பேசும் படம் - 39: பவுன்ஸராய் வந்த எமன்!

By பி.எம்.சுதிர்

மக்களை மகிழ்விக்கும்  விஷயங்களில் ஒன்று விளையாட்டுப் போட்டி. ஆனால், அப்படிப்பட்ட விளையாட்டுப் போட்டிகளின்போது சோகமான சில சம்பவங்களும் நடைபெறுவது உண்டு. அப்படிப்பட்ட சோகச் சம்பவங்களில் ஒன்றுதான் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரரான பிலிப் ஹியூஸின் மறைவு.  

ஆஸ்திரேலியாவின் நியூ சவுத்வேல்ஸ் மாகாணத்தில் உள்ள மாக்ஸ்வில்லியில் 1988-ம் ஆண்டு பிறந்தவர் பிலிப் ஹியூஸ்  (Phillip  Hughes). இவரது தந்தை கிரேக் ஒரு விவசாயி. வாழை  விவசாயம் செய்துவந்த எளிய குடும்பத்தைச் சேர்ந்தவரான ஹியூஸ், சிறு வயதில்  கிரிக்கெட் மற்றும் ரக்பி விளையாட்டுகளில் ஆர்வம் கொண்டிருந்தார். இரண்டு விளையாட்டுகளில் ஏதாவது ஒன்றில் கவனம் செலுத்தினால்தான் முன்னேற முடியும் என்று பயிற்சியாளர்கள் கூற, கிரிக்கெட்டில் முழு கவனம் செலுத்தத் தொடங்கினார் ஹியூஸ்.

11 வயது முதல் மேக்ஸ்வில்லி கிளப்புக்காக ஜூனியர் கிரிக்கெட் போட்டிகளில் ஆடத் தொடங்கிய ஹியூஸ், சீரான பேட்டிங்கால் உள்ளூரில்  தனக்கென்று ஒரு ரசிகர் வட்டத்தை உருவாக்கினார். உள்ளூர் கிரிக்கெட் தொடரில் ஒரே சீசனில் அவர் 1000 ரன்களைக் கடக்க,  ‘பிராட்மேனின் சாதனையை  முறியடிக்க ஒருவர் வந்துவிட்டார்’ என்று உள்ளூர் பத்திரிகைகள் இவரைக் கொண்டாடின.  சில ஆண்டுகளிலேயே இவரது புகழ்   சிட்னியை அடைந்தது. 17 வயதில் சிட்னியில்   முன்னணி கிரிக்கெட் கிளப்களுக்கு இடையே நடக்கும் கிரிக்கெட் போட்டியில் ஆடும் வாய்ப்பு ஹியூஸைத் தேடி வந்தது.

சிட்னியில்  நடந்த முதல் போட்டியிலேயே 142 ரன்களைக் குவித்த ஹியூஸ், முதல் சீசனிலேயே 752 ரன்களைக் குவித்தார். ஹியூஸின் இந்த  வேகம், 19 வயதுக்கு உட்பட்டோருக்கான ஆஸ்திரேலிய அணியிலும், இதைத்தொடர்ந்து ஆஸ்திரேலிய அணியிலும் அவருக்கு இடம்பிடித்துக் கொடுத்தது. 20 வயதில் ஆஸ்திரேலிய அணியில் நுழைந்த ஹியூஸ், அசுர வேகத்தில் முன்னேறினார்.  ஆஸ்திரேலிய அணிக்காக 26 டெஸ்ட் போட்டிகளில் 1,535 ரன்களையும், 25 ஒருநாள் போட்டிகளில் 826 ரன்களையும் குவித்தார்.   தங்கள் அணிக்கு ஒரு சிறந்த பேட்ஸ்மேன் கிடைத்துவிட்டார் என்று ஆஸ்திரேலிய ரசிகர்கள் மகிழ்ந்திருந்த நேரத்தில்தான் அந்தத் துயர சம்பவம் நடந்தது.

இந்தியாவின்  ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டிகளைப் போல ஆஸ்திரேலியாவில் நடக்கும்  ‘ஷெபீல் ஷீல்ட்’ கிரிக்கெட் போட்டியில் தெற்கு ஆஸ்திரேலியாவுக்கும், நியூ சவுத்வேல்ஸ் அணிக்கும் இடையிலான போட்டி சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் நடந்துகொண்டிருந்தது. 2014-ம் ஆண்டு நவம்பர் 25-ம் தேதி தொடங்கிய இப்போட்டியில்  தெற்கு ஆஸ்திரேலியாவுக்காக பேட்டிங் செய்துகொண்டு இருந்தார்  பிலிப் ஹியூஸ். தொடக்க ஆட்டக்காரராக களம் புகுந்த பிலிப் ஹியூஸ், ஒருபுறம் நிலையாக ஆடி அரை சதத்தைக் கடக்க, அந்த அணியின் மற்ற 2 பேட்ஸ்மேன்கள் சொற்ப ரன்களில் அவுட் ஆகி இருந்தார்கள்.

இந்தச் சூழலில் ஹியூஸை அவுட் ஆக்கும் பொறுப்பு வேகப்பந்து வீச்சாளரான சீன் அபாட்டுக்கு வழங்கப்பட்டிருந்தது. தன் அசுர வேகத்தால் அபாட் மிரட்டிக் கொண்டிருக்க, அவரது பந்துகளை சாமர்த்தியமாக தடுத்து ஆடிக்கொண்டிருந்தார் பிலிப் ஹியூஸ்.
எத்தனை வேகமாக பந்து போட்டாலும் அதை முறியடித்துக்கொண்டிருக்கும் ஹியூஸைக் கட்டுப்படுத்த, பேட்ஸ்மேனின் தோளுக்கு மேல் எழும்பும் பவுன்ஸர் வீசினால் என்ன என்று அபாட்டுக்கு தோன்றியது. இதைத்தொடர்ந்து அவர் வீசிய பவுன்ஸர்,  எதிர்பாராத வகையில் ஹியூஸின் கழுத்தைத் தாக்கியது. அடுத்த கணமே அவர் மைதானத்தில் சுருண்டு விழுந்தார். அதிர்ச்சியடைந்த நியூ சவுத்வேல்ஸ் வீரர்கள் அவரைச் சூழ்ந்து எழுப்ப முயன்றனர். ஆனால், பந்து தாக்கிய அடுத்த கணமே கோமா நிலைக்குச் சென்றுவிட்டார் ஹியூஸ்.

உடனடியாக அவர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். ஹியூஸை பந்து தாக்கியது முதல் அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது வரை ஒவ்வொரு சம்பவத்தையும் படம்பிடித்து, இச்சம்பவத்துக்கு சாட்சியாக இருந்துள்ளார் மார்க் மெட்காஃப் (Mark Metcalfe) என்ற புகைப்படக்காரர்.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் 2 நாட்களுக்கு பிறகு (நவம்பர் 27) நினைவு திரும்பாமலேயே உயிரிழந்தார் பிலிப் ஹியூஸ். மூளையில் ஏற்பட்ட ரத்தக்கசிவு காரணமாக அவர் மரணமடைந்ததாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.  அவரது மரணம் ஒட்டுமொத்த ஆஸ்திரேலியாவையே சோகத்தில் ஆழ்த்தியது. சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் அந்நாட்டின் தேசியக் கொடி அரைக் கம்பத்தில் பறக்கவிடப்பட்டது.

இதைத் தொடர்ந்து இந்தியாவுக்கு எதிராக நடந்த டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலிய அணியின் 13-வது வீரராக (மறைவுக்குப் பிறகு) பிலிப் ஹியூஸ் அறிவிக்கப்பட்டார். மேலும் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் ஹியூஸ் அணிந்த 64-ம் எண்கொண்ட ஜெர்ஸிக்கும் ஆஸ்திரேலிய அணி ஓய்வு அளித்தது. ஹியூஸை கவுரவிக்கும் வகையில் அந்த எண் கொண்ட உடையை ஆஸ்திரேலியாவில் இனி எந்த வீரரும் அணிய மாட்டார்கள் என்று அறிவிக்கப்பட்டது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE