இலக்கியம் படைக்கும் இறால் வியாபாரி!- பாப்பாகோயில் பொன்மணிதாசன்

By காமதேனு

கரு.முத்து
muthu.k@kamadenu.in

நாளிதழ்கள், வார இதழ்கள், சிற்றிதழ்கள், இணைய இதழ்கள் என அனைத்திலும் சளைக்காமல் எழுதிக் குவிக்கிறார் பொன்
மணிதாசன். 66 வயதான இந்தப் படைப்பாளி எட்டாம் வகுப்பு மட்டுமே படித்தவர். இறால் வியாபாரியான இவரின் ஐந்நூற்றுக்கும் மேற்பட்ட கவிதைகள், இருநூற்றுக்கும் மேற்பட்ட சிறுகதைகள் பல்வேறு பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. ஒன்பது கவிதைத் தொகுப்புகள், மூன்று சிறுகதைத் தொகுப்புகளையும் வெளியிட்டிருக்கும் பொன்மணிதாசனைச் சந்திக்க, நாகப்பட்டினம் அருகிலுள்ள பாப்பாகோயிலில் இருக்கும் அவரது வீட்டுக்குச் சென்றேன்.

வீட்டு வாசலில் இரண்டு நாய்கள் என்னை நலம் விசாரிக்கின்றன. “ஜிம்மி…சோனி… சும்மா இருங்க” என்று பொன்மணிதாசன் அதட்டவும் அடங்கிக் குழைகின்றன. உள்ளே சென்றதும் இரண்டு பூனைக்குட்டிகள் காலுக்கடியில் நுழைந்து வெளியேறுகின்றன.
வீட்டில் பொன்மணிதாசனின் அறை முழுவதும் புத்தகங்கள். பெரும்பாலானவை கண்ணதாசன் எழுதியவை. அங்கிருக்கும் மீன் ட்ரே ஒன்றில் அவரது சட்டைகள் மடித்து வைக்கப்பட்டிருக்கின்றன.

“இறால் வியாபாரத்துல இருந்துக்கிட்டு எழுத்துப் பக்கம் எப்படி வந்தீங்க?” என்று பேச்சை ஆரம்பித்தேன்.
“திருத்துறைப்பூண்டி பக்கத்துல உள்ள மணலிதான் சொந்த ஊர். எங்க குடும்பமே கலைக் குடும்பம். தாத்தா கந்தசாமி அந்தக் காலத்துல மிகப் பெரிய ராஜபார்ட் நடிகர். அப்பா பொன்னுசாமியும் ராஜபார்ட் நடிகரா இருந்தவர். சொந்தமா பாட்டு எழுதி மேடையில பாடி ரொம்ப ஃபேமஸா இருந்தவர். இதையெல்லாம் பார்த்து எனக்கும் என் அண்ணன் பொன் கிருஷ்ணமூர்த்திக்கும் கலை மேல ஆர்வம் வந்துடுச்சு. ஆனா, அது நடிப்புப் பக்கம் போகாம எழுத்துப் பக்கம் இழுத்துட்டு வந்துடுச்சு. கவிதை, கதைன்னு எழுத ஆரம்பிச்சிட்டோம். ஒரு கட்டத்துல அதையெல்லாம் பத்திரிகைக்கு அனுப்பலாமேன்னு முடிவெடுத்தேன். 1976-ல திருத்துறைப்பூண்டியில வெளிவந்த ‘மாலை’ கையெழுத்துப் பிரதிக்கு ‘விரைந்தெழுவேன் அம்பாய்’ங்கிற தலைப்புல கவிதை எழுதி அனுப்பினேன். அது பிரசுரமானதும் ரொம்ப உற்சாகம் தந்துச்சு. அந்த உற்சாகத்துல பல பத்திரிகைகளுக்குக் கவிதை எழுதி அனுப்பினேன். எல்லாமே பிரசுரமாச்சு. அப்புறம் சிறுகதைகள் எழுத ஆரம்பிச்சேன். அண்ணனும் பல இதழ்கள்ல கவிதைகள், துணுக்குகள், கட்டுரைகள் எழுதியிருக்கிறார். இடையில என்னோட எழுத்துப் பயணத்துல சின்ன இடைவெளி விழுந்துடுச்சு. இப்ப தொடர்ந்து சுமூகமா போய்கிட்டிருக்கு” என்றார் தாசன்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE