என்.சுவாமிநாதன்
swaminathan.n@kamadenu.in
அஞ்சல் அட்டைகளால் நிரம்பி வழிகிறது அந்த மேஜை. இடைவிடாத பணிகளுக்கிடையில் அதற்கென நேரம் ஒதுக்கி, ஒவ்வொரு கடிதத்தையும் பொறுமையாகப் படிக்கிறார் நெல்லை மாநகரக் காவல் துணை ஆணையர் சரவணன். ‘டியர் டி.சி...’ என்று அவரை அன்புடன் விளித்து மாணவ, மாணவிகள் அனுப்பிய கடிதங்கள்தான் அவை!
நூதன முறையில் ஹெல்மெட் விழிப்புணர்வு, பைக் ரேஸ் பையன்களுக்கு வித்தியாச தண்டனை, ‘மக்களை நோக்கி மாநகரக் காவல்' எனப் புத்தாக்கச் சிந்தனைகளுடன் நெல்லையின் நேசத்துக்குரிய காவலராகியிருக்கிறார் சரவணன். சமூக வலைதளங்களிலும் தீவிரமாக இயங்கும் இவர், அதன்மூலம் பொதுமக்களுக்கும், காவல் துறைக்கும் இடையேயான இடைவெளியையும் கணிசமாகக் குறைத்திருக்கிறார். நெல்லைக்கு வந்த மூன்றே மாதங்களில் இத்தனையையும் நிகழ்த்தியிருக்கிறார் என்பதுதான் இன்னும் விசேஷம்.
கடிதங்களை வாசித்துக்கொண்டே என்னிடம் பேசத் தொடங்கினார் சரவணன். “குற்றங்கள் குறைய கடும் நடவடிக்கை எடுப்பது ஒருபக்கம் என்றால், குற்றங்கள் நடைபெறாமல் இருக்க விழிப்புணர்வும் அவசியம். அதற்காகவே திருநெல்வேலி நகர் காவல் துறைக்கென தனியாக ஃபேஸ்புக் கணக்கு, ட்விட்டர் கணக்கு தொடங்கியிருக்கிறோம்.