பேசும் படம் - 32: மார்ட்டின் லூதர் கிங்கின் கடைசி நிமிடங்கள்

By பி.எம்.சுதிர்

இருபதாம் நூற்றாண்டில் உலகம் கண்ட மிகச்சிறந்த தலைவர்களில் ஒருவர் மார்ட்டின் லூதர் கிங் ஜூனியர். அமெரிக்காவில் கறுப்பின மக்கள் இன்று அனுபவித்துவரும் பல்வேறு உரிமைகளுக்கு மூலகாரணமாக இருந்த இவர், வெள்ளை இன தீவிரவாதியால் சுட்டுக் கொல்லப்பட்ட தருணத்தைத்தான் இங்குள்ள படத்தில் பார்க்கிறீர்கள். இப்படத்தை எடுத்தவர் தென் ஆப்பிரிக்க புகைப்படக்காரரன ஜோசப் லோ (Joseph Louw).
பல நூற்றாண்டுகளுக்கு முன் அமெரிக்காவில் குடியேறிய ஐரோப்பியர்கள், தங்கள் பண்ணைகளில் வேலை செய்வதற்காக ஆப்பிரிக்காவிலிருந்து கறுப்பு இன மக்களை அழைத்துச் சென்றனர். காலப்போக்கில் கறுப்பின மக்களின் உழைப்பால் அமெரிக்கா 
வளர்ந்தாலும், அவர்களின் வாழ்க்கை மாறவில்லை. வெள்ளை இன மக்களின் அடிமைகளைப்  போன்றே அவர்கள் வாழ்ந்தனர். பேருந்துகளில் ஐரோப்பியர்களுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் அமரக் கூடாது, அவர்களுக்கான விடுதிகளில் சாப்பிடக் கூடாது எனப் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன.

இந்தக் கொடுமைகளிலிருந்து கறுப்பின மக்களை மீட்க வந்தவர்தான் மார்ட்டின் லூதர் கிங் ஜூனியர். 1929-ம் ஆண்டு அட்லாண்டாவில் பிறந்த இவர், தன் வாழ்நாள் முழுவதும் கறுப்பின மக்களின் உரிமைக்காக அகிம்சை வழியில் போராடினார். 1965-ம் ஆண்டில் கறுப்பின மக்களுக்கு அமெரிக்கத் தேர்தலில் வாக்குரிமையைப் பெற்றுத்தந்தார். இதே வழியில் கறுப்பின மக்களுக்கு மேலும் பல சலுகைகளைப் பெற்றுத்தர போராடிக்கொண்டு இருந்த சமயத்தில்தான் வெள்ளை இன தீவிரவாதி ஒருவரால் 1968-ம் ஆண்டு ஏப்ரல் 4-ம் தேதி மெம்பிஸ் நகரில் சுட்டுக் கொல்லப்பட்டார்.

மார்ட்டின் லூதர் கிங் ஜூனியர் சுடப்பட்ட பிறகு அப்பகுதியில் நிகழ்ந்த சம்பவங்களைப் படம்பிடித்த ஒரே புகைப்படக்காரர் ஜோசப் லோ. மார்ட்டின் லூதர் கிங்கைப் பற்றிய டாக்குமென்டரி படம் ஒன்றை எடுக்க பல மாதங்களாக அவருடனேயே சுற்றிவந்த நிலையில் இந்தப் படங்களை ஜோசப் லோ எடுத்துள்ளார். மார்ட்டின் லூதர் கிங் கொல்லப்பட்ட நாளைப் பற்றியும், அன்றைய தினம் தான் எடுத்த படங்களைப் பற்றியும் பின்னாளில் புகழ்பெற்ற லைஃப் பத்திரிகைக்கு விலாவாரியாக பேட்டி கொடுத்துள்ளார் ஜோசப் லோ.
“அன்றைய தினம் இரவு உணவை சீக்கிரமாக முடித்துவிட்டு, செய்திகளைப் பார்ப்பதற்காக என் அறைக்குத் திரும்பினேன். மார்ட்டின் லூதர் கிங் தங்கியிருந்த அறைக்கு சில அறைகள் தள்ளி எனது அறை இருந்தது. என் அறையில் இருந்த தொலைக்கட்சியில் மார்டின் லூதர் கிங், முன்தினம் ஒரு நிகழ்ச்சியில் ஆற்றிய உரை ஒளிபரப்பாகிக் கொண்டிருந்தது. கறுப்பின மக்களின் முன்னேற்றத்துக்காகத் தனது உயிரைக் கொடுக்கவும் தயார் என்று அந்த உரையில் மார்ட்டின் லூதர் கிங் சொல்லிக்கொண்டிருந்தார்.

அச்சமயத்தில் வெளியில் ஏதோ வெடிக்கும் சத்தம் கேட்டது. அத்துடன் மக்கள் ஓடும் காலடி ஓசையும் கேட்டது. நான் வெளியில் ஓடிவந்து பார்த்தேன். என் அறைக்கதவில் இருந்து சுமார் 40 அடிகள் தள்ளியிருந்த பால்கனியில், மார்ட்டின் லூதர் கிங் சுடப்பட்டு கிடந்தார். அவருக்கு அருகே நின்றிருந்தவர்கள் துப்பாக்கி வெடித்த திசையைக் காட்டி ஏதோ பேசிக்கொண்டிருந்தார்கள். அந்தச் சாலையே மிகவும் பரபரப்பாக இருந்தது. அந்தச் சூழலில் அங்கு போனாலும் அவருக்கு உதவ முடியாது. என்றாலும் அந்தச் சம்பவத்தை படங்களின் வாயிலாக உலகுக்குச் சொல்ல வேண்டும் என்ற ஆவலிலும் நான் அவற்றைப் படமெடுக்க நினைத்தேன். என் அறைக்குள் நுழைந்து கேமராவை எடுத்துவந்து காட்சிகளை விரைவாகப் படம்பிடிக்கத் தொடங்கினேன்.
அப்போது இருந்த சூழலில், என்னால் மார்ட்டின் லூதர் கிங்குக்கு அருகில் சென்று அவரது  முகத்தைப் படமெடுத்திருக்க முடியும். ஆனால், அந்த மாபெரும் மனிதரை அந்தக் கோலத்தில் க்ளோசப்பில் படமெடுக்க நான் விரும்பவில்லை. அதனால் நான் தள்ளியிருந்தே படங்களை எடுத்தேன். அன்றைய இரவு மட்டும் மொத்தம் 4 ரோல் படங்களை எடுத்தேன். பின்னர் ஸ்டுடியோவுக்கு சென்று அந்தப் படங்களை டெவலப் செய்து பத்திரிகைகளுக்கு அனுப்பினேன்” என்று அன்றைய தினம் நடந்த சம்பவங்களைப் பற்றிச் சொல்கிறார் ஜோசப் லோ. சர்வதேச அளவில் பல பத்திரிகைகளில் அந்தப் படங்கள் வெளியாக லோ புகழ்பெற்றார்.
மார்ட்டின் லூதர் கிங்கின் கொலையாளியைத் தேடி அமெரிக்க போலீஸார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர். இறுதியில் இந்தக் கொலை தொடர்பாக ஜேம்ஸ் ஏர்ல் ரே (James Earl Ray) என்பவரை 1968-ம் ஆண்டு ஜூன் மாதத்தில் போலீஸார் கைது 
செய்தனர்.

ஜோசப் லோ

தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்தவரான ஜோசப் லோ, 1945-ம் ஆண்டு பிறந்தார். கொலம்பியா பல்கலைக்கழகத்தில் படித்து பட்டம் பெற்ற இவர், பின்னாளில் பப்ளிக் பிராட்காஸ்டிங் லெபாரட்டரி என்ற நிறுவனத்துக்காக மார்ட்டின் லூதர் கிங்கைப் பற்றி டாக்குமென்டரி படம் எடுக்க ஒப்பந்தம் செய்யப்பட்டார். இதற்காகப் பல மாதங்கள் இவர் மார்ட்டின் லூதர் கிங்குடன் இணைந்து பயணம் செய்து, அவரைப் படம் எடுத்துள்ளார். மார்ட்டின் லூதர் கிங்கின் கொலையைப் படம் எடுத்ததால் இவர் உலகப் புகழ் பெற்றார். இந்தப் படங்களை விற்றதால் கிடைத்த தொகையை சமூக உரிமைகளுக்காகப் போராடிய அமைப்புகளுக்கு வழங்கிய இவர், 2004-ம் ஆண்டு காலமானார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE