கருணாநிதி இல்லாத கழகம் - சாதனைகளும் சறுக்கல்களும்...

By காமதேனு

சந்தனார்
readers@kamadenu.in

ஆகஸ்ட் 7. தமிழக முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான கருணாநிதி மறைந்தநாள். திமுகவுக்கு மட்டுமல்லாமல், ஒட்டுமொத்த தமிழகத்துக்கும் நேர்ந்த இழப்பாகவே அவரதுமறைவு பார்க்கப்படுகிறது. 80 ஆண்டு காலப் பொதுவாழ்வில் ஏராளமான சோதனைகளையும் வெற்றி தோல்விகளையும் பார்த்தவர். மாபெரும் அரசியல் ஆளுமையாக அவர் விடைபெற்றுக் கொண்ட நிலையில், திமுகவை வழிநடத்தும் பொறுப்பு ஸ்டாலினுக்கு முழுமையாக வந்தடைந்தது. கருணாநிதி இல்லாத இந்த ஓராண்டில் திமுகவின் செயல்பாடுகள் சற்றே தடுமாறித்தான் போயிருக்கின்றன.

வாழ்நாள் போராளி

இயல்பிலேயே போராளியான கருணாநிதி கல்வி தொடங்கி, கட்சிப் பதவி வரை எல்லாவற்றையும் கடும் போராட்டத்தின் விளைவாகத்தான் வென்றெடுத்தார். திமுகவே போராட்டத்தின் அடிப்படையில் உருவான கட்சி எனும் நிலையில், அக்கட்சியில் மிகப் பெரும் ஆளுமையாக உயர்ந்த கருணாநிதியும் அப்படி இருந்ததில் வியப்பில்லை. ஆளுங்கட்சியாக இருந்தபோது மத்திய அரசின் அடக்குமுறைகள், எதிர்க்கட்சியாக இருக்கும்போது மாநில அரசின் நெருக்குதல்கள் என்று வாழ்நாள் முழுவதும் போராடியவர் அவர்.
அண்ணா அளித்த கணையாழியைப் பெற்றுக்கொண்டபோது, ஈ.வி.கே.சம்பத் வடிவில் வந்த எதிர்ப்பில் தொடங்கி மெரினாவில் நல்லடக்கம் செய்யப்படும் வரையிலும் கருணாநிதிக்கு சவால்கள் இருந்துகொண்டே இருந்தன. திமுகவிலிருந்து பிரிந்து அதிமுகவை எம்ஜிஆர் தொடங்கிய பிறகு, ஒரு தசாப்தத்துக்கு ஆட்சிக்கே வர முடியாவிட்டாலும் போராட்டங்களின் வாயிலாகக் கட்சியை உயிர்ப்புடன் வைத்திருந்த தலைவர் கருணாநிதி. மறைந்த பின்னர், அண்ணாவுக்கு அருகில் அடக்கம் செய்யப்படவும் அவரது உடலே ஒரு போராட்ட வடிவமானது வரலாறு.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE