காதல் ஸ்கொயர் - 20

By ஜி.ஆர்.சுரேந்தர்நாத்

மருத்துவமனையில் கண் விழித்த கௌதம், “யாரு இவங்கள்லாம்?” என்று கேட்டவுடன் கௌதமின் அம்மா ரேணுகா பொங்கி வந்த அழுகையை,  புடவை முந்தானையைப் பொத்தி அடக்கினார். “ரேணு...” என்று மனைவியை அதட்டிய மூர்த்தி, “கௌதம்...” என்றபோது அவர் தொண்டை அடைத்தது. அருணும், “கௌதம்...” என்று அழைக்க...கௌதமின் முகத்தில் எவ்வித உணர்ச்சியுமில்லை.

கௌதமை சில வினாடிகள் கவலையுடன் பார்த்த டாக்டர் ரங்கராஜன், “கௌதம்... உங்களுக்கு என்னாச்சுன்னு தெரியுமா?” என்று கேட்க... கௌதம் ‘தெரியாது’ என்பதுபோல் தலையை அசைத்தான். சில வினாடிகள் அமைதிக்குப் பிறகு கௌதம், “நீங்க கௌதம்னு சொல்றீங்களே...அது...” என்றவுடன் அனைவரும் அதிர்ச்சியுடன் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டனர். டாக்டர், “அது உங்க பேரு...” என்றவுடன், “ம்...பேரு...கௌதம்” என்று முணுமுணுத்த கௌதம் கண்களை மூடிக்கொண்டான்.

“ப்ளீஸ் கம் வித் மீ” என்று கூறிவிட்டு டாக்டர் வெளியே நடக்க... அனைவரும் அவர் பின்னால் சென்றனர். வெளியே வராந்தாவுக்கு வந்தவுடன், ரேணுகா, மூர்த்தியின் தோளில் சாய்ந்துகொண்டு மௌனமாக அழ... அவரை அணைத்து ஆறுதல் சொன்ன மூர்த்தியின் கண்களிலும் கண்ணீர். அருண், மஹிமாவின் கைகளை இறுக அழுத்திப் பிடித்து அழுகையை அடக்கினான். மூர்த்தியின் தோளில் ஆறுதலாகக் கைவைத்த டாக்டர், “ஓரளவு எதிர்பார்த்ததுதான். ஹண்ட்ரட் பர்ஸன்ட் ரெட்ரோக்ரேட் அம்னீஷியா...” என்றார்.

“எதுவும் ஆபரேஷன் பண்ணி...” என்று அருண் இழுக்க...டாக்டர், “இது மூளையோட ஃபங்ஷன் பிரச்சினைதான். இதுக்கு ஆபரேஷன்லாம் பண்ண முடியாது”

“அப்ப ட்ரீட்மென்ட்?”

“அமெரிக்காவுல இப்ப எலக்ட்ரோ ஸ்டிமுலேஷன் பண்ண ஆரம்பிச்சிருக்காங்க. அதுக்கும் பெரிய பலன்லாம் கிடைக்கல.”

“இப்ப என்னதான் பண்றது டாக்டர்? கெளதமுக்குத் திரும்பி நினைவு வரவே வராதா?”

“உண்மையச் சொல்லணும்னா...நைன்ட்டி பர்ஸன்ட் அம்னீஷியா பேஷன்ட்ஸுக்குத் திரும்பி ஞாபகம் வர்றதே இல்ல. ரொம்ப ரேரா, சில பேருக்குதான் நினைவு திரும்பியிருக்கு. சில பேருக்கு பார்ஷியலா திரும்பியிருக்கு. இப்போதைக்கு ட்ரீட்மென்ட்னா... நரம்பு சத்து மாத்திரை கொடுக்கலாம். ஆனா அதனால ஞாபகம் திரும்பிடும்னு சொல்ல முடியாது” என்றவுடன் அருணின் கண்களிலிருந்து கண்ணீர் வழிந்தது. மஹிமா, “அவன் வாழ்ந்த இடங்களுக்கு அழைச்சுட்டுப் போனா, ஞாபகம் வர சான்ஸ் இருக்கா?” என்றாள்.

“சான்ஸ் இருக்கு. ஆனா ரிமோட் சான்ஸ்தான்...” என்ற டாக்டர், மூர்த்தியின் தோளில் கைவைத்து, “வீ வில் ஹோஃப் ஃபார் இடியோபதிக் ரெக்கவரி” என்று கூறிவிட்டு வேகமாகத் திரும்பி நடந்தார்.

“இடியோபதிக் ரெக்கவரின்னா?” என்றான் அருண்.

“கடவுள் அருளால... அல்லது...இயற்கையா, திடீர்னு ஞாபகம் வந்தாதான்...” என்ற மூர்த்தி சட்டென்று குரல் உடைந்து சத்தமாக அழ ஆரம்பிக்க... அவருக்கு ஆறுதல் சொல்ல வழியின்றி அனைவரும் அவரை அமைதியாகப் பார்த்தனர்.

அன்றிரவு, நந்தினியிடம் எப்படி விஷயத்தைச் சொல்வது என்று தயக்கத்துடன் அருணும் மஹிமாவும் அமர்ந்திருந்தனர். நந்தினியின் அம்மாவும் அப்பாவும் சாப்பிடச் சென்றிருந்தனர். நந்தினி சத்தமாக, “உண்மையச் சொல்லுங்க. கௌதம் கண்ணு முழிச்சுட்டானா, இல்லையா?” என்றாள்.

“முழிச்சுட்டான்” என்றான் அருண் பலவீனமான குரலில்.

“அப்புறம் ஏன் அவன பாக்க முடியாதுங்குறீங்க?”

“உன்னால அவ்ளோ தூரம் வர முடியாது.”

“வீல் சேர்ல போலாம். ஸ்கேன் எடுக்கல்லாம் வீல் சேர்ல அழைச்சுட்டுப் போனாங்க. இப்பவே... எங்கம்மாப்பா வர்றதுக்குள்ள போய்ட்டு வந்திடலாம்” என்றபோது அறைக்குள் புன்னகையுடன் நுழைந்த இளம் நர்ஸ், “இப்ப வலி எப்படியிருக்கு நந்தினி?” என்றார்.

“இன்ஜெக்‌ஷன் போட்டதுக்கு அப்புறம், இப்ப பரவால்ல சிஸ்டர்” என்றவுடன் அருகிலிருந்த செல்ஃபிலிருந்து ஐந்தாறு மாத்திரைகளை எடுத்து நந்தினியிடம் நீட்டினார் சிஸ்டர். மாத்திரைகளை விழுங்கிய நந்தினி, “சிஸ்டர்... ஒரு ஹெல்ப்... எங்ககூட சேர்ந்து கௌதம்னு என் ஃப்ரெண்டு ஒருத்தனுக்கும் அடிபட்டுடுச்சு”

“சரி... அதுக்கென்ன இப்ப?”

“இங்கதான் நியூரோ வார்டுல இருக்கான். வீல் சேர்ல அவன போய் பாத்துட்டு வந்துடலாமா?”

“அய்யோ... காத்தரே...” என்று நர்ஸ் நெஞ்சில் கையை வைத்தார்.

“ஸ்கேன் எடுக்கல்லாம் அழைச்சுட்டுப் போனீங்கள்ல?அதே மாதிரி அழைச்சுட்டுப் போங்க சிஸ்டர்” என்றபோது நந்தினியின் கண்கள் கலங்கிவிட்டன.

இதைப் பார்த்தவுடன் நர்ஸ் குறும்புச் சிரிப்புடன், “ஏய்...ஏன் அழற? அவன் உனக்கு ரொம்ப க்ளோஸா?” என்றார்.

“ம்...” என்ற நந்தினியின் முகத்திலும் ஒரு சோகமான சிரிப்பு.

நர்ஸ், “அவன் உன் லவ்வரா?” என்றாள். நந்தினி பதில் ஒன்றும் சொல்லவில்லை. தொடர்ந்து நர்ஸ், “உண்மையச் சொன்னா அழைச்சுட்டுப் போவேன்...” என்று சொல்லி முடிப்பதற்குள், நந்தினி, “ஆமாம்...” என்றாள். சில வினாடிகள் அவளைப் புன்னகையுடன் பார்த்த நர்ஸ், “சரி...” என்றாள்.

கௌதமின் அறையில், ரேணுகா பர்ஸிலிருந்து ஒரு கண்ணாடியை எடுத்தார். படுத்திருந்த கௌதமின் முகத்திற்கு நேராகக் கண்ணாடியை நீட்டினார். கண்ணாடியில் ஆச்சரியத்துடன் தனது உருவத்தைப் பார்த்த கௌதம் அந்த முகத்தைத் தடவிப் பார்த்தான். பின்னர் ரேணுகா, மொபைலில், கௌதம் தங்களுடன் இருக்கும் புகைப்படத்தைக் காண்பிக்க...கௌதம் அதைப் பார்த்துவிட்டு அவர்களை ஆச்சரியத்துடன் பார்த்தான்.

“நாங்க... உன்னோட அம்மாப்பா. இது...” என்று மூர்த்தியைக் காண்பித்த ரேணுகா, “அப்பா...” என்று கூற...கௌதம், “அப்பா...” என்று முணுமுணுத்தான். தொடர்ந்து ரேணுகா, “நான் அம்மா...” என்று கூற... கௌதம், “அம்மா...” என்று முணுமுணுத்தவுடன் ரேணுகாவின் முகத்தில் அவ்வளவு சந்தோஷம்.

மறுபடியும் மூர்த்தியைக் காண்பித்து, “இது யாரு?” என்று கேட்க... கௌதம், “அப்பா...” என்றான். “நான் யாரு?” என்று கேட்டவுடன் கௌதம் முன்பை விட சற்று சத்தமாக, “அம்மா...” என்றான்.

அப்போது அறைக்குள் வீல் சேரில் நந்தினி, அருண், மஹிமா, நர்ஸ் ஆகியோர் நுழைவதைப் பார்த்த ரேணுகாவின் கண்களில் கேள்வி. கட்டிலில் படுத்திருந்த கௌதமைப் பார்த்தவுடன் நந்தினி சட்டென்று கண்கள் கலங்க, உணர்ச்சிவசப்பட்டு “கௌதம்...” என்றவுடன், மஹிமா, நந்தினியின் தோளில் அழுத்தினாள்.

கௌதமின் அருகில் மூர்த்தியையும் ரேணுகாவையும் பார்த்தவுடன் நந்தினி சமநிலைக்கு வந்து அழுகையை அடக்கினாள்.

அருண், மூர்த்தியைப் பார்த்து, “இது... நந்தினி. நாங்கள்லாம் ட்ரெய்னிங்ல ஒரே பேட்ச். கௌதமுக்கு ரொம்ப க்ளோஸ் ஃப்ரெண்ட்” என்றவுடன் நந்தினியைப் பரிவாகப் பார்த்த ரேணுகா, நர்ஸைப் பார்த்து, “நந்தினிக்கு என்னாச்சு?” என்றாள்.

“ஸ்பைனல் டிகம்ப்ரஸன். ஆபரேஷன் பண்ணியிருக்கு” என்றவுடன் மூர்த்தி, “இப்ப பரவாயில்லையாம்மா? எதுக்கு இவ்ளோ தூரம் வந்துகிட்டு? சொல்லியிருந்தா நாங்களே கௌதம அழைச்சுட்டு வந்துருப்போமே” என்றார். “பரவால்ல அங்கிள்...” என்ற நந்தினி, அருணைப் பார்க்க... அருண் அவளுடைய வீல் சேரை கௌதமின் படுக்கையருகில் தள்ளிச் சென்றான். தனது படுக்கையருகில் வந்த நந்தினியை கௌதம் அடையாளம் தெரியாமல் பார்க்க... நந்தினி அவனைப் பார்த்து சிரித்தாள். கௌதமும் பதிலுக்கு இயந்திரத்தனமாக சிரித்தான். நந்தினி, “எனக்கு ஒண்ணுமில்ல கௌதம். ஆபரேஷன் பண்ணியாச்சு. மூணு மாசத்துல திரும்பி நார்மலா நடக்க ஆரம்பிச்சுடுவேன்” என்று கூற...

கௌதம் ஒன்றும் புரியாமல் அவளையே பார்த்துக்கொண்டிருந்தான்.

“நீ எப்படி இருக்க?” என்று நந்தினி கேட்டவுடன் பதில் சொல்லாமல் சில வினாடிகள் அவளைப் பார்த்த கௌதம், “நீங்க யாரு?” என்றான். நந்தினி அதிர்ந்தாள். அவள் பதற்றத்துடன் திரும்பி அருணைப் பார்க்க... அருண் தலையைத் திருப்பிக்கொண்டான். மூர்த்திதான் அவளருகில் வந்து மெதுவாக, “நந்தினி... அவனுக்கு அம்னீஷியா. இதுவரைக்கும் அவன் வாழ்க்கைல நடந்த எல்லாத்தையும் மறந்துட்டான். நாங்ககூட யாருன்னு அவனுக்குத் தெரியாது...” என்று கூற... நந்தினி அப்படியே உறைந்துபோய் கௌதமைப் பார்த்தாள். நந்தினியின் கையை ஆறுதலாகப் பிடித்த அருணின் கையை இறுகப் பிடித்து அழுத்தினாள். பொங்கி வந்த அழுகையை வாயைப் பொத்தி அடக்கியபடி, கௌதமையே உற்றுப் பார்த்தாள். “எல்லாம் மறந்துவிடுமா? தன்னைக் காதலித்தது... பேசியது... சிரித்தது... எதுவுமே கௌதமுக்கு நினைவில் இருக்காதா?” என்று நந்தினி நினைக்க... நினைக்க...சட்டென்று உடைந்து அழ ஆரம்பித்தாள்.

அப்போது அறை வாசலிலிருந்து, “ஆன்ட்டி...” என்ற குரல் கேட்டது. ரேணுகா திரும்பிப் பார்த்தார். அறை வாசலில் கலைந்த தலையுடன், களைப்பாக நின்றுகொண்டிருந்தாள் பூஜா.

(தொடரும்)

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE