பாப்லோ தி பாஸ் 31: ‘இது போராட்டத்தின் ஒரு வடிவம்..!’

By ந.வினோத் குமார்

 கா டு, மலை, கிராமங்கள், சிறு நகரங்கள் எனப் பல இடங்களில் பதுங்கி வாழ்ந்த ஒரு மாதத்துக்குப் பிறகு, மீண்டும் மெதஜின் நகரத்துக்கே வந்தான் பாப்லோ. அங்கே யாருக்கும் தெரியாமல் ஒரு வீடு எடுத்துத் தங்கியிருந்தான். அவனது குடும்பம் மற்றும் சில முக்கியமான சிகாரியோக்கள் ஆகியோருக்கு மட்டுமே அவன் இருக்கும் இடம் தெரிந்திருந்தது.

நாட்கள் சென்று கொண்டேயிருந்தன. எங்கேயும் நகர முடியாமல், யாரையும் பார்க்க முடியாமல், வியாபாரம் தன் கைகளைவிட்டு வெகுதூரம் போய்விட்ட நிலையில், தன் இருப்பை எப்படியாவது இந்த உலகத்துக்குத் தெரிய வைத்து, தான் இழந்ததை எல்லாம் மீண்டும் அடைய வேண்டும் என்று ஏங்கினான் பாப்லோ. முக்கியமாக, நான்கு சுவருக்குள் அடைபட்டுக் கிடக்கிற நிலையிலிருந்து விடுதலை பெற வேண்டும் என்பதே அவனுடைய பெரிய லட்சியமாக அப்போது இருந்தது.

அது 1992 செப்டம்பர். கொலம்பிய நாட்டின் முக்கியமான வானொலி சேவைகளில் ஒன்றான ‘ரேடியோ கதேனா நேஸ்யோனெல்’ எனும் வானொலியின் நிருபரைக் கண்ணைக் கட்டி தன் இடத்துக்குக் கூட்டி வந்து பேட்டி கொடுத்தான். அந்தப் பேட்டி இப்படியாக நீண்டது:

“கதீட்ரல் சிறையிலிருந்து தப்பிச்சிட்டீங்க. கொஞ்சம் முன்னாடியே போலீஸ்கிட்ட சரண்டர் ஆகியிருக்கலாம்னு நினைக்கிறீங்களா..?”

“இல்லை… கொஞ்சம் முன்னாடியே தப்பிச்சிருக்கலாமேன்னுதான் இப்பவும் நினைக்கிறேன். தானா விரும்பி ஜெயிலுக்குள்ள வந்த எவனாவது வேணும்னே தப்பிச்சுப் போக விரும்புவானா என்ன..?”

“அந்தச் சிறைக்கு நீங்கதான் பொறுப்பா..?”

“அப்படி எல்லாம் இல்லை. நானும் மத்தவங்களை மாதிரி ஒரு சிறைவாசிதான். ஒரு கைதிதான். சொல்லப்போனா, அரசாங்கம் நிம்மதியா இருக்கணும்கிறதுக்காக ஒரு வேண்டாத பொருளா மாற்றப்பட்ட தயாரிப்பு நான்..!”

“உங்க தலைக்கு கொலம்பியாவும்

அமெரிக்காவும் கோடிக்கணக்குல விலை வெச்சிருக்காங்களே..?”

“ம்ம்… பாப்லோங்கிற தனிப்பட்ட மனுஷனுடனான பிரச்சினை, இந்த இரண்டு நாடுகளுக்கும் அரசியல் பிரச்சினையாக மாறிடுச்சு. அதிலும் அமெரிக்காவுக்கு. ஏன்னா, அந்த நாட்டோட அதிபர் மறுபடியும் அதிபர் ஆகணும்ல...”

“இந்த நிமிஷத்துல இந்த உலகத்துல ‘மோஸ்ட் வான்ட்டட்’ நபர் நீங்கதான். அரசாங்கம், அமெரிக்க டி.இ.ஏ., கலி கார்ட்டெல், பாராமிலிட்டரின்னு பலர் உங்களைக் குறி வெச்சிருக்காங்களே..?”

“என்னோட எதிரிகள் பலமா இருக்காங்க அப்படிங்கிறதால நான் பயப்படலை. கடினமான சூழ்நிலைகளை எப்பவும் நான் கண்ணியத்தோடு எதிர்கொண்டிருக்கேன்…”

“வாழ்க்கை அப்படிங்கிறதை நீங்க எப்படிப் புரிஞ்சுக்கிறீங்க..?”

“எதிர்பாராத ஆச்சரியங்களை ஏற்றுக்கொள்ளவும் நிராகரிப்பதற்குமான இடம்தான் வாழ்க்கை…”

“சாகுறதைப் பத்தி எப்பவாவது நினைச்சு பயந்திருக் கீங்களா..?”

“நான் எப்பவும் மரணத்தைப் பத்தி நினைக்க மாட்டேன்...”

“ஜெயில்ல இருந்து தப்பிச்சப்போ யாரைப் பத்தி நினைச்சீங்க ..?”

“என்னோட மனைவி, குழந்தைங்க, என் குடும்பம்… அப்புறம் என்னைச் சார்ந்து இருக்கிறவங்களைப் பத்தி…”

“உங்களுக்கு கடவுள் நம்பிக்கை இருக்கா… சொர்க்கம் நரகம் மாதிரியான விஷயங்களிலாவது..?”

“கடவுளைப் பத்தி பொதுவெளியில பேசுறதை நான் விரும்புறதில்லை. கடவுள் எனக்குத் தனிப்பட்ட விஷயம்…”

“ஒரு வேளை நீங்க தற்கொலை செஞ்சுக்கிட்டிருந்தீங் கன்னா, அது யாருக்காக, எதற்காக இருக்கும்..?”

“என் குடும்பத்துக்காக… அப்புறம், உண்மைக்காக..!”

“இதுவரை உங்க மேல சுமத்தப்பட்ட குற்றங்கள்ல, எந்தக் குற்றத்தையாவது ஒப்புக்கொள்வீர்களா..?”

“இந்தக் கேள்விக்கான பதிலை பாவ மன்னிப்பு கொடுக்கிற ஒரு பாதிரியார்கிட்டதான் சொல்வேன்…”

“உங்களைச் சுத்தி இருக்கிற பிரச்சினைகள் எல்லாம் எப்படி முடிவுக்கு வரும்னு நினைக்கிறீங்க..?”

“அதை எப்படி முன்னாடியே சொல்ல முடியும்..? ஆனாலும் எல்லாமே நல்லபடியா முடியும்னுதான் நினைக்கிறேன்…”

“உங்க வாழ்க்கையை நீங்களே முடிவுக்குக் கொண்டு வர்ற வாய்ப்பைக் கொடுத்தா, உங்களோட முடிவு எப்படி இருக்கும்..?”

“நான் 2047-லதான் சாவேன்…”

“எந்த மாதிரியான சூழ்நிலையில நீங்க தற்கொலை பண்ணிப்பீங்க..?”

 ‘‘அதை ஒரு தீர்வா நான் எப்பவும் நினைச்சதில்லை...”

“இதுவரைக்கும் நீங்க செஞ்ச விஷயங்கள்ல, நீங்க பெருமைப்படுற விஷயம் எது..? நீங்க வெட்கப்படுற விஷயம் எது..?”

“என்னோட குடும்பம், என்னோட மக்கள்… இதுதான் நான் பெருமைப்படுற விஷயம். எதைப் பத்தியும் நான் வெட்கப்பட மாட்டேன்…”

“யாரை நீங்க அதிகமா வெறுக்குறீங்க… ஏன்..?”

“என்னோட போராட்டத்துல இதுவரைக்கும் நான் யாரையும் வெறுக்க முயற்சி பண்ணதில்லை..!”

“உங்க குழந்தைகளுக்கு என்ன அறிவுரை கொடுத்திருக்கீங்க. நாளைக்கு அவங்களும் உங்களை மாதிரி வந்துட்டா என்ன பண்ணுவீங்க..?”

“என்னோட குழந்தைங்க என்னை ரொம்பவும் நேசிக்கிறாங்க. என்னோட போராட்டத்தை அவங்க புரிஞ்சுக்குவாங்கன்னு நினைக்கிறேன். அவங்க ளுக்கு எப்போதும் நல்லதே நடக்கணும்னு விரும்புறேன்…”

“உங்க குடும்பம் உங்களுக்கு என்னவா இருக்கு..?”

“எனக்குக் கிடைச்ச சிறந்த பொக்கிஷம் அதுதான்…”

“நீங்க ஒரு மாஃபியாங்கிறதை ஏத்துக்குவீங் களா..? மத்தவங்க உங்களை அப்படிச் சொல்லும் போது உங்களுக்கு எப்படி இருக்கும்..?”

“அப்படின்னு மீடியாதான் என்னை அழைக்குது. அதுக்கெல்லாம் நான் கவலைப்பட்டிருந்தா, இந் நேரம் மன நல மருத்துவமனைலதான் இருந்திருக் கணும்...”

“எது உங்களைக் கோபப்படுத்தும்… நிதான மிழக்கச் செய்யும்..?”

“நீங்க கோபப்படலாம். ஆனா, நிதானமிழக்கக் கூடாது. பொய்யும் போலித்தனமும் எனக்குப் பிடிக்காது...”

“நீங்க ஒரு குற்றவாளின்னு சொல்லப்படுறதை ஒப்புக்குறீங்களா… இல்லை அதைப் பத்தி கவலைப் படுறதில்லையா..?”

“என்னோட மனசாட்சி சுத்தமா இருக்கு. மெக்ஸிகோ நாட்டைச் சேர்ந்த காமெடியன் ஒருமுறை சொன்னது மாதிரி ‘இட் இஸ் கம்ப்ளீட்லி இன்கன்குளூஸிவ்’…”

“உங்களுக்குத் தேவையானதெல்லாம் உடனுக்குடன் கிடைச்சிடுமாமே..?”

“நான் எப்பவும் அப்படிச் சொல்லிக்கிட்டதில்லை. அப்படி நடந்திருந்தா நான் இந்நேரம் ஏதோ ஒரு பெரிய ஹோட்டல்ல நிம்மதியா காபி குடிச்சிட்டு இருந்திருப்பேன். ஆனா, நான் எப்பவும் போராடுறேன். ஒவ்வொரு விஷயத்தை அடையறதுக்காக நான் நிறைய கஷ்டப்பட்டிருக்கேன்...”

“உங்க பலத்தின் சீக்ரெட் என்ன..?”

“எனக்குன்னு தனியா பலம் எதுவும் கிடையாது. என்னை நேசிக்கிற, ஆதரிக்கிற மக்கள்தான் என்னோட பலம்...”

“அரசாங்கத்துல ஊழல் எந்த அளவுக்குப் புரையோடியிருக்குன்னு நீங்க நினைக்குறீங்க..?”

“ஊழல் எல்லா நாட்டுலயும் இருக்கு. அதுக்கான காரணத்தைக் கண்டுபுடிச்சி அதை நிறுத்தறதுதான் முக்கியம்...”

“எதிலிருந்தாவது பின் வாங்கியிருக்கலாமேன்னு நினைக்கிறீங்களா..?”

“மனுஷங்க எல்லாருமே தப்பு செய்யக் கூடியவங்கதான். ஆனா, நான் எதிலிருந்தும் பின் வாங்க நினைச்சதில்லை. ஏன்னா, நாம கடந்து வர்ற ஒவ்வொரு விஷயமும் ஒரு அனுபவம்தான். அதை நான் பாசிட்டிவாதான் பார்க்கிறேன்…”

“நீங்க திரும்பவும் இந்த உலகத்துல பிறந்தீங்கன்னா எதையெல்லாம் திரும்பச் செய்வீங்க..?”

“நான் சரின்னு நினைச்சு செஞ்ச விஷயங்கள் பல நேரம் தவறாகியிருக்கு. அதை எல்லாம் செய்ய மாட்டேன். என்னை சந்தோஷப்படுத்தின எல்லா விஷயங்களையும் நான் மறுபடியும் செய்வேன்...”

“நீங்க எப்பவாச்சும் போதை மருந்து சாப்பிட்டி ருக்கீங்களா..?”

“நான் ஆரோக்கியமான மனுஷன். சிகரெட், ஆல்கஹால்னு எனக்கு எந்தப் பழக்கமும் இல்லை…”

“அரசியல்ல ஈடுபட்டது பெரிய தப்புன்னு இப்ப உணர்றீங்களா..?”

“இல்லை. அது தப்புன்னு நான் நினைச்சதில்லை...”

“எதுக்காக இவ்வளவு காசு..?  அதை வெச்சு நீங்க என்னதான் செய்றீங்க..?”

“என்னோட காசு இந்தச் சமூகத்துக்கானது. அது எல்லோருக்கும் தெரியும்..!”

“நீங்க ஏன் போதைப் பொருள் கடத்தல் தொழில்ல ஈடுபட்டீங்க..?”

“கொலம்பியாவுல சிலருக்கு அது போராட்டத்தின் வடிவம். சிலருக்கு அது லட்சியம்...”

“உங்களை மாதிரி கடத்தல் தொழில் செஞ்ச அல் கபோன் எனும் கடத்தல்காரரைவிட பெரியவரா நீங்க..?”

“நான் அந்த அளவுக்கு உயரம் எல்லாம் இல்லை. ஆனா, என்னை விட அல் கபோன் சில சென்டிமீட்டர்கள் குறைவுன்னு நினைக்கிறேன்…”

“உங்களை ராபின் ஹூட் உடன் ஊடகங்கள் ஒப்பிட்டப்போ என்ன நினைச்சீங்க..?”

“மனசு ரொம்பவும் அமைதியா இருந்துச்சு…”

“நீங்க ரொம்பவும் கடினமானவர்னு சொல் றாங்களே..?”

“என் கூட பழகுனவங்களுக்கு என்னைப் பத்தி நல்லா தெரியும். எனக்கு நல்ல நகைச்சுவை உணர்வு இருக்கு. எந்த ஒரு இக்கட்டான சூழல்லயும் என் முகத்துல சிரிப்பு இருக்கும். அப்புறம் இன்னொரு விஷயம்: நான் ஷவர்ல குளிக்கும்போது சத்தமா பாட்டுப் பாடுவேன்..!”

(திகில் நீளும்)

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE