ஹாட் லீக்ஸ்: ஜோதிடருக்கே ஜாதகம் பார்த்த ரஜினி ரசிகர்கள்

By காமதேனு

ரெண்டு நம்பரும் அவுட்டு!

தேசத்துரோக வழக்கில் தண்டிக்கப்பட்ட வைகோவை மாநிலங்களவை உறுப்பினராகப் பதவியேற்கவிடக் கூடாது என்று துணை ஜனாதிபதிக்கே மனு கொடுத்தார் சசிகலா புஷ்பா . அப்போதிருந்தே அவருக்கு போன் மேல் போனாம். கண்டங்கள் தாண்டி அவருக்கு போன் போட்டு புரட்சி வார்த்தைகளால் புரட்டி எடுத்துவிட்டார்களாம் வைகோவின் அபிமானிகள். இதனால், தான் பயன்படுத்தி வந்த இரண்டு செல்போன் எண்களையும் ஓரங்கட்டிவிட்டு புதிதாக ஒரு எண்ணை வாங்கிப் பயன்படுத்தி வருகிறாராம் சசிகலா புஷ்பா. இன்னொரு கொசுறு தகவல், சசிகலாவிடம் விவகாரத்துப் பெற்ற அவரது முதல் கணவர் லிங்கேஸ்வரன் சசிகலாவிடமே திரும்பி வந்துவிட்டாராம். மதிமுக தம்பிகள் சிலரின் போன் கால்களுக்கு பதில் சொல்லி சமாளித்ததே லிங்கம் தானாம்!

ஜோதிடருக்கே ஜாதகம் பார்த்த ரஜினி ரசிகர்கள்

 “ரஜினி முதலமைச்சர் ஆக மாட்டார். அவருக்கு கண்டம் இருக்கிறது. அதனால் அரசியலுக்கு வருவதில் இருந்து பின்வாங்குவார்” என சேலம் ஜோதிடர் பாலாஜி ஹாசன் மீடியாக்களிடம் சொன்னாலும் சொன்னார். ரஜினி ரசிகர்கள் ஜோதிடரின் ஆதி அந்தத்தை எல்லாம் தோண்ட ஆரம்பித்துவிட்டார்கள். “ஜெயலலிதா உடல்நலக்குறைவு, அவரது இறப்பு, உலகக்கோப்பை முடிவு அனைத்தையும் துல்லியமாக கணித்துச் சொல்லி இருக்கும் பாலாஜியின் வாக்கு ரஜினி விஷயத்தில் மட்டும் எப்படி பொய்யாகிப் போகும்?” என்று பலரும் சமூக வலைதளத்தில் கருத்துச் சொல்ல, ரஜினி ரசிகர்களோ, “எல்லாம் சரி... ஆனால் அவரு ஸ்டாலின்தான் அடுத்த முதல்வர்னு சொல்றாரே; அதுதானே இடிக்குது” என்று கேள்வி எழுப்பியதுடன், ஜோதிடர் பாலாஜியின் சமூக வலைதள பக்கங்களில் ஸ்டாலின், கனிமொழி, துர்கா ஸ்டாலின் ஆகியோருடன் அவர் இருக்கும் படங்களைத் தேடி எடுத்துப் பதிவிட்டு, “இவர் திமுக குடும்ப ஜோதிடரா... திமுகவின் பிரச்சார பீரங்கியா?” என்றெல்லாம் கேள்வி எழுப்பி ரகளைகட்டி வருகிறார்கள்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE