கே.கே.மகேஷ்
magesh.kk@kamadenu.in
மு.க.அழகிரிக்கு என்னாயிற்று... இப்போது எங்கிருக்கிறார், என்ன செய்கிறார்? என்ற கேள்விகள் அரசியல் வட்டாரத்தில் அலையடிக்கத் தொடங்கியிருக்கிறது. ‘அண்ணன் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்' என்று சமீபத்தில் பரவிய வாட்ஸ் - அப் தகவலும் அதற்கொரு காரணம்.
‘முரசொலி’ பணியைக் காரணம் காட்டி, கடந்த 1980-ல் தன் தந்தையாலேயே பெட்டி கட்டி மதுரைக்கு அனுப்பி வைக்கப்பட்டவர் மு.க.அழகிரி. வாரியணைக்கவும் முடியாமல், விலக்கிவிடவும் மனதில்லாமல் புத்திர பாசத்தால் கருணாநிதி தவித்த வரலாறே, மு.க.அழகிரியின் அரசியல் வரலாறு என்று சுருக்கமாகச் சொல்லலாம். “அப்பா என்னை மட்டும் கண்டுகொள்ளவில்லை” என்ற அழகிரியின் புலம்பல், தயாளு அம்மாள் வழியாக கருணாநிதிக்குப் போய் சில நல்ல விளைவுகளை ஏற்படுத்தியது. தா.கிருட்டிணன் கொலை உள்பட பல பிரச்சினைகளில் சிக்கினாலும், அண்ணன் தென்மண்டல அமைப்புச் செயலாளர் ஆன வரலாறு அதுதான்.
ஸ்டாலினை திமுக தலைவராகவும், தனக்குப் பிறகு முதல்வராகவும் ஆக்க கருணாநிதி விரும்பியபோது, அதற்குத் தடையாக வந்து நின்றார் மு.க.அழகிரி. கடைத்தேங்காயை எடுத்து வீட்டுப்பிள்ளையாருக்கு உடைப்பதற்குக் கூட, இவர் தடையாக இருக்கிறாரே என்று வேதனைப்பட்டாலும், அழகிரியைச் சமாதானப்படுத்த திமுகவில் புதிதாக தென்மண்டல அமைப்புச் செயலாளர் என்ற பதவி கருணாநிதியால் உருவாக்கப்பட்டது. பிறகு மதுரை மக்களவைத் தொகுதியில் வென்று மத்திய அமைச்சரும் ஆனார் அழகிரி. ஆனாலும், தம்பியின் கைக்கு கட்சி போவதை அண்ணன் விரும்பவேயில்லை. அதனால் பரமசிவன் கழுத்துப் பாம்பாகச் சீறிக்கொண்டேயிருந்தார்.
இந்த உட்பூசல் ஒரு கட்டத்தில் பகிரங்கமாக வெடித்தது. கட்சியிலும், முரசொலியிலும் தன்னை ஸ்டாலின் ஓரங்கட்டுகிறார் என்று வெளிப்படையாக விமர்சித்தார் அழகிரி. அவரது ஆதரவாளர்களும் அதே குரலை எதிரொலித்தார்கள். அதைத் தொடர்ந்து அழகிரியும், அவரது ஆதரவாளர்களும் திமுகவில் இருந்து (ஒன்றுக்குப் பலமுறை) தற்காலிகமாக நீக்கப்பட்டார்கள். ஆனால், தலைமைக்கழகம் விளக்கம் கேட்டு அனுப்பிய நோட்டீஸுக்குப் பதில் தராததோடு, “கருணாநிதியைத் தவிர வேறு யாரையும் தலைவராக ஏற்க மாட்டேன்” என்று பேட்டியும் கொடுத்தார் அழகிரி. கூடவே, ஸ்டாலினின் உடல் நிலை குறித்தும் தந்தையிடமே தகாத வார்த்தைகளைக் கொட்டினார். அழகிரி அப்படிச் சொன்னதை பொதுவெளியில் போட்டுடைத்து ஆவேசப்பட்டார் கருணாநிதி.
இதன் தொடர்ச்சியாக, கட்சிக்கு எதிராகச் செயல்படும் அழகிரியை நிரந்தரமாக நீக்குவதாக 2014 மார்ச்சில் அறிவித்தார் கருணாநிதி. ஆனாலும், அடுத்து வந்த சட்டமன்றத் தேர்தலில் ஸ்டாலினை முதல்வர் வேட்பாளராக அறிவிக்காததற்கும், திமுக தலைவர் பதவியை அவரிடம் ஒப்படைக்கத் தயங்கியதற்கும் அழகிரி ஏடாகூடமாக ஏதாவது செய்துவிடக் கூடும் என்று கருணாநிதி பயந்ததே காரணம் எனக் கூறப்பட்டது.