வாழ்க்கையின் மிகப் பெரிய சங்கடங்களுள் ஒன்று, மற்றவர்களின் துக்கத்திற்கு ஆறுதல் சொல்ல வழியின்றி தவிப்பது.
கோயம்புத்தூர் மருத்துவமனைக்குள் அழுகைச் சத்தத்துடன் நுழைந்த கௌதமின் அப்பா மூர்த்தியையும், அம்மா ரேணுகாவையும் பார்த்தவுடன் அருண் கலங்கிப்போய்விட்டான். அருணைப் பார்த்தவுடன், ரேணுகா பாய்ந்து வந்து அவன் தோளைப் பிடித்து உலுக்கியபடி, “உன் கூடவேதானடா எப்போதும் இருப்பான்… ஏன்டா தனியா விட்ட? ஏன் தனியா விட்ட?” என்று அழுதபடி கதறினார். அருண் பதில் ஒன்றும் சொல்லாமல், ரேணுகாவின் கையை ஆறுதலாகப் பிடித்துக்கொண்டான். மூர்த்தி ஒன்றும் பேசாமல், ரேணுகாவின் தோளை இறுக அணைத்தபடி கஷ்டப்பட்டு அழுகையை அடக்கிக்கொண்டிருந்தார். மூர்த்தியும் ரேணுகாவும் டாக்டராக நூற்றுக்கணக்கான காயங்களையும் மரணங்களையும் பார்த்தவர்கள். ஆனால், அவர்கள் எல்லாம் பேஷன்ட்ஸ். ஆனால், கௌதம்… மகன்.
தொண்டையைக் கனைத்துக்கொண்ட மூர்த்தி, “இப்ப கண்ணு முழிச்சிட்டானா?” என்றார்.
“இன்னும் இல்ல. ஆனா உயிருக்கு ஆபத்தில்லன்னு டாக்டர் சொல்லியிருக்காரு.”
“டாக்டர் எங்க?” என்று மூர்த்தி கேட்க… அருண் அவர்களை டாக்டர் ரங்கராஜனின் அறைக்கு அழைத்துச் சென்றான். அவன் உள்ளே செல்லாமல், வெளியிலேயே நின்றுகொண்டான். கண்ணாடி வழியாக அவர்கள் டாக்டரிடம் பேசுவது மவுனப் படக் காட்சிபோல் தெரிந்தது. திடீரென்று ரேணுகா குமுறிக் குமுறி அழுதபடி மூர்த்தியின் தோளில் சாய்வது தெரிந்தது. மேற்கொண்டு அந்தக் காட்சியை காணச் சகிக்காமல் கௌதம் முகத்தைத் திருப்பிக்கொண்டான். அப்போது அங்கு வந்த மஹிமா, அருணிடம், “நந்தினியோட அம்மா அப்பா வந்துட்டாங்க. நந்தினி அம்மா கதறுன கதறலைப் பார்த்து ஆர்த்தோ வார்டே கலங்கிடுச்சு. எனக்கு என்ன பண்றதுன்னே புரியல…” என்றாள்.
“ஆபரேஷன்…” என்று இழுத்தான் அருண்.
“நல்லபடியா முடிஞ்சிருச்சு. நந்தினிக்கு இன்னும் மயக்கம் தெளியல” என்றபோது அறையிலிருந்து டாக்டர், மூர்த்தி, ரேணுகா மூவரும் வெளியே வந்தனர். அவர்கள் கௌதமின் வார்டை நோக்கி நடக்க… அருணும் மஹிமாவும் பின்தொடர்ந்தனர்.
வார்டுக்குள் நுழைந்து, தலையிலும் கைகளிலும் கட்டுப்போட்டு கண்மூடிப் படுத்திருந்தகௌதமைப் பார்த்தவுடன், “கௌதம்…” என்று அலறியபடி ரேணுகா அவனை நோக்கிப்பாய… மூர்த்தி கையைப் பிடித்துத் தடுத்தார். “சின்னக் காயம்தான்னு சொன்னீங்களே… இப்படிப் படுத்திருக்கானே…” என்று ரேணுகா சத்தமாக அழ…
மூர்த்தி கர்ச்சீப்பை எடுத்துத் தனது வாயில் பொத்திக்கொண்டு சத்தமின்றிஅழ… முதுகு மட்டும் குலுங்கியது. கௌதமின் கட்டிலருகில் சென்ற ரேணுகா, கௌதமின் முகத்தைத் தடவியபடி, “கௌதம்…கௌதம்…கண்ணத் தொறடா…அம்மா வந்துருக்கேன்டா…” என்று கூற, கௌதமிடம் எந்த மாற்றமும் இல்லை. மூர்த்தியைப் பார்த்து ரேணுகா, “என்னங்க… நம்ம பையன்…நம்மளையும் மறந்துடுவானா?” என்றபோது அவர் குரல் தழுதழுத்தது.
“சேச்சே… அதெல்லாம் மறக்க மாட்டான். சில விஷயங்களை மறக்கலாம். அவ்வளவுதான்…” என்ற மூர்த்தி, டாக்டர் ரங்கராஜனைப் பார்த்து, “எடிமா ட்ரீட்மென்ட்…” என்று இழுத்தார். ரங்கராஜன், “ஆரம்பிச்சாச்சு. மேனிட்
டால் கொடுக்கிறோம். பாக்கலாம். வீ வில் ஹோப் ஃபார் திபெஸ்ட்” என்றார். ரேணுகா, “எப்ப டாக்டர் கண்ணு முழிப்பான்?” என்று கேட்க… “எனி டைம்” என்றார் டாக்டர்.
சில வினாடிகள் மவுனத்துக்குப் பிறகு மூர்த்தியிடம், “அங்கிள்… இன்னொரு ஃப்ரெண்டுக்கு ஆபரேஷன் பண்ணியிருக்காங்க. பார்த்துட்டு வந்துடுறேன்” என்று அருண் சொல்ல… மூர்த்தி அவன் பேச்சில் கவனமின்றி, ஏதோ யோசனையுடன் தலையை ஆட்டினார்.
அருணும் மஹிமாவும் நந்தினியைப் பார்க்கச் சென்றபோது, நந்தினியின் மயக்கம் தெளிந்திருந்தது. அவளருகில் நின்றிருந்த நந்தினியின் பெற்றோர் முகங்களில் இப்போது மெல்லிய நிம்மதி. நந்தினியின் கன்னங்களில் வடிந்த கண்ணீரை நந்தினியின் அம்மா துடைத்தபடி, “ஒண்ணுமில்ல கண்ணு... சரியாயிடுச்சு…எல்லாம் சரியாயிடுச்சு” என்றார். நந்தினி, “முதுகு பயங்
கரமா வலிக்குதும்மா…” என்றாள் பற்களைக் கடித்தபடி.
“சரியாயிடும். இப்பதானே ஆபரேஷன் முடிஞ்சுது. கொஞ்சம் கொஞ்சமா சரியாயிடும்” என்று நந்தினியின் அப்பா ஆறுதலாக நந்தினியின் தலையில் தடவினார். மெதுவாகச் சுற்றிலும் பார்த்த நந்தினி அருணைப் பார்த்தவுடன், “கௌதம்…” என்று இழுத்தாள்.
“பயப்படறதுக்கு ஒண்ணுமில்ல. அவன் அம்மாப்பால்லாம் வந்துட்டாங்க…”
“கண்ணு முழிச்சுட்டானா?”
“இன்னுமில்ல…” என்றவுடன் சில வினாடிகள் அவனை அதிர்ச்சியுடன் பார்த்த நந்தினி, “அருண்… என்கிட்ட ஒண்ணும் மறைக்கலையே? அவனுக்கு வேற ஒண்ணும் இல்லல்ல?” என்றபோது அவள் தொண்டை அடைத்தது. அருண், “சேச்சே… ஒரு ப்ராப்ளமும் இல்ல” என்றவுடன் நந்தினியின் அப்பா, “யாரு கௌதம்?” என்றார். அருண், “எங்க ஃப்ரெண்டு. நாங்கள்லாம் ஒரே குரூப்பா சுத்துவோம். மஹிமா…நீ இங்க இரு” என்று கூறிவிட்டு வெளியே வந்தான்.
மருத்துவமனைக்கு அருகிலிருந்த டீக்கடைக்கு வந்தஅருண் உள்ளே அமர்ந்து, ஒரு சிகரெட்டைப் பற்ற வைத்துக்கொண்டான். கௌதமின் நிலை குறித்து அவனுடையபெற்றோர், நந்தினிபோல் அவனுக்கும் மிகப் பெரிய வேதனை இருக்கிறது. ஆனால், அவர்களுக்கு முன்பு துக்கத்தைக் காட்டிக்கொள்ள முடியாது. அவன் கலங்கினால், மற்றவர்கள் இன்னும் கலங்கிப்போய்விடுவார்கள். உள்ளுக்குள் துக்கத்தை அழுத்தி, அழுத்தி… இப்போது அவனுக்குதான் பெரிய ஆறுதல் தேவைப்பட்டது.
கௌதம் கண் விழிப்பானா? விழித்தாலும் எப்போது விழிப்பான்? விழித்தாலும் தன்னை அடையாளம் தெரியுமா? நினைத்தவுடனேயே அருணின் மனதில் பெரும் துக்கம் பொங்க… இப்போது அவனால் அழுகையை அடக்க முடியவில்லை. அவன் தலையைக் குனிந்துகொண்டு சத்தமின்றி அழ… அசந்தர்ப்பமாக டீக்கடை ரேடியோவில், “மலரே… குறிஞ்சி மலரே…” பாடல் ஒலித்தது. மெல்ல மெல்ல அவன் அழுகை அதிகரித்தது. இவ்வளவு நேரம் அடக்கி வைத்திருந்த வேதனை, பெரும் அழுகையாக வெடிக்க…. டீக்கடை என்பதையும் பொருட்படுத்தாது அவன் குரல் எழுப்பி சத்தமாக அழ… சட்டென்று டீக்கடை அமைதியானது.
தொடர்ந்து ரேடியோவில்,
தலைவன் சூட… நீ மலர்ந்தாய்…
பிறந்த பயனை… நீ அடைந்தாய்…
என்று பாடல் ஒலிக்கும் சத்தம் மட்டும் கேட்க…டீ குடிக்க வந்தவர்கள், டீ மாஸ்டர் என்று அனைவரும், என்ன செய்வது என்று புரியாமல் அருண் கேவிக் கேவி அழுவதை அமைதியாகப் பார்த்துக்கொண்டிருந்தனர். எதிரே அமர்ந்திருந்த பெரியவர், அருண் யார்? என்ன? என்ற விவரம்கூட தெரியாமல், “அழாதப்பா… எல்லாம் சரியாயிடும்…” என்று அவன் கையை ஆறுதலாகப் பிடித்தார். அருண் அவர் கையில் தலை சாய்த்து…கதறி அழ அழ… மனதிலிருந்த பாரம் மெல்ல இறங்கியது. அழுகை மெல்ல ஓய்ந்து விசும்பலானபோது அவன் மொபைல் ஒலித்தது.
அருண் மொபைலை ஆன் செய்ய, “அருண்… கௌதம் கண்ணு முழிச்சிட்டான்” என்ற மஹிமாவின் குரலில் உற்சாகம்.
“இஸ் இட்?” என்று ஏறத்தாழ கத்திவிட்ட அருண், “இதோ வர்றேன்…” என்று ஓடினான்.
சாலையிலும் மருத்துவமனை வராந்தாவிலும் திடுதிடு
வென்று ஓடிய அருணை அனைவரும் ஆச்சரியத்துடன் பார்த்தனர். கௌதமின் வார்டு கதவை வேகமாகத் திறந்துகொண்டு அருண் உள்ளே நுழைந்தபோது அங்கு அமைதியாக இருந்தது. கௌதம் கண் விழித்திருந்தான். ஒன்றும் புரியாமல் சுற்றிலும் பார்த்துக்கொண்டிருந்தான். அழுகையுடன், “கௌதம்… கௌதம்…” என்று விசும்பிய ரேணுகாவின் கையைப் பிடித்து மூர்த்தி அழுத்தி அமைதியாக்கினார்.
கௌதமின் அருகில் சென்ற டாக்டர், “கௌதம்… எப்படி இருக்க?” என்று கேட்க…கௌதம் பதில் ஒன்றும் சொல்லாமல், டாக்டரை ஒரு உயிரற்ற பார்வை பார்த்தான். ரேணுகாவிடம் டாக்டர், “நீங்க பேச்சு கொடுங்க” என்றவுடன் ரேணுகா, “கௌதம்…உனக்கு ஒண்ணுமில்லடா… நல்லாயிடுச்சு” என்றார். கௌதம் எந்த உணர்வுமின்றி இயந்திரம்போல் ரேணுகாவைப் பார்க்க… ரேணுகா கவலையுடன் டாக்டரைப் பார்த்தார்.
டாக்டர், “கௌதம்… நௌ யூ ஆர் ஆல்ரைட். இது யாருன்னு தெரியுதா?” என்று மூர்த்தியையும் ரேணுகாவையும் காண்பித்துக் கேட்க….. கௌதமின் கண்கள் அலைபாய்ந்தன. அருணைப் பிடித்து ரேணுகாவின் அருகில் நிறுத்திய டாக்டர், “இவரு யாருன்னு தெரியுதா?” என்று கேட்க… அப்போதும் கௌதமின் முகத்தில் எந்த மாற்றமும் இல்லை. சில வினாடிகள் மூர்த்தி, ரேணுகா, அருண் ஆகிய மூவரையும் உற்றுப் பார்த்த கௌதம், தீவிர யோசனைக்குப் பின்,“தெரியல. யாரு இவங்கள்லாம்?” என்றான். (தொடரும்)