சிறைப் பறவைகள் விரிக்கும் நாடக சிறகுகள்!-  கைதிகளே நடத்தும் ‘சங்கல்பா’ கலைக் குழு

By காமதேனு

கா.சு.வேலாயுதன்
velayuthan.kasu@kamadenu.in

சிறைக் கைதிகள் நடத்தும் பெட்ரோல் பங்க், பேக்கரி பற்றியெல்லாம் வெளியாகும் செய்திகளைப் பார்த்திருப்பீர்கள். சிறைக் கைதிகள் நடத்தும் நாடகக் குழு பற்றிக் கேள்விப்பட்டதுண்டா? ஆம், அப்படி ஒரு நாடகக் குழு மைசூர் சிறையில் இயங்கிவருகிறது. ‘சங்கல்பா’ எனும் அந்தக் குழு, முழுக்க முழுக்க கைதிகளாலேயே இயக்கப்படுகிறது. 42 ஆயுள் தண்டனைக் கைதிகள் கொண்ட இக்குழுவில் 20 பேர் விடுதலையாகியிருக்க, மற்றவர்கள் உள்ளே இருக்கிறார்கள். இவர்கள் இணைந்து வெளி மேடைகளில் நாடகங்களை அரங்கேற்றி வருகிறார்கள். இதன் ஒருங்கிணைப்பாளரான அன்புராஜ், வீரப்பன் வழக்கில் 22 ஆண்டுகள் ஆயுள் தண்டனை அனுபவித்தவர் என்பது இன்னும் விசேஷம்.

‘ஒரு வருட காலத்துக்கு ஊடகங்களிடம் பேசக் கூடாது’ என்ற நன்னடத்தை விதிமுறையோடு 2016 ஆகஸ்டில் விடுதலை செய்யப்பட்ட அன்புராஜ், நாடகக் குழு, இயற்கையைக் காக்கும் பயணங்கள் என்று தொடர்ந்து இயங்கிவருபவர். அந்தியூரில் அவரைச் சந்தித்துப் பேசியபோது தனது சிறை வாழ்க்கை, கலைப் பயணம் என்று பல்வேறு விஷயங்களைப் பகிர்ந்துகொண்டார்.

“ரொம்ப ஏழ்மையான குடும்பம் சார். மதிய சாப்பாடு கிடைக்குமேன்னு பள்ளிக்கூடம் போன ஆளு நான். அப்படியும், ஆறாம் வகுப்பு வரைக்கும்தான் படிக்க முடிஞ்சது. எனக்கு 16 வயசு இருக்கும்போது நடந்த சம்பவம் என் வாழ்க்கையையே புரட்டிப் போட்டுடுச்சு. அப்பா அம்மா சந்தைக்குப் போயிட்டாங்க. நானும், அண்ணனுக ரெண்டு பேரும் மாடு ஓட்டிட்டுப் பாங்காட்டுக்குப் போனோம். அப்ப எங்க மூணு பேரையும் வீரப்பன் ஆளுக புடிச்சுட்டுப் போயிட்டாங்க. அப்ப அவங்க சரண்டர் ஆகற எண்ணத்துல இருந்தாங்க. அதுக்காகத் தகவல் கொண்டு போறது, ஆள் கடத்தல் செஞ்சு கோரிக்கை வைக்கிற வேலைகள்னு எங்களை மூணு வருஷம் பயன்படுத்திக்கிட்டாங்க. ஆனா, தமிழ்நாட்டுலயும் கர்நாடகத்துலயும் அரசியல் சூழல் அவங்க சரண்டர் ஆக சாதகமா இல்லை. ஒரு கட்டத்துல நாங்க மட்டும் சரண்டர் ஆனோம்’’ என்று அந்த அனுபவத்தை விலாவாரியாகச் சொன்னவர் சிறை கற்றுத் தந்த பாடங்களையும் விவரிக்கிறார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE