கே.கே.மகேஷ்
magesh.kk@kamadenu.in
மோடியும், அமித்ஷாவும் ஓப்பனிங் பேட்ஸ்மேன்களாக இறங்கி, இரட்டை செஞ்சுரி அடித்துவிட்டு களத்தில் கம்பீரமாக நிற்கிறார்கள். காங்கிரஸ் கட்சியிலோ ஃபீல்டர்களையும் காணோம், பவுலரையும் காணோம். கேப்டனும் ராஜினாமா செய்துவிட்டார். "தலையில்லாத கோழி" என்று அருண் ஜேட்லி எல்லாம் நக்கலடிக்கிற நிலையில் காங்கிரஸ் கட்சி இருக்கிறதே என்ற கேள்வியுடன் காங்கிரஸின் முக்கியமான ஆளுமையான பீட்டர் அல்போன்ஸை சந்தித்தோம். இனி அவரது பேட்டி.
காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து ரத்து எனும் மோடியின் அதிரடியை எப்படிப் பார்க்கிறீர்கள்?
ஆர்ட்டிகிள் 370-ஐ ரத்து செய்ததன் மூலம் மத்திய அரசுக்கு இப்போது என்ன அதிகாரம் புதிதாக வந்திருக்கிறது? அம்மாநில சட்டமன்றத்தைக் கலைத்தது, ஆளுநர் ஆட்சியை ஏற்படுத்தியது, ஒரு லட்சம் துணை ராணுவப்படையினரை அங்கு குவித்தது, நாடாளுமன்றத் தேர்தலை மட்டும் நடத்தியது என்று எல்லாவற்றையும் இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் தந்த அதிகாரத்தின் அடிப்படையில்தானே செய்தார்கள்? காஷ்மீரில் வாழும் எந்த மக்களும் அதைக் கேள்வியே கேட்காதபோது, 370-வது பிரிவு நீக்கம் எதற்காக?