பேசும் படம் - 37: அமைதிக்காக ஒரு பயணம்

By பி.எம்.சுதிர்

ஒரே மண்ணில் இருந்து பிரிந்த சகோதர நாடுகளாய் இருந்தாலும், இந்தியாவும் பாகிஸ்தானும் நட்புறவுடன் இருந்ததைவிட விரோதத்துடன் இருந்த காலம்தான் அதிகம். சர்வதேச அரங்கில் சதா மோதிக்கொண்டிருக்கும் இவ்விரு நாடுகளுக்கும் இடையே இணக்கமான சூழ்நிலை எப்போதாவது ஒருமுறைதான் ஏற்படும். அப்படிப்பட்ட இணக்கமான சூழலை ஏற்படுத்திய சம்பவங்களில் ஒன்று இந்தியாவின் முன்னாள் பிரதமர் வாஜ்பாய், பாகிஸ்தானுக்கு மேற்கொண்ட பேருந்துப் பயணம். இந்தப் பயணத்தின்போது பிரமோத் புஷ்கர்னா எடுத்த புகைப்படத்தைத்தான் இங்கே நீங்கள் பார்க்கிறீர்கள்.

இந்தியா - பாகிஸ்தான் பிரிவினையின்போது இந்திய எல்லைப் பகுதியில் இருந்த பல முஸ்லிம் குடும்பங்கள் பாகிஸ்தானுக்கும், பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் இருந்த பல இந்துக் குடும்பங்கள் இந்தியாவுக்கும் குடிபெயர்ந்தன. அப்படிக் குடிபெயரும் நேரத்தில் அவர்கள் தங்களின் உறவினர்களை விட்டுப் பிரிந்துசெல்ல வேண்டியிருந்தது. அப்படிப் பிரிந்துசென்ற உறவினர்களை மீண்டும் சந்திக்க, தங்களின் பழைய ஊர்களுக்கு அடிக்கடி செல்ல வேண்டும் என்பது அவர்களின் கனவாக இருந்தது.

 இந்தச் சூழலில்தான் இரு நாட்டின் எல்லைப் பகுதியையும் இணைக்கும் வகையில் 1976-ம் ஆண்டு சம்ஜாதா எக்ஸ்பிரஸ் என்ற ரயில் இயக்கப்பட்டது. இந்தியாவின் அமிர்தசரஸ் மற்றும் பாகிஸ்தானின் லாகூர் நகரங்களுக்கு இடையே இயக்கப்பட்ட இந்த ரயில், இந்தியா - பாகிஸ்தான் உறவைப் பொறுத்து சில நாட்கள் இயக்கப்படுவதும், சில நாட்கள் ரத்து செய்யப்படுவதுமாக இருந்தது. இந்நிலையில், இரு நாடுகளையும் இணைக்கும் வகையில் பேருந்து போக்குவரத்தைத் தொடங்க வேண்டும் என்ற கோரிக்கை எல்லைப்பகுதி மக்களால் பல நாட்களாக எழுப்பப்பட்டு வந்தது.

இந்தச் சூழலில்தான் டெல்லிக்கும் லாகூருக்கும் இடையே பேருந்துப் போக்குவரத்தைத் தொடங்க அப்போதைய இந்தியப் பிரதமரான வாஜ்பாய் திட்டமிட்டார். 1998-ம் ஆண்டில் இந்தியா நடத்திய அணு ஆயுத சோதனை, அதைத்தொடர்ந்து பாகிஸ்தான் நடத்திய அணு ஆயுத சோதனை ஆகியவற்றால் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவு சீர்கெட்டிருந்த நேரத்தில் வாஜ்பாயின் இந்த முடிவு சர்வதேச சமுதாயத்தால் வரவேற்கப்பட்டது. இந்தியாவுடன் நட்புறவு கொள்வதைத் தானும் விரும்புவதாகக் கூறிய அப்போதைய பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீபும் பேருந்துப் போக்குவரத்தைத் தொடங்குவதில் ஆர்வம் காட்டினார். இவர்கள் இருவரின் பெருமுயற்சியால் 1999-ம் ஆண்டு பிப்ரவரி 19-ம் தேதி இந்தியாவில் இருந்து முதலாவது பேருந்து லாகூருக்குப் புறப்பட்டது.

பொதுவாக பேருந்துகளையோ, ரயில்களையோ தொடங்கிவைக்கும் தலைவர்கள், ஒரு மேடையில் நின்று அவற்றுக்குப் பச்சைக் கொடியைக் காட்டுவதுடன் தங்கள் பணியை முடித்துக்கொள்வார்கள். ஆனால், வாஜ்பாயோ, பேருந்தைக் கொடியசைத்துத் தொடங்கிவைப்பதை விட அதில், தானே பயணிப்பது இரு நாடுகளின் நல்லுறவை வளர்க்கும் என்று நம்பினார். அதனால் முதல் பேருந்தில் முதல் பயணியாக பாகிஸ்தானின் லாகூர் நகருக்குப் பயணித்தார். வாஜ்பாயுடன் நடிகர்கள் தேவ் ஆனந்த், சத்ருகன் சின்ஹா, பத்திரிகையாளர் குல்தீப் நய்யார், கிரிக்கெட் வீரர் கபில்தேவ் உட்பட 22 பிரபலங்கள் இந்தப் பேருந்துப் பயணத்தில் பங்கேற்றனர்.

பாகிஸ்தான் நேரப்படி மாலை 4.10 மணிக்கு அந்நாட்டின் எல்லைக்குள் நுழைந்த வாஜ்பாய்க்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான மக்கள் எல்லையில் திரண்டு வாஜ்பாயை வரவேற்றனர். வாஜ்பாயின் பயணத்தை முன்னிட்டு பாகிஸ்தானின் எல்லைப்பகுதியான வாகாவில் இருந்து லாகூர் வரையிலான 35 கிலோமீட்டர் சாலை பிரம்மாண்டமாக அலங்கரிக்கப்பட்டிருந்தது.

 லாகூரில் பேசிய வாஜ்பாய், “21 ஆண்டுகளுக்குப் பிறகு பாகிஸ்தான் மண்ணை மிதிக்கிறேன். நான் என் நாட்டு மக்களின் நல்லெண்ணத்தையும், நம்பிக்கையையும் என்னுடன் கொண்டு வந்திருக்கிறேன். இரு நாடுகளுக்கும் இடையே இன்னொரு போரை நான் அனுமதிக்க மாட்டேன். இரு நாடுகளுக்கும் இடையே இதுவரை 3 போர்கள் நடந்துள்ளன. இந்த 3 போர்களிலும் நாம் மிகப்பெரிய விலையைக் கொடுத்துள்ளோம். ஒருவரையொருவர் பிடிக்கிறதோ இல்லையோ, இரு நாடுகளுக்கும் இடையில் சகிப்புத்தன்மையை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும் ” என்று கூற அது அந்நாட்டு மக்களின் மனதில் அவருக்கு நற்பெயரை ஏற்படுத்திக் கொடுத்தது.

இந்தப் பயணத்தைத் தொடர்ந்து லாகூரில் நடந்த இரு நாட்டுத் தலைவர்களின் பேச்சுவார்த்தைக்குப் பிறகு கூட்டறிக்கை வெளி
யானது. இரு நாடுகளுக்கும் இடையிலான அனைத்துப் பிரச்சினைகளையும் பேசித் தீர்ப்பது என்றும், தீவிரவாதத்தை ஆதரிக்
கும் போக்கை கைவிடுவது என்றும் அப்போது முடிவெடுக்கப்பட்டது. இரு நாடுகளுக்கும் இடையிலான உறவில் புதிய அத்தியாயத்தை இந்தப் பயணம் ஏற்படுத்தியதாக சர்வதேசப் பத்திரிகைகள் எழுதின.

ஆனால், நல்லெண்ணத்தின் அடிப்படையில் பாகிஸ்தான் எல்லைக்குள் வாஜ்பாயின் பேருந்து நுழைந்த சில நாட்களிலேயே, கார்கில் எல்லைக்குள் பாகிஸ்தான் படைகள் நயவஞ்சகமாக ஊடுருவின. வாஜ்பாயின் பயணத்தால் ஏற்பட்ட நல்ல மாற்றங்களை இது குலைத்தது. இன்முகத்துடன் வரவேற்று முதுகில் குத்தும் வகையில் கார்கிலுக்குள் பாகிஸ்தான் ராணுவம் நுழைந்ததை இந்தியா ரசிக்கவில்லை. வெகுண்டெழுந்த இந்திய ராணுவம், எல்லை தாண்டி வந்த பாகிஸ்தான் ராணுவத்தை நசுக்கியது. இந்த போரில் ஏராளமான பாகிஸ்தான் வீரர்கள் கொல்லப்பட, வங்கதேச போருக்கு பிறகு பாகிஸ்தானுக்கு ஏற்பட்ட மிகப்பெரிய சறுக்கலாக இது பார்க்கப்பட்டது.

பிரமோத் புஷ்கர்னா (Pramod Pushkarna)

1948-ம் ஆண்டு பிறந்த பிரமோத் புஷ்கர்னா, மாணவராய் இருந்தபோதே 1967 முதல் 1970 வரை ‘அதிகார்’ என்ற பத்திரிகையில் பகுதிநேர புகைப்படக்காரராய் இருந்தார். பின்னர் சிறிது காலம் நேஷனல் ஹெரால்ட் பத்திரிகையில் பணியாற்றிய இவர், 1978 முதல் 2003-ம் ஆண்டு வரை ‘இந்தியா டுடே’ வார இதழில் துணை தலைமைப் புகைப்படக்காரராகப் பணியாற்றினார். பல்வேறு புகைப்பட கண்காட்சிகளில் இவரது படங்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன. துர்கா ரத்தன் விருது உள்ளிட்டபல்வேறு விருதுகளை இவர் பெற்றுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE