ஒருவனுக்கு வாழ்க்கையைத் தந்த நகரமே அவனுக்கு அகால மரணத்தையும் தந்தால் அவனது வாழ்வு சாபத்துக்கு உரியது
என்று பொருள்..!
மெதஜின் நகரம் பாப்லோவைக் கைவிட்டுவிட்டது. பணம், பணம் என்று தேடித் தேடி அலைந்தவன், கடைசியில் எடுத்துச் சென்றது மூன்று தோட்டாக்களை மட்டும்தான்.
தோட்டாக்களை ஏந்தி பாப்லோ சரிந்ததுதான் தாமதம்... சில போலீஸ் அதிகாரிகள், சில ராணுவ வீரர்கள், அமெரிக்க ஏஜென்ட்டுகள் ஆகியோர் அவனது உடலைச் சுற்றி நின்று கொண்டு "வீவா கொலம்பியா..!
வீவா கொலம்பியா..!
(வாழ்க கொலம்பியா)" என்று சந்தோஷத்தில் கோஷமிட்டனர். ஏதோ ஒரு மிருகத்தைக் கொன்று போட்டுவிட்டு, அதைச் சுற்றி வேடர்கள் சந்தோஷக் குரலெடுத்துப் பாடி ஆடுவார்களே அதுபோல இருந்தது அந்தக் கோஷமிடல்கள்.
அந்தக் காட்சி, ஒளிப்படமாக எடுக்கப்பட்டு, அடுத்த நாள் செய்தித்தாள்களில் பிரசுரமானது. அப்போது பலரும் பாப்லோவுக்காக வருத்தப்பட்டனர். அந்த அதிகாரிகள் செய்த செயல் மிகவும் மோசமாக விமர்சிக்கப்பட்டது.
பாப்லோ கொல்லப்பட்ட விஷயம் அவனது குடும்பத்துக்கும் தெரியப்படுத்தப்பட்டது. ஸ்பாட்டுக்கு முதலில் வந்தது அவள் தாய்தான்.
கதவைத் திறந்துகொண்டு ஓடினாள். மாடியில் ஏறினாள். சடலம் ஒன்று அவளை இடறியது.
“இல்ல... இல்ல... இவன் பாப்லோ இல்ல...”
கண நேரம் அவளுக்குள் ஒரு மகிழ்ச்சி. தன் மகன் தப்பித்திருக்க மாட்டானா என்றொரு நப்பாசை.
“சென்யோரா... இது இல்ல... பாப்லோவோட சடலம் மேல இருக்கு...”
காவலாளி ஒருவன் அவளை அந்த வீட்டின் கூரை மேலே கூட்டிச் சென்றான். அங்கு பாப்லோவின் உடலைக் கண்டதும், இனி வரும் தன் மொத்த வாழ்நாளுக்கும் மொத்தமாகச் சேர்த்து அழுததுபோல் கண்ணீரைக் கொட்டித் தீர்த்தாள்.
பாப்லோ கொல்லப்பட்ட விஷயம் அவனது மனைவி மற்றும் குழந்தைகளுக்கும் தெரியப்படுத்தப்பட்டது. பாப்லோவுக்கு இந்த நிலை ஏற்படும் என்று எதிர்பார்த்திருந்ததால், அவனது மனைவி ‘டாடா’ பெரிய அளவில் தனது சோகத்தை வெளிக்காட்டிக் கொள்ளவில்லை. மாறாக, அவனது எதிரிகள் எப்போது நம்மைக் குறி வைப்பார்களோ என்ற பயம்தான் இருந்தது.
பாப்லோ கொல்லப்பட்ட அடுத்த சில மணி நேரங்களில், அவனது மகன் யுவான் பாப்லோவிடம் தொலைபேசி வழியாகச் சில பத்திரிகையாளர்கள் ‘மைக்ரோ’ பேட்டி கேட்டார்கள்.
“ஆமாம்... எங்க அப்பாவைக் கொன்னுட்டாங்க. அதைப் பத்தி இப்ப பேச விரும்பலை. ஆனா... ஆனா... எங்க அப்பாவைக் கொன்னவங்களை நான் நிச்சயம் பழி தீர்ப்பேன். என் கையாலேயே அவர்களைக் கொல்வேன்...” என்று பொங்கினான் யுவான்.
பத்திரிகைகளும் இதைத்தான் எதிர்பார்த்தன.
அப்படிச் சொல்லிவிட்டு போனைக் கீழே வைத்த பிறகே, தான் எவ்வளவு பெரிய முட்டாளாக நடந்துகொண்டிருக்கிறோம் என்று நொந்துகொண்டான் யுவான். தனது தந்தையால், தானும் தனது குடும்பமும் ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு நிமிடமும் எப்படிப் பதற்றமாக உணர்ந்தோம் என்பது அவனுக்கு நினைவுக்கு வந்தது. தந்தையுடன் சேர்ந்து ஒவ்வொரு இடமாகப் பதுங்கி இருந்த நாட்கள் அவன் கண் முன் நிழலாடின. அதுவரையிலான தங்கள் வாழ்க்கையில், தங்கள் வீட்டில் அவர்கள் எப்போதும் அமைதியை உணர்ந்ததில்லை என்ற உண்மை அவனுக்கு உரைத்தபோது அவன் பெருமூச்செறிந்தான்.
உடனடியாகத் தன்னிடம் பேசிய எல்லா பத்திரிகைகளிடமும் மீண்டும் பேசினான். இந்த முறை அவனது பேச்சில் படபடப்போ, கோபமோ இல்லை.
“மன்னிக்கணும். நான் முன்னாடி கொடுத்த ஸ்டேட்மென்ட்டை வாபஸ் வாங்கிக்கிறேன். யாரையும் பழி வாங்குற எண்ணம் எல்லாம் எனக்கு இல்லை. எனக்கு இப்போ இருக்கிற ஒரே குறிக்கோள், என் குடும்பத்தின் வருங்கால நிம்மதிதான். அவங்க எல்லோரும் நிறைய கஷ்டங்களைப் பார்த்துட்டாங்க. அவங்களுக்காகத்தான் இனி நான் வாழப்போறேன். நல்லா படிச்சு, நல்ல வேலையில் சேர்ந்து என் குடும்பத்தைக் காப்பாத்த நினைக்கிறேன். என் அப்பா போன வழியை நானும் தேர்வு செய்ய விரும்பலை. இந்த நாட்டுல அமைதி திரும்பி வர, நான் என்ன செய்யணுமோ அது எல்லாத்தையும் செய்வேன். அரசாங்கத்துக்கு என்னோட முழு ஒத்துழைப்பையும் தருவேன்...”
*****
பாப்லோவின் வாழ்க்கை என்பது பாப்லோவினுடையது மட்டுமல்ல. அவனது குடும்பம், நண்பர்கள், போட்டியாளர்கள், அரசு அதிகாரிகள் என அனைவரின் வாழ்க்கையும் சேர்ந்த கூட்டுதான், பாப்லோவின் வாழ்க்கை.
பாப்லோ இறந்த பிறகு, டாடா பயந்தது போலவே போட்டியாளர்கள், முக்கியமாக கலி கார்ட்டெல், அவர்களைக் குறிவைத்தார்கள். ஆனால், உயிருக்காக அல்ல.
“டாடா… உன்னைப் பத்தி எனக்கு நல்லா தெரியும். உனக்கு ஓவியங்கள்ல மிகப்பெரிய ஈடுபாடு இருக்கு. உன்னோட சேகரிப்புல இருக்கிற ஒவ்வொரு ஓவியமும் பல கோடி தேறும். அதை எல்லாத்தையும் என்கிட்ட கொடுத்திடு. உங்களை எல்லாம் விட்டுடறேன்...”
கலி கார்ட்டெலின் தலைவன் மிகேல் ரோட்ரிகேஸ் சொன்னதை டாடாவால் தட்ட முடியவில்லை. எல்லா ஓவியங்களையும் அவனிடம் ஒப்படைத்தாள்.
அந்தச் சமயத்தில் பாப்லோவின் எதிரிகள் விரும்பியது பாப்லோவின் பணத்தை அல்ல. பாப்லோவால் தங்களுக்கு ஏற்பட்ட பொருளாதார இழப்புகளைச் சரிகட்டவே அவர்கள் விரும்பினார்கள். எனவே, எங்கெல்லாம் பாப்லோ சொத்துகளை வாங்கிக் குவித்தானோ, அந்தத் தகவல்களை எல்லாம் பாப்லோவின் நண்பர்கள், சிகாரியோக்கள் மூலமாகப் பெற்று, அவற்றை எல்லாம் விற்று, அந்த நான்கைந்து எதிரிகளுக்குக் கொடுத்துவிட்டு, தங்களை விட்டுவிடுமாறு கெஞ்சினாள்.
பணத்தை வாங்கிக்கொண்டு கூடவே யுவானிட மிருந்து ஒரு வாக்குறுதியையும் வாங்கிக் கொண் டார்கள். அவனும் எழுதித் தந்தான். ‘எக்காரணம் கொண்டு நான் இனி எனது தந்தையின் வழியில் செல்ல மாட்டேன். எந்த விதத்திலும் என் அப்பாவின் எதிரிகளைப் பழி வாங்க முயல மாட்டேன்..!’
வீடிழந்து, உறவிழந்து நின்ற அவர்களுக்கு பாப்லோவால் பயனடைந்த சில அரசு அதிகாரிகள் உதவினார்கள். டாடா தன் பிள்ளைகளுடன் மொசாம்பிக் எனும் ஆப்பிரிக்க நாட்டுக்குப் புலம் பெயர்ந்தாள். அங்கே அவர்கள் எல்லோரும் தங்கள் பெயர், கடந்த கால வாழ்வு ஆகிய அடையாளங்களை மறைத்துவிட்டுப் புது மனிதர்களாக வாழத் தொடங்கினார்கள்.
அங்கேயும் அவர்களுக்குப் பல இன்னல்கள். ஒரு கட்டத்தில் அவர்களது உண்மையான அடையாளங்கள் வெளியாகி, அவர்களை விதி துரத்தியது. ஆனால், அந்த நாட்டில் அதுவரை தாங்கள் சம்பாதித்திருந்த நற்பெயரால் எல்லா இன்னல்களையும் கடந்து வந்தார்கள். யுவானும் அவனது தங்கையும் நன்றாகப் படித்தார்கள். நல்ல வேலையில் அமர்ந்தார்கள். இப்போது உலகின் ஏதோ ஒரு மூலையில் நிம்மதியாக வாழ்ந்து வருகிறார்கள்.
பாப்லோவின் அண்ணன் ராபர்ட்டோ கொலம்பியாவிலேயே தங்கிவிட்டார். அவர் மீது பல்வேறு குற்றங்கள் சுமத்தப்பட்டு அவர் சிறையில் அடைக்கப்பட்டார். முதலில் அவருக்கு 58 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. பிறகு அது 30 ஆண்டுகளாகக் குறைக்கப்பட்டது. பிறகு அது 20 ஆண்டுகளாகக் குறைக்கப்பட்டது. ராபர்ட்டோவின் தொடர் மேல் முறையீடுகளால் இறுதியில் அவருக்கு 15 ஆண்டுகள் சிறைவாசம் அனுபவிக்க உத்தரவிடப்பட்டது. சிறையில் இருந்தாலும் இவரால் தங்களுக்குப் பாதிப்பு நேரலாம் என்று நினைத்த பாப்லோவின் எதிரிகள், ராபர்ட்டோவைக் கொல்லத் திட்டமிட்டனர்.
ஒரு நாள் அவருக்கு நம்பகமான முகவரியிலிருந்து ‘பார்சல்’ ஒன்று வந்திருந்தது. ரொம்ப நாளாகத் தன் வழக்கறிஞரிடம், பாப்லோவின் சொத்துகள் தொடர்பான ஆவணங்களைக் கேட்டிருந்தார். அதுவாகத்தான் இருக்கும் என்று நினைத்து பார்சலைப் பிரித்தார். உள்ளே… பச்சை நிற ஒயர் ஒன்று நீட்டிக் கொண்டிருந்தது.
“ஐ…”
‘ஐயோ…’ என்று சொல்ல வாயெடுப்பதற்குள் குண்டு வெடித்துவிட்டிருந்தது. ராபர்ட்டோ தூக்கி வீசப்பட்டார். அவரது கண்களிலிருந்து ரத்தம் கொட்டியது. உடலெல்லாம் வலித்தது. சுய நினைவிழந்தார்.
பிறகு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளித்தனர். ஒரு கண்ணில் மட்டும் பார்வை போயிருந்தது. 15 ஆண்டு சிறைவாசத்தை முடித்து 2004-ல், விடுதலையானார். தற்போது கொலம்பியாவின் கிராமம் ஒன்றில் விவசாயம் செய்து வருகிறார்.
பாப்லோ உயிருடன் இருந்த காலம் வரை, அவனது காதலி விர்ஜீனியா ஜெர்மனியில் தங்கியிருந்தாள். கசப்பான தன் கடந்த கால வாழ்க்கையை மறக்க முயற்சி செய்துகொண்டிருந்தாள். அங்குள்ள பல்கலைக்கழகம் ஒன்றில் மீண்டும் தன் படிப்பைத் தொடர்ந்தாள். கொலம்பிய நார்கோக்கள் பற்றிய பல தகவல்களைச் சொல்லி அமெரிக்காவுக்கு உதவியதால், அவளை அமெரிக்காவில் தங்கிக்கொள்வதற்கு அனுமதித்தது அந்நாட்டு அரசு. எனினும் முன்பு போல இப்போது ஊடகம் பக்கம் அதிகம் வருவதில்லை.
பாப்லோ இறந்த கொஞ்ச காலத்துக்குப் பிறகு, கலி கார்ட்டெல் தலைவர்கள் கைது செய்யப்பட்டு, அமெரிக்காவுக்கு நாடு கடத்தப்பட்டனர். அங்கு அவர்களுக்கு 30 ஆண்டுகால சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இப்போது அவர்கள் சிறைவாசம் அனுபவித்து வருகிறார்கள்.
பாப்லோ கொல்லப்பட்ட அடுத்த நாள் ‘தி நியூ யார்க் டைம்ஸ்’ பத்திரிகை இப்படியாக எழுதியிருந்தது:
‘பாப்லோவின் இறப்பு, கொலம்பியாவின் கொக்கைன் கடத்தல் வியாபாரத்தை எந்த விதத்திலும் பாதித்திருப்பதாகத் தெரியவில்லை..!’
அதுதான் கொலம்பியா..!
இனி அவன் உறங்கட்டும்..!
2006-ல், பாப்லோவின் தாய் ஹெர்மில்டா முதுமை காரணமாக இறந்து போனார். அவரது இறுதி ஆசை, தானும் தன் மகன் பாப்லோ வின் அருகிலேயே புதைக்கப்பட வேண்டும் என்பதுதான். அப்படியே செய்தனர்.
வெகுகாலம் பாப்லோவின் கல்லறை யில் அவனைப் பற்றிய வாசகம் ஒன்று பொறிக்கப்பட்ட கற்பலகை வைக்கப்பட்டிருந்தது. ஆனால், அந்தக் கல்லறையைப் பார்த்தும், அந்த வாசகத்தைப் படித்தும் யாரும் பாப்லோவை கதாநாயகனாக நினைத்துவிடக் கூடாது என்று கருதிய கொலம்பிய அரசு, பின்னாளில் அந்த வாசகம் அடங்கிய கற்பலகையை நீக்கிவிட்டது.
அந்த வாசகம் என்ன தெரியுமா..?
‘ஹியர் லைஸ் தி கிங்..!’ (இங்கே இருக்கிறான் மன்னன்!)
(திகில் விலகும்...)