்ந்திருக்கும் இந்தச் சந்திப்பில், பரம்பிக்குளம் – ஆழியாறு திட்ட ஒப்பந்த மறுஆய்வு, பாண்டியாறு – புன்னம்புழா திட்டம், செண்பகவல்லி, அய்யாறு தொடர்பான பிரச்சினைகள் எனப் பல்வேறு விஷயங்கள் பற்றி பேச்சுவார்த்தை நடத்தப்பட்டிருக்கிறது.

இதில் மிக முக்கியமாக, இரு மாநிலங்களுக்கு இடையிலான முக்கியப் பிரச்சினையாக இருந்துவரும் முல்லைப் பெரியாறு விவகாரம் தொடர்பாகப் பேச்சுவார்த்தை நடத்துவது என்ற முடிவுக்கு நகர்ந்திருப்பது வரவேற்கத்தக்கது. முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 136 அடியில் இருந்து 142 அடி வரை உயர்த்திக்கொள்ளலாம் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. ஆனால், அந்த அணை பலவீனமாக இருப்பதாகச் சொல்லி, தொடர்ந்து அதற்கு முட்டுக்கட்டை போட்டுவருகிறது கேரளம். சமீபத்திய, கேரள மழை வெள்ளத்தின்போது இந்த எதிர்ப்புக் குரல்கள் உச்சத்தில் இருந்தன. அந்த அணைக்குக் கீழே புதிய அணை கட்டும் முயற்சியிலும் கேரளம் இறங்கியிருக்கிறது.

இப்படியான சூழ்நிலையில், நீதிமன்ற நடவடிக்கைகளைச் சார்ந்திருப்பதைத் தாண்டி, ராஜதந்திர ரீதியிலும் தமிழகம் செயல்படுவது அவசியம். அதைச் சரியாகச் செய்திருக்கிறார் முதல்வர் பழனிசாமி. இதன் மூலம், இரு மாநில மக்களுக்கும் பாகுபாடின்றி நதிநீரைப் பங்கீடு செய்வதற்கு முயற்சி எடுத்திருக்கிறார். அதேசமயம், இம்முயற்சி வெற்றியடைய தொடர் பேச்சுவார்த்தைகள் அவசியம். கேரளம் மட்டுமல்லாமல், தண்ணீர் தாவாக்கள் தொடர்பாக மற்ற மாநிலங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தவும் இது நல்ல தொடக்கமாக இருக்கட்டும்!

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE