கே.கே.மகேஷ்
magesh.kk@kamadenu.in
ஆள், அம்பு, சேனையுடன் பணபலமும் கொண்ட அமமுகவே புறக்கணித்துவிட்ட போதிலும், வேலூர் இடைத்தேர்தலில் தைரியமாகக் கறமிறங்கியிருக்கிறது நாம் தமிழர் கட்சி. தேர்தல் பரப்புரைக்காக மதுரையில் இருந்து பயணப்பட்டுக் கொண்டிருந்த சீமானை பேட்டிக்காகத் தொடர்பு கொண்டேன். "என்னப்பா, வரிச்சியூர் செல்வம்லாம் ஒரு ஆளுன்னுட்டு அவரையெல்லாம் போய் உயிரைக் குடுத்து பேட்டியெடுத்திருக்கிற? புஹாஹாஹாஹா..." என்று தன் ட்ரேட் மார்க் கேலிச் சிரிப்புடன் கேள்விகளை எதிர்கொண்டார்.
எந்தத் தைரியத்தில் வேலூரில் நாம் தமிழர் கட்சி போட்டியிடுகிறது?
சிலர் போட்டியிடக்கூட தைரியமில்லாமல் பின்னடைந்துவிட்டார்களே... நாங்கள் என்ன வீடுவீடாக கணக்கெடுத்து காசா கொடுக்கப் போகிறோம்? பரப்புரைக்கான வார்த்தைகள்தான் எங்கள் செலவு. ஒரு விளையாட்டில் தவறு செய்கிற வீரர்களை வெளியேற்ற வேண்டுமே தவிர, மொத்த விளையாட்டையுமே நிறுத்தக்கூடாது. பணம் கொடுத்த வேட்பாளர்களை மட்டும் வெளியேற்றியிருந்தால் இந்தத் தேர்தலில் நாங்கள்தான் வெற்றியாளர்கள். ஏனென்றால், போட்டியிடுகிறவர்களில் மூன்றாவது வலிமையான ஆற்றல் நாங்கள்தான்.