தலையங்கம்: பொது சுகாதாரத்தில் சுணக்கம் கூடாது!

By காமதேனு

பொது  சுகாதாரத் துறையில் தமிழகத்தின் செயல்பாடுகள் குறித்து நிதி ஆயோக் தந்திருக்கும் புள்ளிவிவரங்கள் அதிர்ச்சி கலந்த கவலையை அளிக்கின்றன.

பொது சுகாதாரத் துறையில் மாநிலங்களின் செயல்பாடுகள் அடிப்படையிலான பட்டியலைக் கடந்த ஆண்டு முதல் வெளியிட்டு வருகிறது நிதி ஆயோக். சமீபத்தில் வெளியான இந்த ஆண்டுக்கான பட்டியலில், வழக்கம்போல் கேரளம் முதலிடத்தில் இருக்கிறது. ஆனால், கடந்த ஆண்டு மூன்றாம் இடத்திலிருந்த தமிழகத்தைப் பின்னுக்குத் தள்ளி மகாராஷ்டிரம் அந்த இடத்துக்கு முன்னேறியிருக்கிறது. தமிழகத்துக்கு இப்போது ஒன்பதாவது இடம்!

இந்த அறிக்கையை எடுத்த எடுப்பிலேயே தமிழக அரசு மறுத்திருப்பது மேலும் வருத்தம் தருகிறது. கிட்டத்தட்ட 60 சதவீதத்துக்கும் அதிகமான மக்கள், அரசு மருத்துவமனைகளையே சார்ந்திருக்கும் ஒரு மாநிலத்தில், சுகாதாரத் துறையை நிர்வகிப்பவர்கள் மேலும் பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டாமா?

குறைந்த எடையுடன் குழந்தைகள் பிறப்பது, தடுப்பூசிகள் செலுத்தப்படுவதில் ஏற்பட்டிருக்கும் சரிவு வரை பல பிரச்சினைகள் தமிழகத்தில் இருப்பதை இந்தப் புள்ளிவிவரம் சரியாகச் சுட்டிக்காட்டுகிறது. கர்ப்பிணிப் பெண்ணுக்கு ஹெச்ஐவி கலந்த ரத்தம் செலுத்தப்பட்டது முதல், சுகாதாரத் துறை சார்ந்த பல்வேறு பிரச்சினைகள் தமிழகத்தைச் சுழற்றியடிப்பதை அன்றாடச் செய்திகளாகப் பார்த்து வருகிறோம்.

டெங்கு, பன்றிக் காய்ச்சல் போன்ற தொற்றுநோய்களின் தொடர்ச்சியாக  ‘நிபா வைரஸ்’ அபாயமும் இப்போது கதவைத் தட்டுகிறது. மழைக்காலம் தொடங்க இருப்பதால் சுணக்கம் காட்டாமல் செயலில் இறங்க வேண்டிய தருணம் இது. மூளைக் காய்ச்சலுக்கு நூற்றுக்கணக்கில் குழந்தைகளைப் பறிகொடுத்த பிஹார் போன்ற பின்தங்கிய மாநிலங்களின் நிலைக்குத் தமிழகம் சென்றுவிடக் கூடாது.

சுகாதாரத்தில் தமிழகம் முன்னேறிய மாநிலமாகத் திகழ்கிறது என்று வெறுமனே பெருமை பேசுவதில் அர்த்தமில்லை. மக்களின் ஆரோக்கியம் தொடர்பான விஷயத்தில் அவசர அவசியமான நடவடிக்கைகளில் அரசு உடனடியாக இறங்க வேண்டும்!

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE