கண்ணான கண்ணே- 22

By ருஜுதா திவேகர்

குழந்தைகளை அச்சுறுத்தும் தொற்றா நோய்கள் பட்டியலில் முதலிடம் ஃபேட்டி லிவர் (Fatty Liver) எனப்படும் கல்லீரல் சுருக்க நோய்க்கு என்றால் இரண்டாவது இடம் சர்க்கரை நோய்க்கு.
இரண்டும் ஒன்றுடன் ஒன்று தொடர்பு கொண்டவை. மேலும், ஃபேட்டி லிவர், சர்க்கரை நோய் போன்ற நோய்கள் எல்லாமே வாழ்வியல் முறை சார்ந்தவை.  
ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரித்தல், வைட்டமின் பி-12 குறைபாடு, வைட்டமின் டி குறைபாடு, ஹீமோகுளோபின் அளவு குறைதல் போன்றவை சரியான வாழ்வியல் முறையைப் பின்பற்றாத குழந்தைகளுக்கு ஏற்படுகிறது. அதுவும் பெண் பிள்ளைகளுக்கு அவர்கள் பூப்பெய்தும் காலத்தை ஒட்டி இத்தகைய குறைபாடுகள் ஏற்படுகின்றன.
ஃபேட்டி லிவர், சர்க்கரை நோயை முறையான உணவுப் பழக்கவழக்கத்தாலும் கட்டுப்படுத்தலாம். அப்படி உங்கள் குழந்தைகள் பின்பற்ற வேண்டிய சில பழக்கவழக்கங்களைப் பட்டியலிடுகிறேன்.
1. வீட்டில் தயாரிக்கப்பட்ட தயிர். தனியாகவோ அல்லது சாதத்துடனோ சேர்த்துச் சாப்பிடலாம்.
2. ஒரு கை நிறைய முந்திரிப் பருப்பு, ஆளிவிதையில் செய்யப்பட்ட லட்டு கொடுக்கலாம்.
3. ஒவ்வொரு வேளை உணவிலும் நெய். குறைந்தது ஒருநாளைக்கு 6 ஸ்பூனாவது நெய் சேர்த்துக் கொள்வது நலம்.
4. வைட்டமின் பி 12, வைட்டமின் டி, கால்சியம் சிட்ரேட் சப்ளிமென்ட்ஸ் எடுத்துக் கொள்ள வேண்டும்.
5. வாரம் ஒரு முறையாவது உடற்பயிற்சி செய்ய பழக்கப்படுத்துங்கள். ஒருவேளை ஜிம்முக்கு அனுப்பினால் உங்கள் ட்ரெய்னர் சரியான முறையில் கற்றுக் கொடுக்கிறார்களா என்பதைக் கண்காணிக்க மறவாதீர்கள்.
சரியான உணவுப் பழக்கவழக்கம், சீரான தூக்கம், உடற்பயிற்சி எனக் குழந்தைகளைப் பழக்கப்படுத்தினால் இளம் வயது சர்க்கரை நோய் விட்டோடும். எட்டாம் வகுப்பு படிக்கும் சிறுவன் ஒருவன் என்னிடம் சர்க்கரை நோய்க்கு டயட் அறிவுரை கோரி வந்தான். இப்போது அந்தப் பையனுக்கு 24 வயது. ஆனால், நான் சொன்னபடி சரியான உணவுப் பழக்கவழக்கத்தைப் பின்பற்றுவதால் அவருக்கு சர்க்கரை நோய் பாதிப்பு முற்றிலுமாக அகன்றுவிட்டது.
வாய் மற்றும் பற்களின் சுத்தத்தை பேணுவோம்...
பொதுவாக நம் உடலில் மற்ற உறுப்புகளின் ஆரோக்கியத்திறகு நாம் கொடுக்கும் முக்கியத்துவத்தை பற்களுக்கும் வாய்க்கும் கொடுப்பதில்லை. உண்மையில் பல் நோய் பல நோய்களின் அறிகுறி. முதல் 10 வயதுக்குள் குழந்தைகளுக்கு சொத்தைப் பல் வராமல் பராமரிப்பது பெற்றோரின் தலையாய கடமை. பால் பற்களில் சேதம் ஏற்படாமல் பாதுகாக்கவும். குழந்தைகளின் பால் பல்லில் சொத்தை, ரத்தம் கசியும் ஈறுகள் ஆகியன உங்கள் குழந்தையின் வாய் சுத்தத்தை நோக்கி கூக்குரலிடுகிறது என்பதற்கான அடையாளம்.
ஆஸ்திரேலிய அபோரிஜினிக்கள் ஆரோக்கியம் நிறைந்தவர்களாக இருந்தனர். ஆனால், என்று நாகரிகம் அவர்களை அபகரித்ததோ அன்றே அவர்களின் ஆரோக்கியமும் பறிபோனது. உள்ளூரில் விளையும் காய் கனிகளை உண்டு ஓடியாடி வேலை பார்த்தபோது அவர்களின் பற்கள் இருந்த ஆரோக்கியத்திற்கும் மேஜையில் அமர்ந்து ஓட்ஸ், கார்ன் ஃப்ளேக்ஸ் போன்ற சீரில்களைச் சாப்பிடும்போது அவர்கள் பற்கள் கொண்டுள்ள ஆரோக்கியத்திற்கும் அதிக வித்தியாசம் உள்ளது. எப்போதெல்லாம் நாம் பேக்கேஜ்ட் ஃபுட் பின்னால் ஓடுகிறோமோ அப்போதெல்லாம் ஆரோக்கியம் நம்மைவிட்டு ஓட்டம் பிடிக்கிறது என்பதை அறிந்து கொள்வோம்.
வாய் ஆரோக்கியம் காக்கும்
உணவுப் பழக்கங்கள் - சில டிப்ஸ்:
1. உள்ளூரில் விளைவிக்கப்பட்ட அந்தந்தப் பருவத்திற்கேற்ற பழங்கள்.
2. வெண்ணெய் மறவாதீர். வெண்ணெய்யில் பற்களின் மினரல் அடர்த்திக்குத் தேவையான மினரல்கள் இருக்கின்றன.
3. சிறு தானியங்கள், கீரைகள்.
4. போதிய அளவு தண்ணீர் குடித்தல், மோர் குடித்தலைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
5. சாப்பாட்டை மெதுவாக மென்று உண்ணுங்கள். உணவுக்குப் பின் வாயைக் கொப்பளித்து சுத்தப்
படுத்துங்கள்.
6. குழந்தைகளுக்கு எனப் பிரத்யேகமாக அடை
யாளப்படுத்தப்படும் பேஸ்ட்களைக் கொடுப்பதை மறு பரிசீலனை செய்யுங்கள்.
உணவைத் தேர்ந்தெடுப்பது எப்படி?
பெற்றோர்களுக்கு இருக்கும் மிகப் பெரிய குழப்பம் தங்கள் குழந்தைகளுக்கான உணவைத் தேர்ந்தெடுப்பது எப்படியென்பதுதான். ஒரு சூப்பர் மார்க்கெட் சென்றால் கண் முன் விரிந்திருக்கும் கடையில் எதைத் தேர்வு செய்வது என்ற குழப்பம் ஏற்படாமல் இருப்பதற்கு வாய்ப்பில்லை. ஆனால், எது சரியானது என்பதை தேர்வு செய்வதற்கு ஒரு வழி இருக்கிறது. நீங்கள் பார்க்கும் உணவுப் பொருள் அந்தப் பருவத்தில் விளைந்த பொருள். அதன் உற்பத்தி அதிகமாக இருப்பதால் வாங்க வேண்டியிருக்கிறதா? இல்லை மக்கள் அதிகமாக விரும்புவதால் அதன் உற்பத்தி அதிகமாக இருக்கிறதா என்பதை உற்று கவனியுங்கள். உதாரணத்துக்கு மாம்பழங்கள் நிறைய அடுக்கி வைக்கப்பட்டிருப்பதால் அதை நீங்கள் அதிகமாக வாங்கினால் அது இயற்கை. அதேவேளையில், பாதாம் மாவு, பாதாம் பால் ஆகியன நிறைய வரிசைகட்டி அடுக்கிவைக்கப்பட்டிருப்பதால் அதை நீங்கள் வாங்குகிறீர்கள் என்றால் அது தேவைக்காக உற்பத்தி செய்யப்பட்ட பொருள். நீங்கள் வாங்கும் போக்கை உற்பத்தி நிர்ணயித்தால் அதை வாங்குங்கள். உங்கள் தேவையால் அந்த உற்பத்தி நிர்ணயிக்கப்பட்டிருந்தால் அதைத் தவிர்த்துவிடுங்கள். இது பேக்கேஜ்ட் உணவு வகைகள் எல்லாவற்றிற்குமே பொருந்தும்.
வாய், பற்கள் நலம் பேணுவது குறித்து இந்த வாரம் பார்த்தது போல் அடுத்த அத்தியாயத்தில் குழந்தைகளின் குடல் ஆரோக்கியத்தைப் பேணுதல், காய்ச்சல் போன்ற நோய்களில் இருந்து தற்காத்தல் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை விரிவாகக் காண்போம்.
(வளர்வோம்… வளர்ப்போம்)

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE