தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தலுக்கான அறிவிப்பாணை அக்டோபர் இறுதிக்குள் வெளியிடப்படும் என்று தமிழகத் தேர்தல் ஆணையம் உச்ச நீதிமன்றத்திடம் தெரிவித்திருக்கிறது. இவ்விஷயத்தில் தமிழக அரசும் மாநிலத் தேர்தல் ஆணையமும் நீதிமன்றங்களில் பல முறை கண்ணாமூச்சி ஆட்டம் ஆடியிருக்கிறார்கள். இந்நிலையில், இம்முறையாவது உள்ளாட்சித் தேர்தல் உறுதியாக நடைபெறுமா என்ற கேள்வி மக்கள் மத்தியில் எழுந்திருக்கிறது.
2016 அக்டோபரிலிருந்து உள்ளாட்சி அமைப்புகளுக்கான பதவிகள் காலியாகக் கிடக்கின்றன. மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின்படி, உள்ளாட்சிப் பிரதிநிதிகளின் பதவிக் காலம் முடிவடையும் முன்பே தேர்தல் நடத்தப்பட வேண்டும். ஆனால், வழக்குகள், நடைமுறைச் சிக்கல்கள் என்று பல்வேறு காரணங்களால் அது தள்ளிப்போடப்பட்டு வருகிறது. இதற்கு யார் காரணம் என்று அரசும் எதிர்க்கட்சிகளும் பரஸ்பரம் குற்றம்சாட்டிக் கொள்வது இன்னும் வேதனை.
இதன் காரணாமக, உள்ளாட்சி அமைப்புகளுக்கு வரவேண்டிய நிதி கிடைக்காமல் அடித்தட்டு மக்களின் அடிப்படை சுகாதார வசதிகள் தொடங்கி பல்வேறு பணிகள் முடங்கிக் கிடக்கின்றன. எதிர்க்கட்சிகளும் சமூக ஆர்வலர்களும் பல முறை சுட்டிக்காட்டியும் தமிழக அரசோ, தேர்தல் ஆணையமோ இதன் தீவிரத்தை உணர்ந்ததாகவே தெரியவில்லை. தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் வசம் இருக்க வேண்டிய அதிகாரம், தொடர்ந்து தனி அலுவலர்கள் கையில் இருப்பதால் யாரைக் கேள்வி கேட்பது என்று தெரியாமல் தவித்து நிற்கிறார்கள் மக்கள்.
உள்ளாட்சித் தேர்தலை நடத்தாத காரணத்தால், 2016-17 நிதியாண்டிலிருந்து தமிழகத்துக்குச் செயலாக்க மானியம் வழங்கப்படவில்லை என்று மக்களவையில், மத்திய பஞ்சாயத்து ராஜ் அமைச்சர் கூறியிருப்பது ஒன்றே போதும் இந்தப் பிரச்சினையின் தீவிரத்தை உணர்த்த.