ஹாட் லீக்ஸ்: தொகுதிக்கு வாங்க அரசரே!

By காமதேனு

தொகுதிக்கு வாங்க அரசரே!

திருச்சி தொகுதியை நான்கு லட்சம் வாக்குகளுக்கு மேலான வித்தியாசத்தில் வென்றெடுத்த திருநாவுக்கரசர், வாக்காளர்களுக்கு நன்றி சொல்லக்கூட வரவில்லை என்று புகைகிறார்கள். அத்துடன், திருச்சியில் இன்னமும் எம்பி அலுவலகத்தையும் திறக்காமல் இருக்கிறாராம் அரசர். அவரது ஆதரவாளர்களோ, “அலுவலகம் திறக்கிறதா இப்ப முக்கியம்... அதைவிட தொகுதிக்கு என்ன தேவைன்னு பார்த்து அதற்கான முயற்சிகளை முன்னெடுக்கணும். அண்ணன் டெல்லியில் இருந்து அமைச்சர்களை சந்தித்து அந்த வேலைகளைத்தான் பாத்துட்டு இருக்காரு. சீக்கிரமே நன்றி சொல்ல வருவாரு” என்கிறார்கள். இன்னொரு தரப்போ, “அதெல்லாம் இல்லை... ஏதோ ஒரு விஷயத்தில் முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவுக்கும் அரசர் மேல மனஸ்தாபம். அதனால அலுவலகம் திறக்கவும் நன்றி சொல்லப் போகவும் நேரு தேதி குடுக்காம இழுக்கிறார். அவரு இல்லாம எந்தக் காரியமும் செய்ய முடியாதுன்றதால அரசரும் வெளியில் சொல்ல முடியாமல் இருக்கிறார்” என்கிறார்கள்.

நேரலை கொடுத்த ஜெயா டிவி

அதிமுகவுக்காக தொடங்கப்பட்ட ‘நியூஸ் ஜெ’ சேனலுக்கு அவ்வளவாய் வேகம் போதவில்லையாம். அமைச்சர்கள் பலரும் இதுபற்றி தலைமையிடம் முறையிட்டிருக்கிறார்கள். அனைத்துக்கும் மேலாக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி அண்மையில் ‘நியூஸ் ஜெ’ செய்தியாளர் ஒருவரிடம், “ஏய் என்னப்பா நீங்க... நம்ம கட்சியோட டிவி இன்னமும் அந்தச் செய்திய போடாம இருக்கீங்க? ஆனா, ஜெயா டிவியில லைவ்வே ஓடி முடிஞ்சிருச்சு” என்று பொதுவெளியிலேயே பொங்கிவிட்டார். இந்த நிலையில், கடந்த ஆண்டு முதல்வரின் சுதந்திர தின விழா கொண்டாட்டங்களைக் கண்டுகொள்ளாமல் விட்டு விட்ட ஜெயா டிவி, இந்த ஆண்டு நேரலையில் அந்த நிகழ்ச்சிகளை ஒளிபரப்பு செய்தது. நிர்வாக தரப்பிலிருந்து வந்த கிரீன் சிக்னல்தான் இதற்குக் காரணம்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE