மண்.. மனம்.. மனிதர்கள்! - 20

By ஸ்ரீராம் சர்மா

உடுப்பி ஸ்ரீ லக்ஷ்மி நாராயண் ஆச்சார்யா

ஆண்கள் பரத நாட்டியம் ஆடலாமா? ஆடலாம்.  ஆனால், ஆடினால் உடுப்பி ஸ்ரீ லக்ஷ்மி நாராயண் ஆச்சாரியாரைப் போல ஆட வேண்டும்.

என்ன சிறப்பு? பார்க்கலாம்.

நடனத்தில் இரு பிரிவுகளுண்டு. ஒன்று லாஸ்யம். மற்றொன்று தாண்டவம்.

லாஸ்யத்தை குழைந்தாடல் எனலாம். இதனை  ‘சுகுமாரம்' என்ற சொல்லால் குறிக்கிறார் பரத முனிவர். தாண்டவத்தை நிமிர்த்தாடல் எனலாம். இதனை  ‘உத்ததம்' என்கிறார்.

லாஸ்யம் என்பது பெண்களுக்கே உரியது. போல, தாண்டவம் என்பது ஆண்களுக்கே !

பெண்கள் லாஸ்யமாக அதாவது குழைந்து ஆட ஆண்கள் நிமிர்த்து தாண்டவமாக ஆட வேண்டும் என்கிறது பரத சாஸ்திரம். அதே சமயத்தில் எங்கும் எதிலும் ரஸம் குறைந்துவிடக் கூடாது என்றும் வலியுறுத்துகிறது.

பொதுவாக தாண்டவம் என்றால் கோபமாக ஆடுவது என்று பலர் எண்ணிக் கொண்டிருக்கிறார்கள். அல்ல. ஆண்களின் ஆட்டத்தை தாண்டவம் என்று அழைப்பதே மரபு.

நம்முடைய புராணங்கள், சைவ சமய நூல்கள் அனைத்திலும் சிவன் விநாயகர் விஷ்ணு முருகன் ஆகிய கடவுளர்களின் நடனங்களனைத்தும் தாண்டவம் என்ற சொல்லாலேயே குறிப்பிடப் பட்டிருக்கின்றன.  

அவ்வாறு, ஆணுக்குரிய கம்பீரத்தோடு நடனத்தின் ரஸம் குறைந்து விடாமல் தாண்டவமாக ஆடவல்ல ஈடு இணையற்ற நாட்டிய குருதான் உடுப்பி ஸ்ரீ லக்ஷ்மி நாராயண் ஆச்சார்யா. 

 ‘கிருஷ்ணா  நீ பேகனே பாரோ...' பாடலுக்கு அவரும் ஆடுவார். ஆனால், யசோதைக்கு பதிலாக வசுதேவர் ஆடுவது போல இருக்கும்.

இந்தியத் திரையுலகில் நடனப் புயல் என்றழைக்கப்படும் பிரபுதேவாவும் பரத நாட்டியம் கற்றுக் கொண்டவர்தான். அவரது நடன அசைவிலும் லாஸ்யம் என்பது துளியும் இருக்காது.

பிரபுதேவாவிடம் நளினம் இருக்கும். ஆனால், பெண்மை மிளிர அவர் ஆடுவதில்லை. அதற்கு காரணம் இருக்கிறது.

அதைத் தெரிந்து கொள்வதற்கு முன் உடுப்பி ஸ்ரீ லக்ஷ்மி நாராயண் ஆச்சாரியாரைப் பற்றி இன்னும் கொஞ்சம் தெரிந்து கொள்வோம்.  

சொந்த ஊர் உடுப்பி. சிறு வயது முதலே சமஸ்கிருதப் படிப்போடு கூடிய வேதாப்பியாசம். ஆனாலும், பரதக்கலை மீது தீராத மோகம். உலவும்போதும் உறங்கும்போதும் காதில் கொஞ்சும் சலங்கை நாதம்.

பரதத்தின் மீதான இவரது பித்து நிலையைக் கண்ட தார்வார் கலாசாலை ஆசிரியர்கள் சென்னை சென்றால் பரதக் கலையில் பிரகாசமாக வரலாம் என்று சொல்லி அனுப்ப, கையில் காலணா இல்லாமல், ஒரு செட் துணியோடு லக்ஷ்மி நாராயண் வந்து இறங்கிய இடம் ராதாகிருஷ்ணன் சாலையில் அன்றைய சென்னையின் அடையாளங்களில் ஒன்றாக விளங்கிய உட்லண்ட்ஸ் ஓட்டல்.

அதன் முதலாளி பெரியவர் கிருஷ்ணாராவ் துணிச்சலோடு வந்து இறங்கிவிட்ட சிறுவனைக் கண்டு துணுக்குற்றாலும் அந்த இளமுகத்தில் விகசித்த கலையார்வத்தையும் வேதக் கல்வியையும் ஒழுக்கத்தையும் எடைபோட்டு அடைக்கலம் கொடுத்து விட்டார்.

கிருஷ்ணாராவ் அவர்களின் பெண் குழந்தைகளுக்கு வீட்டுக்கே வந்து பரதம் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருந்தவர் அன்றைய நாட்டிய உலகில் கொடிகட்டிப் பறந்து கொண்டிருந்த பரதகுருவான காஞ்சீவரம் எல்லப்ப நட்டுவனார்.

ஒருநாள் அவரிடம் அறிமுகப்படுத்தினார் கிருஷ்ணாராவ். “ஐயா, இந்தச் சிறுவன் பெயர் லக்ஷ்மி நாராயணன். இவனுக்கு அன்னதானம் செய்யும் பொறுப்பை அடியேன் ஏற்றுக் கொண்டேன்.

ஞானதானம் செய்யும் பொறுப்பை தாங்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும்...”

வைக்கப்பட்ட வேண்டுகோளுக்கு மெல்ல தலையசைத் திருக்கிறார் குரு எல்லப்பா நட்டுவனார். 

வந்து சேர்ந்த மாணவனை சுமார் ஒரு வருட காலம் ஒரே அடவை ஆடச் செய்திருக்கிறார். ஆம்!  ‘தையா தை...' இதை மட்டுமே ஒரு வருடகாலம் ஆடியிருக்கிறார் லக்ஷ்மி நாராயண்.

அவரது ஆழமான பொறுமையையும், குன்றாத உற்சாகத்தையும், சலியாத உழைப்பையும் கண்டு  நெகிழ்ந்த எல்லப்பா அவர்கள், “இனி நீதாண்டா என் பிரதம சிஷ்யன்....” என்று அள்ளி அணைத்துக் கொண்டார். அதன் பின் 7 ஆண்டுகள் கடகடவெனக் கற்றுத் தேர்ந்தார்.

அன்றாடச் செலவுக்குக் கைகொடுத்தது சென்னைப் பல்கலைக்கழகம். அங்கே சமஸ்கிருத மொழி பெயர்ப்பாளராகப் பணிபுரிந்தார்.

தாயின் வற்புறுத்தலால் திருமணம். வரிசையாக 4 பெண் குழந்தைகள், ஒரு மகன். பணத்தேவை அதிகரிக்க நடிகர் திலகம் சிவாஜி ட்ராமா ட்ரூப்பில் இணைந்திருக்கிறார். அப்போதெல்லாம் ட்ராமாவுக்கு இடையில் நடனக் காட்சிகளும் வரும். அதற்கு மாஸ்டராகப் பணிபுரிந்திருக்கிறார்.

இவரது அர்ப்பணிப்பு உணர்வைக் கண்ட சிவாஜி, “உங்களிடம் இருக்கும் வித்தைக்கு நீங்கள் சினிமா பழகிக் கொண்டால் நிறைய சம்பாதிக்கலாமே” என்று சொல்ல, அவரது சிபாரிசின் பேரில் பல படங்களில்  குரூப்பில் தலை காட்டியிருக்கிறார்.

நன்கு படித்தவர். ஒழுக்கமான மனிதர் எல்லப்ப நட்டுவ னாரின் சீடர் சினிமாவின் பக்கம் வந்திருக்கிறார் என்பதால், குரூப் டான்சர்களிடையே அவருக்குத் தனி அங்கீகாரமும் மதிப்பும் இருந்தது. இன்று கூட பழைய சிவாஜி, எம்.ஜி.ஆர் பாடல்களில் குரூப் டான்ஸில் தனியாகத் தெரிவார் மாஸ்டர்.

அவர் நடன இயக்குநராகப் பணியாற்றிய முதல் படம் சுமதி என் சுந்தரி. அதன்பின் ஏறத்தாழ 150 படங்களில் பணி புரிந்திருக்கிறார். நடிகர் திலகத்துக்கு டூப் செய்திருக்கிறார். அவருக்குப்  பதிலாக சிவதாண்டவம் ஆடியிருக்கிறார்.

லக்ஷ்மி நாராயண் மாஸ்டரின் செக்கச் செவேலென்ற தோற்றத்தையும் வெளிப்படும் நவரஸங்களையும் கண்ட இயக்குநர்கள் சிலர் அவரை ஹீரோவாக நடிக்க அழைத்தபோது பணிவோடு மறுத்து விட்டார். அவர் எண்ணமெல்லாம் பாரம்பரியமும் பரதக்கலையுமே நிறைந்திருந்தது.

தான் கற்றுக்கொண்ட குரு காஞ்சீவரம் எல்லப்ப நட்டுவ னாரது நடன பாணியை அடுத்த தலைமுறைக்குக் கடத்திவிட வேண்டும் என்பதே அவரது ஒரே குறியாக இருந்தது .

திரைவாழ்க்கை போதும் என முடிவெடுத்தவர் 1962-ல், ‘நாட்டிய மஞ்சரி’ என்ற நடனப் பள்ளியைத் துவக்கி ஆயிரக் கணக்கான மாணவிகளுக்கு காஞ்சீவரம் பாணியைக் கடத்தினார்.

1970 மாடல் பஜாஜ் ஸ்கூட்டரில் எங்கள் வீட்டுக்கு வருவார். வராண்டாவைக் கடக்கும் சிறுவன் என்னைத் தலைகோதிச் செல்வார். எத்தனையோ விஐபி-க்கள் வீட்டுக்கு வருவதுண்டு என்றாலும் அவர் மீது மட்டும் ஓர் இனம் புரியாத அன்பும் மரியாதையும் சிறு வயது முதலே எனக்கு இருந்தது.

அவரும் அப்பாவும் அமர்ந்து மணிக் கணக்கில் பரதக் கலையின் நுணுக்கங்களை விவாதித்துக் கொண்டிருப்பார்கள்.

சாமவேதம் கற்றுத் தெளிந்த அவரது தேஜசான முகமும் தீட்சண்யமான அவரது பார்வையும் சுற்றத்தை ரம்மியப்படுத்திக் கொண்டிருக்கும்.

நூற்றுக்கணக்கான திரைப்படங்கள் செய்து விட்ட போதும்கூட அவரது அணுகுமுறையில் கொஞ்சமும் சினிமா வாடை அடிக்காது. அதனா லேயே அப்பாவுக்கு அவரை மிகவும் பிடிக்கும்.

தான் மைசூர் சமஸ்தான சதஸ்களில் கற்றுக் கொண்ட பரத சூத்திரங்களையெல்லாம் மாஸ்டருக்குக் கற்றுக் கொடுப்பார். மாஸ்டருக்கு சமஸ்கிருதம் நன்கு தெரியும் என்பதால் அவற்றை எளிதில் உள் வாங்கிக் கொள்வார்.

இருவரும் மிக அருகருகே அமர்ந்து வாத்ஸல்யத்தோடு  ‘துளு பாஷை’ யில் மெல்லிய குரலில் பேசிக் கொள்வதைக் காணக் காணப் பொறாமையாக இருக்கும்.

அப்பாவைப் பற்றிக் குறிப்பிடும்போது ஒரு இன்டர்வியூவில் இப்படி மனம் திறந்திருக்கிறார் மாஸ்டர்...

“என்னிடம் இருக்கும் பரதக்கலைக்கு குருமார்களாக வாய்த்தவர்கள் இருவர். பராக்டிக்கலுக்கு குரு எல்லப்ப நட்டுவனார். தியரிக்கு வேணுகோபால் சர்மா...”

தமிழக நாட்டிய வரலாற்றில் பரத நாட்டியத் துக்கான தொழிற் முறைத் தேர்வை எழுதிய முதல் ஆண் பரதக் கலைஞர் உடுப்பி லக்ஷ்மி நாராயண் மாஸ்டர்தான்.

போலவே, பரதநாட்டிய நிகழ்வாரம்பத்தில் மேடையில்  ‘புஷ்பாஞ்சலி’ என்ற நிகழ்வை அறிமுகப்படுத்தியவரும் அவர்தான்.

அதற்கு முன் நேராக  ‘அலாரிப்பு’ நிகழ்வில் தான் ஆரம்பித்துக் கொண்டிருந்தார்கள். அவரது வழிகாட்டுதலுக்குப் பின் இப்போது புஷ்பாஞ்சலி என்பது சகஜமாகி விட்டது. 

ஏறத்தாழ 10 நாட்டிய நாடகங்களைத் தனது குழுவின் சார்பாக மேடையேற்றி இந்தியா முழுவதும் சென்று நிகழ்த்தியிருக்கிறார் ஆச்சார்யா.

அத்தனை நாடகங்களையும் அவருக்கு எழுதிக் கொடுத்தவர் வேணுகோபால் சர்மா.

அதைத்தவிர வர்ணங்கள், பதங்கள் எனப் பல படைப்புகளை இருவரும் இணைந்து அரங்கேற்றியிருக்கின்றார்கள்.

இன்று அவரது கடைசிப் பெண் மதுமதி பிரகாஷ் அந்தப் பாரம்பரியத்தைத் தொடர்கி றார். ஏராளமான மாணவிகளுக்கு தன் தந்தை யிடமிருந்து கற்றுக்கொண்ட காஞ்சீவரம் பாணியைக் கடத்திக் கொண்டிருக்கிறார்.

திரையுலகில் இன்று எத்தனையோ பேர் நடனம் ஆடிக் கொண்டிருந்தாலும் பிரபுதேவாவிடம் மட்டும்தான் பெண்மை தவிர்த்த ஆண்மைக்கே உரிய உத்ததம் எனப்படும் ஸ்டைல் இருக்கிறது என்று சொன்னேனல்லவா..?

அதற்குக் காரணம் பிரபுதேவாவும் குரு உடுப்பி ஸ்ரீ லக்ஷ்மி நாராயண் ஆச்சார்யாரின் சீடர்தான்.

தனது தாண்டவ ஸ்டைலை அப்படியே ஒற்றி எடுக்கும் பிரபுதேவா சகோதரர்களை அவர் தன் பெருமைக்குரிய சிஷ்யர்களாகவே கருதினார். சென்னை நாரதகான சபாவில் நிகழ்ந்த பிரபுதேவா சகோதரர்களின் அரங்கேற்றத்தில் அவர்கள் ஆடிய  ‘ ஆடும் மயில் மீது...’ ஒன்று போதும் ! 

ஒருமுறை என்னை வீட்டுக்கு அழைத்தார் உடுப்பி லக்ஷ்மி நாராயண் மாஸ்டர்... 

“என்னப்பா ரொம்ப பிசியா இருக்க போலருக்கே..?”

“என்ன செய்யணும். சொல்லுங்க மாஸ்டர்...”

“உங்கப்பா இருந்த வரைக்கும் அவர் எனக்கு டான்ஸ் ட்ராமா எழுதிக் கொடுத்தார். இப்போ என் பொண்ணு ஒரு டான்ஸ் ட்ராமா பண்ணப் போறா...நீதான் எழுதிக் குடுக்கணும்...செய்வியா..?”

நெகிழ்ந்து போனேன்.

“உத்தரவு மாஸ்டர்...” என்றவன் இரண்டு நாள் அவர் வீட்டிலேயே அமர்ந்து எழுதிக் கொடுத்தேன்.

 ‘சிவ லீலா விநோதம்’ என்னும் அந்த நாட்டிய நாடகத்துக்கு மகாகவி பாரதியாரின் பேரன் ராஜ்குமார் பாரதி அவர்கள் இசையமைத்தார்.

அரங்கேற்றத்துக்கு அழைத்து மேடை யேற்றி உச்சி முகர்ந்து கவுரவித்தார் மாஸ்டர். 

பரதமே ஸ்வாசம் என வாழ்ந்த உடுப்பி லக்ஷ்மி நாராயண் மாஸ்டருக்கு தமிழ்நாட்டில் ‘கலைமாமணி ’ விருதும் கர்னாடக மாநிலத்தில் ‘கலா ஸ்ரீ  ’ விருதும் அளிக்கப்பட்டது.

கோர்பச்சேவ் காலத்தில் இந்தியாவின் கலாச்சார தூதுவராக ரஷ்யாவுக்குச் சென்று வந்த புகழுக்குரியவர் மாஸ்டர்.

ஈடுஇணையற்ற பரதகுரு ஸ்ரீ லக்ஷ்மி நாராயண் ஆச்சார்யா ஒரு சிரவண ஏகாதசியின் அதிகாலை ப்ரம்ம முகூர்த்தத்தில் நித்ய பூஜை செய்துகொண்டிருக்கும்போதே இவ்வுலக வாழ்க்கையை நீத்தார். அதை சுவர்க்கம் நோக்கிய புண்ணியப் பயணம் என்றே குறிக்கின்றன சாஸ்திரங்கள்.  

 ‘இருமை வகைதெரிந்து ஈண்டுஅறம் பூண்டார்

பெருமை பிறங்கிற்று உலகு.’ என்கிறது தமிழ் வேதம் !

ஒருமுறை அவரது வீட்டில் அமர்ந்து எழுதிக் கொண்டிருந்த என்னை தட்டித் திருப்பிய உடுப்பி ஸ்ரீ லக்ஷ்மி நாராயண் ஆச்சார்யா இப்படிச் சொன்னார்...

“மனுஷங்க செய்ய வேண்டிய மிகப் பெரிய கடமை எது தெரியுமா? பெரியவங்க சொல்லிக்கொடுத்த நல்லதை விடாம பின்பற்றுறது. அதே மாதிரி, மனுஷங்க செய்யக்கூடிய மிகப் பெரிய சாதனை எது தெரியுமா? கடைப்பிடிச்ச நல்ல விஷயங்களை அடுத்த தலைமுறைக்குக் கடத்துறது..!”

இன்று அவரது மகள் மதுமதி பிரகாஷ் அவரது வாரிசாக நின்று காஞ்சீவரம் எல்லப்பா பாணியை உயர்த்திப் பிடித்துக் கொண்டிருக்கிறார்.

இவரது மாணவி எமி மயூரி ஜப்பான் நாட்டில் நாட்டிய மஞ்சரியின் கிளையைத் துவக்கி சக்கைப் போடு போட்டுக் கொண்டிருக்கிறார்.

வருடா வருடம் தன் குருவுக்கு நிகழும்  ‘குரு சரண ஸ்மரணம்’ நிகழ்வில் எங்கிருந்தா லும் ஓடிவந்து கலந்து கொள்கிறார் பிரபுதேவா. அவர் இன்னுமின்னும் உயர்த்திப் பிடிப்பார்.

காஞ்சீவரம் பாணி என்பது இருக்கும் வரைக்கும் குரு எல்லப்ப நட்டுவனாருக்கும் சரி... உடுப்பி ஸ்ரீ  லக்ஷ்மி நாராயண் மாஸ்டருக்கும் சரி அழிவென்பதே கிடையாது.

நாட்டியத்தை ஸ்தாபித்தவன் ஈசன் என்கிறார் கள். இருக்கலாம். ஆனால், மனிதர்களின் அர்ப்பணிப்பால்தான் இதுகாறும் அது தழைத்து வந்திருக்கிறது. தழைக்கும் !

தஸ்மை ஸ்ரீ குரவே நமஹ !

(சந்திப்போம்)

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE