என்.சுவாமிநாதன்
swaminathan.n@kamadenu.in
கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டத்தின் மட்டாஞ்சேரியில் உள்ள ‘யசோதா நூலகம்’ கேரளத்தின் சாமானியர்கள் முதல் முக்கியப் புள்ளிகள் வரை பலரின் கவனத்தை ஈர்த்திருக்கிறது. முதல் காரணம், எந்தவிதமான கட்டணமும் இங்கு வசூலிக்கப்படுவதில்லை. இரண்டாவது காரணம், இந்த நூலகத்தைத் தொடங்கியிருப்பது யசோதா எனும் ஏழாம் வகுப்பு மாணவி. தன் வீட்டு மாடியிலேயே இந்த நூலகத்தை நடத்திவருகிறார். ஆச்சரியமாக இருக்கிறதா? வாருங்கள் யசோதாவைச் சந்தித்துப் பேசலாம்.
கனவு தொடங்கிய கதை
நூலகத்தில், வைக்கம் முகமது பஷீரின் ‘சம்பூர்ணக் கிருதிகள்’ என்னும் மலையாளக் கதைத் தொகுப்பை வாசித்துக்கொண்டிருக் கிறார் யசோதா. நூலகத்தின் அங்கத்தினர்கள் சிலர் புத்தகம் எடுக்க வருவதைப் பார்த்ததும், புத்தகத்தை மூடிவைத்துவிட்டு, அவர்களது உறுப்பினர் அட்டையை எடுத்துக் கொடுக்கிறார். அவர்கள் எடுக்கும் புத்தகங்களைக் குறிப்பேட்டில் பதிவு செய்துகொள்கிறார்.