பி. சுவாமிநாதன்
swami1964@gmail.com
மனிதனுடைய இறுதிப் பயணம் நன்றாக நடக்க வேண்டும் என்பதற்காகத் தொண்டு உள்ளத்தோடு அந்த இடத்துக்குச் செல்ல வேண்டும் என்கிறார் மகா பெரியவா!
ஒருவர் உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கிறார்... பிராணாவஸ்தையுடன் இருக்கிறார் என்கிற தகவல் கேள்விப்பட்டவுடன் அடுத்த கணமே அங்கே புறப்பட்டுவிட வேண்டும். அங்கே சென்றவுடன் நாம ஜபம் செய்து அவரது இறுதி நேரத்தில் இறை சிந்தனையிலேயே வைத்திருக்க வேண்டும். குடும்பத்தில் இருக்கிற அனைவருக்கும் ஆறுதல் சொல்லி, அடுத்தடுத்து ஆக வேண்டிய காரியங்களைப் பார்க்க வேண்டும் என்று நமக்கெல்லாம் உத்தரவிடுகிறார் பெரியவா.
மகா பெரியவா சொல்கிறார்...
‘‘தொண்டு உள்ளத்தோடு இருந்து வருகிறவர்கள் நமக்கு அழைப்பு வர வேண்டும்... வந்தால்தான் புறப்படுவேன் என்று காத்திருக்கக் கூடாது. அவர்கள் கூப்பிடாவிட்டாலும் ஓடிப் போக வேண்டும். பிராணாவஸ்தையுடன் சிரமப்பட்டுக் கொண்டிருக்கிற ஆத்மாவுக்கு விபூதி, குங்குமம், கங்கா ஜலம் போன்றவற்றை வழங்க வேண்டும்.
கடைசி நேரத்தில் ஜீவன் பிரிவதற்கு இப்படிக் கஷ்டப்பட்டுக் கொண்டிருப் பவர் ஒருவேளை நாத்திகராக இருந்து அவர்கள் குடும்பத்தில் இருந்து எவரேனும் ஆட்சேபம் தெரிவிக்க நேரிடலாம். ‘உங்களது நாம ஜபம் தேவை யில்லை’ என்று உதாசீனப்படுத்தலாம். அப்படிப்பட்ட சூழ்நிலையில் எதற்காக வந்திருக்கிறோம் என்கிற விஷயத்தை மெல்ல எடுத்துச் சொல்லிப் புரிய வைக்க லாம். அவ்வளவு தூரம் எடுத்துச் சொல்லியும் அந்தக் குடும்பத்தில் எவரும் கேட்க வில்லை என்றால், சத்தம் போடாமல் திரும்பி விடலாம்.
திரும்பிவிட்டால் உங்கள் கடமை முடிந்ததாக அர்த்தம் இல்லை. அத்தகைய சந்தர்ப்பத்திலும் உங்களது கடமையில் இருந்து நீங்கள் பின்வாங்கக் கூடாது. எப்படித் தெரியுமா? இறக்கப் போகிற அந்த ஜீவனுக்கான பிரார்த்தனையை நமக்குள் செய்து கொள்ள வேண்டும்.
ஆக மொத்தத்தில், மான அவமானம் பார்க்காமல் அவரவர்களால் முடிந்த தொண்டை செய்துகொண்டே இருக்க வேண்டும். பிரயத்தனப்பட வேண்டும். மான அவமானம் என்று பார்க்க ஆரம்பித்து விட்டால், அது தொண்டே இல்லை.
‘புறப்பாடு’ இன்னும் சற்று நேரத்தில் நடக்கிற இடத்தில் செய்ய வேண்டியது ரொம்ப ‘சிம்பிள்’...
‘‘பிராணாவஸ்தையுடன் உயிர் பிரிவதற்காகக் காத்துக்கொண்டிருக்கிறார் அல்லவா? அவரிடம் நீங்கள் எடுத்துச் சென்ற பிரசாதத்தில் சிறிதளவு ... அது கங்கா ஜலமோ, துளசி ஜலமோ அதை அவர்கள் வாயில் விட வேண்டும். விபூதியோ, குங்குமமோ அவர்கள் நெற்றியில் இட வேண்டும். பிறகு பிரியப் போகிற அந்த ஜீவனின் அருகே அமர்ந்து கொண்டு ‘சிவ சிவ சிவ’ என்கிற நாமத்தையோ, அல்லது ‘ராம ராம ராம’ என்கிற நாமத்தையோ விடாமல் சொல்ல வேண்டும்.
இந்த நாமத்தை சும்மா உங்கள் வாய்க்குள்ளேயே முணுமுணுத்தபடி இருக்கக் கூடாது. சத்தம் போட்டுச் சொல்ல வேண்டும். ஏன் உரக்கச் சொல்ல வேண்டும் என்றால், அப்போதுதான் அந்த நாம ஓசையானது ஜீவனின் காதில் படும். காதிலே பட்டுவிட்டால், கடைசி நேரத்தில் மனசானது இறைவன் பக்கம் திரும்பும்.
அந்த உயிர் பிரிகிற வரையில் அங்கேயே அமர்ந்துகொண்டு இப்படி நாம ஜபம் செய்வது உசிதம்.
இதிலே இன்னொரு சங்கடமும் இருக்கிறது. பிராண அவஸ்தையில் ஒரு ஜீவன் மணிக்கணக்காக இழுத்துக்கொண்டே இருந்தால் என்ன செய்வது? நாம ஜபம் ஒரு பக்கம் செய்துகொண்டே இருப்பீர்கள்... ஆனால், பிராணன் பிரிவதாக இருக்காது. இழுத்துக்கொண்டே இருக்கும். சட்டென்று அடங்காது.
அதே சமயம் நமக்கு மற்ற வேலைகளும் இருக்கத்தானே செய்யும். அதுபோன்ற சந்தர்ப்பங்களில் அருகே இருக்கிற அவரின் உறவினர் யாராவது ஒருவரிடம் விஷயத்தைச் சொல்லி முறை போட்டு அவர்கள் தொடர்ந்து ஜபம் செய்யுமாறு சொல்லிவிட்டுப் புறப்பட வேண்டும். அதன் பின் அவர்கள் பொறுப்பு என்கிற நிம்மதி நமக்கு...
இதில் நமக்கு என்ன நிம்மதி என்று தோன்றுகிறதா? ‘பிராணன் பிரிகிற வரையில் நாம ஜபம் செய்யுமாறு ஏற்பாடு செய்துவிட்டுப் புறப்படுகிறோம்’ என்கிற கடமை உணர்வுதான். நம் கடமையைச் சரிவரச் செய்தோம் என்கிற திருப்தி நமக்கு.
ஜீவன் பிரிகிற வேளையில் சிவ நாமாவோ, ராம நாமாவோ 1008 தடவையாவது சொல்லவேண்டும். இப்படி ஒருத்தர் மட்டுமல்லாமல் பலரும் அந்த இடத்தில் தொடர்ந்து நாமாவைச் சொன்னதன் பலன்.. அது ஜீவனுக்குள் போய், பகவானை நினைத்துக் கொண்டிருக்கும்படியாகச் செய்துவிடும். அதன்பின் பகவான் அருளுடன் சிக்கல் இல்லாமல் அந்த ஜீவனின் பிராணன் பிரிந்து விடும்.’’
ஒரு உயிர் பிரிகிற வேளையில் எப்படிப் பிரிய வேண்டும் என்று மகா பெரியவா ஆசைப்படுகிறார் பாருங்கள்!
நாம ஜப சிந்தனையோடு ஜீவன் பிரிந்தால், அதற்கு மறுபிறவி இல்லை. மறுபிறவி இல்லை என்றால், அனைவரும் இறைவனோடு இரண்டறக் கலந்து விடலாம்.
அதனால்தான், வாழுகின்றபோதே பகவானின் நாமத்தை எத்தனை முறை சொல்ல முடியுமோ, அத்தனை முறை நாம் உச்சரித்துக் கொண்டிருக்க வேண்டும் என்று சொல்லப்படுகிறது.
இனி, மகா பெரியவாளின் அருளுக்குப் பாத்திரமான ஒரு பக்தருக்கு நேர்ந்த மோட்ச கதி அனுபவத்தை இப்போது பார்க்கலாம்.
முதுமையின் துவக்கத்தில் இருப்பவர் அவர்.. அவருக்கென்று யாருமே இல்லை. உற்றார், உறவினர் என்று சொல்லிக் கொள்ளும்படி யாருமே இல்லை.
பண வசதியும் இல்லை. ஏதோ கையிருப்பை வைத்துக் காலத்தை ஓட்டிக் கொண்டிருந்தார்.
அக்கம்பக்கத்தில் இருப்பவர் ஒருவர் சாப்பாடு கொண்டு வந்து கொடுத்து விடுவார். அதற்கு ஏதோ ஒரு தொகை கொடுப்பார்.
ஒண்டிக்கட்டை. எப்போதும் தனியாக இருந்தால், நிறைய விஷயங்கள் யோசனையில் வந்து வந்து போகும்.
தனிமை, சில விஷயங்களில் சுகம் என்றாலும், பல சந்தர்ப்பங்களில் சுமை.
தனியே இருக்கின்ற பல நேரங்களில் இவரை ஆட்கொள்கிறவர் யார் தெரியுமா?
மகா பெரியவா!
இவரது சிந்தனையில் அந்த மகான் அடிக்கடி வந்து போவார். தான் நன்றாக இருந்த காலத்தில் மகா பெரியவாளை நேரில் சென்று பல முறை தரிசித்திருக்கிறோமே... இப்போது அதுபோல் தரிசிக்க முடியவில்லையே என்று அவருக்குள் ஒரு ஏக்கம் பல நாட்களாகவே ஓடிக் கொண்டிருந்தது.
ஒரு வாடகை கார் வைத்துக்கொண்டு காஞ்சிபுரம் போய் அந்த மகானை தரிசித்துவிட்டு வரலாம் என்றாலும், சவாரிக்குக் கொடுப்பதற்குக் கையில் காசில்லை.
ஒவ்வொரு நாள் கரைகிறபோதும், ‘மகா பெரியவாளை எப்போது தரிசிக்கப் போகிறேனோ... எமன் என்னை இழுத்துக்கொண்டு போவதற்குள் அந்த மகானை என்னால் தரிசித்து விட முடியுமா? எமன் என்னை நெருங்குவதற்குள் அந்தப் பரப்பிரம்மத்தை தரிசித்து விட வேண்டுமே’ என்று நித்தமும் பொழுது விடிகிறபோது நினைப்பார்.
ஆனால், நாட்கள் ஓடிக் கொண்டிருந்தனவே தவிர, முதியவரது எண்ணம் நிறைவேறவில்லை. மகானை நேரில் தரிசிப்பதற்கு வாய்ப்பு அமையவே இல்லை.
ஆனாலும், தன் பிரார்த்தனையை அவர் விடவில்லை. தினமும் மகா பெரியவா திருவுருவப் படத்தின் முன் நின்று கண்ணீர் மல்கப் பிரார்த்திப்பார். ‘எமன் என்னைக் கொண்டு போறதுக்கு முன்னாடி உன்னோட தரிசனம் எனக்கு வேணும். உன்னை தரிசனம் செய்த சந்தோஷத்தோட நான் போகணும்’ என்று!
ஆத்மார்த்தமாக வைக்கக்கூடிய பிரார்த்தனைகளுக்கு என்றுமே பலன் உண்டு அல்லவா!
முதியவரது பிரார்த்தனைக்கு கருணையே வடிவான காஞ்சி மகான் அருள வேண்டிய வேளையும் வந்தது.
ஆம்!
அன்றைய தினம் காலை ஆகாரத்தை முடித்துவிட்டு, சற்று ஆசுவாசப்படுத்திக் கொள்ளலாம் என்று முதியவர் தீர்மானித்த வேளையில், வீட்டு வாசல் கதவு தட்டப்படுகிற சத்தம் கேட்டது.
மெல்ல தடுமாறி நடந்து வாசலுக்குச் சென்றார்.
கதவைத் திறந்தார்.
வாசல் கதவு அருகே விபூதிப் பட்டையுடன் பஞ்சக்கச்ச வேட்டியுடன் ஒருவர் நின்று கொண்டிருந்தார். முதியவரைப் பார்த்தவுடன் மரியாதை நிமித்தம் கைகளைக் கூப்பினார்.
அவருக்கு அருகே ஒரு கார் நின்று கொண்டிருந்தது.
என்ன ஏதென்று முதியவர் கேட்பதற்கு சந்தர்ப்பமே கொடுக்காமல், வந்தவர் ஆரம்பித்தார்.
‘‘உங்களை காஞ்சிபுரம் அழைச்சிண்டு வரும்படி மகா பெரியவா உத்தரவு.’’
(ஆனந்தம் தொடரும்)