பள்ளியில் ஒலிக்கும் பறையிசை!

By காமதேனு

கா.சு.வேலாயுதன்
velayuthan.kasu@kamadenu.in

‘த… த…கு…கு…த கு த கு!’ கோவை பீளமேடு தண்ணீர் பந்தல் சாலையில் இருக்கும் ஸ்ரீராமன் செட்டியார் மெட்ரிக் பள்ளி வளாகத்திலிருந்து அதிர அதிர ஒலிக்கிறது பறையிசை. விடுமுறை நாளின் சோம்பல் தட்டிய மனநிலையுடன் அந்தப் பகுதியைக் கடப்பவர்களையும் தொற்றிக்கொள்கிறது அந்த அதிர்வு. பள்ளி வளாகத்தில் எட்டிப் பார்த்தால், மூன்று வயது சிறுவர் - சிறுமியர் முதல், நடுத்தர வயது பெண்கள் வரை பலர் பறையடித்து உற்சாகமாக ஆடிக்கொண்டிருக்கிறார்கள்.

அதிரவைக்கும் பறையிசையை முழக்கியபடி, அடவுகளில் அசத்திக்கொண்டிருந்த லதா, அந்தப் பள்ளியின் முதல்வர் என்பது
தான் ஆச்சரியம். அவரிடமே அதைப்பற்றிக் கேட்டேன். ஆடிய களைப்பின் சுவடே இல்லாமல் பேசத் தொடங்குகிறார்.

“எனக்கு சின்ன வயசிலயிருந்தே கலைத்திறன்கள் மேல ஒரு காதல். கராத்தே, சிலம்பமும் கத்திருக்கேன். பள்ளிப் படிப்பைத் தாண்டியும் கலைத்திறன்கள்ல மாணவர்கள் ஜொலிக்கணும்னு எப்பவுமே நினைப்பேன். இங்கே பறையிசை பயிற்சி கொடுக்க இடம் கிடைக்குமான்னு ‘நிகர்’ பறையிசைக் கலைக் குழு என்கிட்ட கேட்டாங்க. நான் உடனே, எங்க ஸ்கூல் மேனேஜிங் டிரஸ்ட்டிகிட்ட பேசினேன். அவர், உடனே ஓகே சொல்லிட்டார். எங்க ஸ்கூல் பிள்ளைங்க மட்டுமல்ல, கோவை, திருப்பூர், நாமக்கல், கரூர், புதுச்சேரின்னு பல இடங்கள்லருந்து பிள்ளைகள் இங்க வந்து கத்துக்குறாங்க. நானும் ஒரு மாணவியா இருந்து இதைக் கத்துகிட்டேன்” என்கிறார் லதா பெருமிதத்துடன்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE