மஹா பெரியவா 30: அருளே ஆனந்தம்

By காமதேனு

பி. சுவாமிநாதன்
swami1964@gmail.com

அவரவருக்கு உண்டான காரியங்களை அவரவர்களே செய்து கொள்ள வேண்டும். நமது முன்னோர்கள் நமக்குச் சொல்லிச் சென்ற நல்ல பழக்கம் இது. சொன்னதோடு அவர்கள் நிறுத்திவிடவில்லை. சொன்ன வாசகத்துக்கு ஏற்ப அடுத்தடுத்த தலைமுறைக்கு ஒரு முன்னுதாரணமாகவும் விளங்கிச் சென்றிருக்கிறார்கள்.

தற்போதைய தலைமுறைக்கு நன்றாகவே நினைவிருக்கும்... நமது அப்பா, அம்மா, தாத்தா, பாட்டி போன்றோர் தங்களது தனிப்பட்ட தேவைகளுக்கு நம்மை நாடி இருப்பார்களா? (உடல் நலம் பாதித்தவர்கள், முதுமை எய்தியவர்கள் போன்றோரெல்லாம் இதற்கு விதிவிலக்கு!)

நம் முன்னோர்கள் அவர்களது ஆடைகளை அவர்களே துவைத்தார்கள்; உலர்த்தினார்கள்.

தரையில் அமர்ந்து சாப்பிட்டார்கள். சாப்பிட்டுவிட்டு தட்டைக் கழுவினார்கள்.

இரவு படுப்பதற்கு உண்டான விரிப்புகளை அவர்களே தரையில் விரிப்பார்கள். காலையில் மடித்தும் வைப்பார்கள்.
கடைகளுக்குச் செல்வார்கள். வீடுகளுக்குத் தேவையான பொருட்களை வாங்கி வருவார்கள்.
இன்றைக்கு அப்படி யாரையேனும் காண முடிகிறதா?

இருக்கிறார்கள், வெகு அரிதாக!

தன் வேலையையே தன்னால் செய்து கொள்ள முடியாதவர்கள் சமூக சேவை, தொண்டு என்றெல்லாம் இறங்குவது வீண் வேலை. தொண்டுள்ளம், சமூக சேவை செய்பவர்கள் எப்படி இருக்க வேண்டும் என்பது குறித்தான மகா பெரியவாளின் அறிவுரை தொடர்கிறது.

‘‘சாஸ்திரத்தில் அவனவனும் தன் வஸ்திரங்களை (ஆடைகளை) தானே துவைத்துப் போட்டுக் கொள்ள வேண்டும். தன் சாதத்தைத் தானே சமைக்க வேண்டும் (அதாவது, அரிசியைக் களைவதில் இருந்து ஆரம்பித்து, கல் பொறுக்குவது, சாதம் வடிப்பது, பாத்திரம் தேய்ப்பது வரை இதில் அடங்கும். ‘ஸ்வயம்பாகம்’ என்று இதைத்தான் சொன்னார்கள்). ‘கந்தை ஆனாலும் கசக்கிக் கட்டு’ என்கிறபோது கட்டிக் கொள்வதற்கு மட்டும் இவன் என்றில்லை. அதைக் கசக்க வேண்டியவனும் இவன்தான்.
காலை முதல் இரவு வரை ஒருவருடைய அன்றாட வேலைகளை, நடவடிக்கைகளை சம்பந்தப்பட்டவரேதான் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று சாஸ்திரம் வரையறுத்திருக்கிறது.

வீட்டு பூஜைக்குத் தேவையான பூக்கள், இலைகள் போன்றவற்றையும் அவரவர்தான் பறித்துக் கொள்ள வேண்டும். பூக்களைப் பறிப்பது ஒருத்தர்; பூஜை பண்ணுவது மற்றொருத்தர் என்று இருக்கக் கூடாது.

இன்னொரு விஷயத்தையும் இங்கே முக்கியமாகக் கவனிக்க வேண்டும். வீட்டில் இருக்கிற வயோதிகர்கள், அம்மா, அப்பா உள்ளிட்ட மற்றுமுள்ளோருக்கு வயது காரணமாகவும், ஸ்தானம் காரணமாகவும் அவர்களுக்குக் கைங்கர்யம் செய்யாமல் இருந்து விடக்கூடாது.
இவர்கள் நடத்துகிற பூஜைக்கு இளையவர்கள் புஷ்பம் பறித்துக் கொடுக்கலாம். வஸ்திரங்களைத் துவைத்துக் கொடுக்கலாம். வீட்டில் நடமாடுவதற்கும் அவர்கள் வெளியே செல்லும்படியான தேவை ஏற்பட்டால் உதவுவதும் அவசியம். இப்படிப்பட்டவர்களுக்கு இத்தகைய கைங்கர்யம் செய்வது புண்ணியத்தைப் பெற்றுத் தரும். இந்த வேளையில், ‘உன் காரியத்தை நீதான் செய்ய வேண்டும். சாஸ்திரம் அப்படித்தான் சொல்லி இருக்கிறது’ என்று வயதில் சிறியவர்கள் நழுவக் கூடாது.

அதேபோல், குரு மாதிரியான ஸ்தானத்தில் இருக்கின்றவர்களுக்கும் இது பொருந்தாது. குருவிடம் சிஷ்யனாக இருப்பவன், குருவின் வஸ்திரம் துவைத்துப் போட வேண்டும். அவரது பூஜைக்கு வேண்டிய புஷ்பங்களைப் பறித்துக் கொண்டு வந்து வைக்க வேண்டும். குருவின் பூஜைக்குத் தேவையான இதர பணிகளையும் கண்ணும் கருத்துமாக மேற்கொள்ள வேண்டும்.

ஆனாலும், பெரிய ஆச்சார்ய ஸ்தானத்தில் இருந்தவர்கள்கூடத் தங்கள் காரியத்தை சிஷ்யர்களிடம் விடாமல் தாங்களே செய்து கொண்டவர்களும் உண்டு.

வேதாந்த தேசிகன் ஒரு பெரிய சம்பிரதாயத்துக்கே மூல புருஷராக இருந்தபோதிலும் தம்முடைய ஆகாரத்துக்குத் தாமேதான் உஞ்சவிருத்தி எடுத்திருக்கிறார். திருவையாற்றில் வாழ்ந்த சத்குரு தியாகராஜ ஸ்வாமிகளும் இப்படித்தான் வாழ்ந்தார்.
இவர்களைப் போன்ற மகான்களுக்கு எத்தனையோ பேர் ஸத்காரம் (உணவு உபசரிப்பு), ராஜ உபசாரம் செய்யக்
காத்துக் கொண்டிருப்பார்கள். ஆனால், ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் (சத்குரு தியாகராஜ ஸ்வாமிகளின் ஏழ்மை
யான திருவையாறு இல்லத்துக்கு வந்து பொன்னையும் பொருளையும் கொட்டினார்கள் மன்னர்கள். தனது வறுமை
யைப் போக்க தியாகராஜ ஸ்வாமிகள் நினைத்திருந்தால், அவற்றை ஏற்றுக்கொண்டு தன் குடும்பத் தேவைக்குப் பயன்படுத்தி இருக்கலாம். ஆனால், அவற்றை லட்சியம் செய்யக்கூட இல்லை).

நாமதேவர், கோராகும்பர், திருநீலகண்ட நாயனார், திருக்குறிப்புத் தொண்ட நாயனார் போன்ற மகா பாகவதர்களும் சிவனடி
யார்களும் தங்கள் குடும்பத் தொழில்களான தையல் வேலை, குசவு வேலை, துணி வெளுப்பது போன்றவற்றை விடாமல் செய்துதான் வந்திருக்கிறார்கள்.

மராட்டிய மன்னன் சத்ரபதி சிவாஜி தன் ராஜ்யத்தையே சமர்த்த ராமதாஸரின் காலடியில் குருதட்சணையாகப் போட்டு விட்டான். அவர் பெயரில்தான் ராஜ்ய பரிபாலனம் செய்தான். அத்தனை பெரிய ராஜ்யம், பணியாட்கள் எல்லாரும் குருநாதருக்குக் காணிக்கை. ஆனாலும், சமர்த்த ராமதாஸர் தனக்குத்தான் இத்தனை அதிகாரமும் ஆட்களும் இருக்கின்றார்களே என்று உணவைத் தன் இடத்துக்கு வரவழைத்துச் சாப்பிடவில்லை. உணவு இருக்கும் இடம் தேடிச் சென்று உண்டார்.

ஆம்! ‘மதுகரி’ (மாதுகரி என்றும் சொல்வர்) பிட்ஷையைத்தான் நித்தமும் ஏற்றுக் கொண்டார் அந்த மகான். மதுகரம் என்றால் வண்டு. பூக்களில் இருந்து தேனைத் திரட்டிச் சாப்பிடும் குணம் கொண்டவை வண்டினம். ஒரே பூவில் இருந்து அதிக அளவு தேனை எடுக்காது வண்டு. ஒவ்வொரு பூவில் இருந்தும் துளித் துளியாகத் தேன் எடுத்துக் கொள்ளும். வண்டு தேன் எடுக்கும்போது பூவுக்கு எந்த ஒரு பாதிப்பும் சிரமமும் ஏற்படாது. அதுபோல் ஒரு கிருஹஸ்தருக்கு அதிக அளவு சிரமம் கொடுக்காமல், ஒரு குடும்பத்தில் இருந்து ஒரு கவளம் வீதம் பல குடும்பங்களில் பிட்ஷை வாங்கி உண்பதே மதுகரி பிட்ஷை. ஒரு வேளை உண்பதற்கு ஐந்து குடும்பங்களில் இருந்து மட்டுமே பிட்ஷை வாங்க வேண்டும் என்ற நியமம் உண்டு.

பொதுவாக, எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் மற்றவர்களை சிரமப்படுத்தக் கூடாது என்பதே உயர்ந்த கொள்கை.
ஆனால் வீட்டுக் கார்யம், சொந்தக் கார்யம் என்பதும் சாஸ்திர சம்மதமானதாக இருக்க வேண்டும். அதாவது, அறநெறி தவறின வாழ்க்கை வாழக் கூடாது.

இப்போது ஒவ்வொருத்தருக்கும், தவிர அவருடைய குடும்பத்துக்காரர்களுக்கும் ஏற்பட்டிருக்கும் பேராசைகளை எல்லாம் பூர்த்தி செய்வதை ‘டியூட்டி’ என்று சொல்ல முடியாததுதான். இத்தனையையும் கவனித்து விட்டுத்தான் ஒருவர் பொதுத் தொண்டுக்குப் போகலாம் என்றால், பொதுத் தொண்டே நடக்காது. இந்தப் பேராசை சம்பந்தப்பட்ட விஷயத்தில் வீட்டு மனிதர்கள் அப்படிச் சொல்வதைக் கேட்க வேண்டும் என்பதில்லை.

இப்படிப்பட்டவர்களுக்கு அடிப்படையாக ஒரு ஞானம் இருப்பது அவசியம். அதாவது, ‘நம்முடைய லோக சேவையால்தான் இந்த லோகம் நடக்கிறது’ என்ற பிரமை ஒருக்காலும் இருக்கக் கூடாது. மரம் வைத்தவன் தண்ணீர் விடுகிறான். லோகத்தைப் படைத்த ஒருத்தன் இருக்கிறானே... அவனே அதைக் காப்பாற்றிவிட்டும் போவான். இதற்கு நாம் ஒரு கருவிதான். நம்முடைய பாப கர்மா கழிவதற்குத்தான் பரோபகாரம். தவிர, நாம் இல்லாவிட்டால் அந்த உபகாரம் லோகத்துக்குக் கிடைக்காமல் போய்விடும் என்று இல்லை. எது யாருக்குக் கிடைக்க வேண்டுமோ, அது அவர்களுக்குக் கிடைத்து விடும்.

எத்தனை ‘டொமெஸ்டிக் டியூட்டி’ (வீட்டு வேலை) இருந்தாலும், அதைப் பண்ணிவிட்டு அதன் பிறகுதான் ‘சோஷியல் டியூட்டி’ (சமூக சேவை) செய்ய வேண்டும். ரொம்ப அதிகம் குடும்பப் பொறுப்பு இருக்கிற ஒரு சிலரைத் தவிர மற்ற எல்லோருக்குமே நியாயமான சொந்தக் கடமைகளைப் பூர்த்தி செய்த பின்னும் சமூகக் கடமை பண்ண அவகாசம் இருக்கவே செய்யும்.
‘என் கடமையில் இருந்து தப்பாமல், குடும்பத்துக்குச் செய்ய வேண்டியதையும் செய்து கொண்டே இந்த லோக குடும்பத்துக்கும் (எல்லோரும் ஒரு குடும்பம் என்கிறபடி) சகல மக்களுக்கும் என்னால் ஆன பணியைச் செய்ய அருள் பண்ணப்பா’ என்று ஈஸ்வரனைப் பிரார்த்தனை செய்து கொண்டாலே, அவன் அப்படியே அனுக்ரஹம் செய்வான்.

ஆக, இதுதான் ஈஸ்வரனிடம் நாம் செய்ய வேண்டிய வேண்டுதல்... பிரார்த்தனை.’’

எத்தனை அழகாகச் சொல்கிறார் மகா பெரியவா!

(ஆனந்தம் தொடரும்)

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE