துணிப் பைக்கு ஒரு ஷோரூம்!-  இயற்கை நேசர் இளவரசனின் ‘துணி’கர முயற்சி

By காமதேனு

கரு.முத்து
muthu.k@kamadenu.in

பிளாஸ்டிக்கை ஒழிக்க அரசு ஒருபுறம் நடவடிக்கைகளை எடுத்துவரும் சூழலில், மறுபுறம் மக்கள் மத்தியில் மெல்லப் பரவிக்கொண்டிருக்கிறது ‘துணிப் பை இயக்கம்’. சுற்றுச் சூழல் ஆர்வலர் ரமேஷ் கருப்பையா தொடங்கிய இந்த இயக்கத்தை மக்கள் இயக்கமாக மாற்றிக் கொண்டிருக்கிறார் அரியலூர் ‘தமிழ்க்களம்’ இளவரசன். கடந்த நான்காண்டுகளில் பள்ளி மாணவர்கள், முக்கியப் பிரமுகர்கள் என்று சுமார் 30 ஆயிரம் பேரிடம் துணிப் பைகளை இலவசமாக வழங்கி
இருக்கிறார் இவர்.

அரியலூரில் ‘தமிழ்க்களம்’ என்ற பெயரில் புத்தகங்கள் மற்றும் எழுதுபொருள் அங்காடி வைத்திருக்கும் இளவரசன், துணிப் பை விற்பனைக்கென்று தனியே சிறு கடையும் நடத்துகிறார். “செருப்புக்கும் துணிக்கும் நகைக்கும் ‘ஷோரூம்’கள் இருக்கும்போது துணிப் பைக்கு ஏன் ‘ஷோரூம்’ இருக்கக் கூடாது என்ற கேள்விதான் இக்கடைக்கு மூலகாரணம்” என்று சிரிக்கிறார் இளவரசன். அவரிடம் சில கேள்விகளை முன்வைத்தேன்.

சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆர்வம் உங்களுக்கு வந்தது எப்படி?

பள்ளியில் படிக்கும்போதே சுற்றுச்சூழல் சீர்கேடு கள் குறித்த பேச்சுப் போட்டிகள், நாடகங்களில் பங்கேற்றிருக்கிறேன். அதிலிருந்து சுற்றுச்சூழல் ஆர்வம் என்னைத் தொற்றிக்கொண்டது. 2011-ல், சுற்றுச்சூழல் ஆர்வலர் ரமேஷ் கருப்பையாவுடன் பழகும் வாய்ப்புக் கிடைத்தது. நான் நடத்திவரும் இந்தப் புத்தக நிலையம் அவரது மாமனாரும், தமிழறிஞருமான அரங்கநாடன் தொடங்கியது. பின்னர் இதை என்னிடம் கொடுத்துவிட்டார். அரங்கநாடனின் தமிழ் ஆர்வமும் ரமேஷ் கருப்பையாவின் சுற்றுச்சூழல் செயல்பாடுகளும் என்னை இந்த இயக்கத்தை நோக்கி ஈர்த்தன. இந்த இயக்கத்தைத் தொடங்கிய ரமேஷ் கருப்பையா ஒருபக்கம் அதனை விரிவாகக் கொண்டு செல்கிறார். என் அளவுக்கு நானும் இதை மக்களிடம் பரவலாக்குகிறேன்.

துணிப் பை இயக்கத்தின் மூலம் என்னென்ன பணிகளைச் செய்கிறீர்கள்?

அரியலூர் மாவட்டத்தில் பள்ளி மாணவர்களுக்குச் சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதுதான் எங்கள் முக்கிய நோக்கம். பிளாஸ்டிக் பொருட்களைத் தவிர்க்க வேண்டியதன் அவசியம் குறித்தும், துணிப் பையின் மகத்துவம் குறித்தும் எடுத்துச் சொல்ல மாணவர்களிடையே சின்னச் சின்ன நிகழ்ச்சிகள் நடத்துகிறோம். இலவசமாகத் துணிப் பைகளையும் அவர்களுக்கு வழங்குகிறோம். சிறிய பள்ளிகளுக்கு எங்களால் பைகளை இலவமாக வழங்க முடிகிறது. ஒரு துணிப் பைக்குக் குறைந்தபட்சம் 17 ரூபாய் செலவாகிறது. அதனால், அதிக மாணவர்களைக் கொண்ட பள்ளிகளுக்கு எங்களால் இலவசமாகக் கொடுக்க முடியவில்லை. சேவை அமைப்புகள் எங்களுடன் இணைந்தால் அதையும் செய்ய முடியும்.

இதுபோன்ற இயக்கங்களால் சமூக விழிப்புணர்வு ஏற்பட்டிருக்கிறது என்று கருதுகிறீர்களா?

நிச்சயமாக. உதாரணத்துக்கு, பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள சில்லக்குடி உயர்நிலைப் பள்ளியில் அனைத்து மாணவர்களும் தற்போது துணிப் பைதான் எடுத்துச் செல்கிறார்கள். அந்த ஊரில் உள்ள தன்னார்வலர்கள் தங்களின் வீட்டு நிகழ்ச்சிகள், பள்ளி ஆண்டுவிழா போன்றவற்றின்போது அனைத்து மாணவர்களுக்கும் துணிப் பைகளை வழங்குவதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள். மாணவர்களும் அந்தப் பைகளை ஆர்வமாக பள்ளிக்கு எடுத்துச் செல்கிறார்கள். அதுமட்டுமல்ல, தமிழகத்தின் பல இடங்களிலும் இப்போது திருமணங்களில் துணிப் பை கொடுக்க ஆரம்பித்திருக்கிறார்கள். கோயில்களில் பிரசாதங்களும் துணிப் பைகளில் தரப்படுகின்றன. கடைகளுக்குச் செல்பவர்களில் பெரும்பாலானோர் துணிப் பை எடுத்துவருகிறார்கள். ராமநாதபுரம், சென்னை, கடலூர், விழுப்புரம் திருவண்ணாமலை போன்ற மாவட்டங்களில் துணிப் பை இயக்கம் வெற்றிகரமாக நடந்துவருகிறது.

துணிப் பை என்றாலே மஞ்சள் பைதான் நினைவுக்கு வரும். உங்கள் கடையில் மஞ்சள் பை இல்லையே?

அதற்கு ஒரு காரணமும் இல்லை. பொதுவாகவே, பழுப்பு நிற பையைத்தான் அதிகம் தயாரிக்கிறோம். தறியிலிருந்து காடாத் துணியை அப்படியே வாங்கிவந்து, பைகளாகத் தைக்கிறோம். வெள்ளை நிறத்துக்காக ‘பிளீச்’ செய்வதில்லை. அந்த ரசாயனமும் சுற்றுச்சூழலுக்குக் கெடுதல்தான். ஆனால், அதில் அச்சிடப் பயன்படுத்தப்படும் மை மட்டும் ரசாயனம். அதை மட்டும் தவிர்க்க முடிவதில்லை. காந்தி, பெரியார், அம்பேத்கர், பாரதிதாசன், நம்மாழ்வார் உள்ளிட்ட மிகப் பெரும் ஆளுமைகளின் படங்களை மட்டுமே அச்சிடுகிறோம். ‘தமிழே நீ ஒரு பூக்காடு’, ‘நெகிழி தவிர்த்து நெஞ்சம் நிமிர்த்து’, ‘துணிப் பை தூக்க துணிவோம்’ என்பது போன்ற விழிப்புணர்வுக் கருத்துகள் கொண்ட பைகளை மக்கள் பெருமிதத்துடன் எடுத்துச் செல்வதைப் பார்க்கவே மகிழ்ச்சியாக இருக்கிறது.

இந்தப் பணிகள் மூலம் உங்களுக்கான அங்கீகாரம் கிடைத்திருக்கிறதா?

பள்ளிகளில் ‘துணிப் பை அண்ணன்’ என்று மாணவர்கள் என்னை அடையாளப்படுத்துவதை மிகப் பெருமையாகக் கருதுகிறேன். அரியலூர் மாவட்ட நீதிமன்றத்தில் எந்த விழா நடந்தாலும் துணிப் பைக்குத்தான் முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. தற்போது நடந்து முடிந்த அரியலூர் புத்தகத் திருவிழாவில் துணிப் பை ஸ்டால் போட அனுமதி கொடுத்திருந்தார்கள். அதுவும் பாதி வாடகையில். இதெல்லாம் இந்த இயக்கத்துக்குக் கிடைத்திருக்கும் அங்கீகாரம்தான்.

மக்களிடம் என்ன எதிர்பார்க்கிறீர்கள்?

விழாக்களில் விருந்தினர்களுக்கு சால்வைகள் அணிவதைத் தவிர்க்க வேண்டும். அந்தச் சால்வைகளால் ஒரு பயனும் இல்லை. அதற்குப் பதிலாகத் துணிப் பைகளைப் பரிசாகக் கொடுக்கலாம். நமக்கு எளிதாகச் சாத்தியமாவது இந்தத் துணிப் பை பயன்பாடுதான். சுற்றுச்சூழலைக் காக்க மரம் நடுவதைப் போலவே துணிப் பை பயன்பாட்டை அதிகரிப்பதும் மிக முக்கியமானது. இயற்கைக்கு எந்த வகையிலும் பாதிப்பு ஏற்படுத்தாத, மண்ணோடு மண்ணாக மக்கிப்போகும் தன்மை கொண்ட துணிப் பையைத்தான் நாம் தூக்கிப் பிடிக்க வேண்டும்.

- இப்படிச் சொன்ன இளவரசன் எனது கையிலும் இரண்டு துணிப் பைகளைக் கொடுத்து கைகூப்பி அனுப்புகிறார்!

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE