பாப்லோ தி பாஸ் 29: தி கிரேட் எஸ்கேப்..!

By ந.வினோத் குமார்

 மெ ண்டோசாவும் நவாஸும் அந்த அறையில் காத்திருந்தார்கள். அவர்களின் வருகை பாப்லோவுக்குத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

அலறியடித்துக்கொண்டு ஓடி வருவான், அல்லது  “ப்ளீஸ் சார்... வேண்டாம் சார்...” என்று அழுது கெஞ்சுவான் என்று எதிர்பார்த்திருந்தவர்களுக்கு ஏமாற்றம்..!

“குட் ஈவ்னிங், டாக்டர்...”என்று எந்த ஒரு படபடப்பும் கோபமும் இல்லாமல் மெல்லிய புன்னகையுடன் அவர்களோடு கைகுலுக்கினான் பாப்லோ. அரசு அதிகாரிகளை ‘டாக்டர்’ என்று அழைப்பதுதான் பாப்லோவின் வழக்கம். அவன் சிரிக்கிறானா இல்லை பல்லைக் கடிக்கிறானா என்று அவர்களுக்குச் சந்தேகம். ஏனென்றால், அவனது புன்னகையும் குரலும் அவர்களது ஈரக்குலையைச் சில்லிடச் செய்தன.

மெண்டோசாவுக்கு அது தன் குரல்தானா என்றே நம்பமுடியவில்லை. அவ்வளவு ஈனஸ்வரத்தில் வெளிவந்தன வார்த்தைகள்.

“பாருங்க பாப்லோ… நீங்க கேள்விப்பட்டதில் எந்த ஒரு மாற்றமும் இல்லை. உங்களை இங்கிருந்து வேறொரு பாதுகாப் பான சிறைக்கு டிரான்ஸ்ஃபர் பண்ணப் போறோம்…”

“நீங்க எல்லோரும் என்னை ஏமாத்திட்டீங்க சென்யோர்…” மெதுவாக ஆனால் கடுமையான குரலில் சொன்னான் பாப்லோ. ‘சென்யோர்’ என்றால் ஸ்பானிஷ் மொழியில் ‘மிஸ்டர்’ என்று அர்த்தம்.

அவனே தொடர்ந்தான். “நீங்க, உங்க பிரெஸிடென்ட், உங்க கவர்மென்ட் என எல்லோரும் சேர்ந்து என்னை ஏமாத்திட்டீங்க. எனக்கும் அரசாங்கத்துக்கும் இடையில ஒப்பந்தம் இருக்கு. அதை எல்லாம் மீறிட்டீங்க. இதுக்கான விலையை நீங்க கொடுத்துத்தான் ஆகணும்…”

“உங்க உயிருக்காகப் பயப்பட வேண்டாம் பாப்லோ..” மெண்டோசாவுக்குக் கலக்கம் தீரவில்லை.

“என்னை அமெரிக்காகிட்ட ஒப்படைக்கப் பார்க்கிறீங்க...”

“இல்ல... அது வந்து…”

“அவனுங்களைக் கொல்லுங்க பாப்லோ…” அந்த அறையிலிருந்த சிகாரியோக்கள் கத்தினார்கள்.

“இவனுங்களை அதிபர் எலெக்‌ஷன் கேம்பைன் அப்பவே தூக்கியிருக்கணும்…” என்றான் இன்னொருவன்.

அந்தக் குளிரிலும் மெண்டோசாவுக்கு வியர்த்துக் கொட்டியது.

“இல்லைங்க… அப்படி இல்லை. உங்களை அமெரிக்காவுக்கு ஒப்படைக்கிறது நம்முடைய அரசியல் சாசனத்துக்கு எதிரானது…”

மெண்டோசா சொல்வதில் உண்மை இருந்தது. அதிபர் கவீரியா பொறுப்பேற்ற பிறகு, நிகழ்ந்த கடத்தல் சம்பவங்களுக்குப் பிறகு ‘எக்ஸ்டிராடிஷன்’ சட்டத்தில் சில திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. அதில் ஒன்றுதான் நார்கோக்களை அமெரிக்காவிடம் ஒப்படைக்கக் கூடாது என்பதும்.

“அமெரிக்காவிடம் ஒப்படைக்கலைன்னா… அப்ப என்னைக் கொல்லப் போறீங்கன்னு அர்த்தம்...”

மெண்டோசாவுக்கு வார்த்தைகள் ஏதும் வரவில்லை. வெறுமனே தலையை மட்டும் பக்கவாட்டில் ஆட்டினார்.

“என்னை இங்கிருந்து கொண்டு போறதுக்கு முன்னாடி, இங்க பல பேர் செத்துருவாங்க...”

“பேத்ரோன்… அவனுங்களைக் கொன்னுடலாம்...”  சிகாரியோக்கள் தங்கள் துப்பாக்கிகளை மெண்டோசாவை நோக்கித் திருப்பினார்கள்.

வெலவெலத்துப் போனார் மெண்டோசா. “உன்னைக் கொல்றதுக்கு என்னை மாதிரியான ஆளை அனுப்பி இருப்பாங்கன்னு நீ நம்புறியா பாப்லோ.? வெளியில நூத்துக்கணக்கான ராணுவ வீரர்கள் இருக்காங்க. பல்வேறு அரசு அதிகாரிங்க இருக்காங்க. இவங்களை எல்லாம் சாட்சியா வெச்சுக்கிட்டுத்தான் நாங்க உன்னைக் கொல்லப் போறோமா..? ”

பாப்லோ அமைதியாக அவரைப் பார்த்தான்.

“நான் வேணும்னாலும் நைட் முழுக்க உன் கூடவே இருக்கேன். நீ எங்களோட கைதி. அதனால நீ எங்க போனாலும் உனக்கான பாதுகாப்பைத் தர வேண்டியது எங்களோட கடமை. அதனால எதைப் பத்தியும் கவலைப்படாதீங்க...”

பாப்லோவின் அமைதியைப் பார்த்து மெண்டோசாவுக்குச் சற்று தைரியம் வந்தது. மேலும் சொன்னார்.

“நான் கிளம்புறேன் பாப்லோ. அதோ… அங்க தெரியுது பாரு ரோடு. அங்கதான் நான் இருப்பேன். நான் வெளியில போயி, சில வீரர்களை உள்ளே அனுப்புறேன். நீங்க எங்க போனாலும் அவங்க உங்க கூடவே இருப்பாங்க…”

பாப்லோ ஒன்றும் சொல்லவில்லை. தான் சொல்ல வேண்டிய அனைத்தையும் சொல்லிவிட்டதாக மெண்டோசா நினைத்தார். அங்கிருந்து திரும்ப எத்தனித்தார்.

பாப்லோவின் ஆட்கள் பாப்லோவிடம் கெஞ்சினார்கள். “பாஸ்... அவனுங்க நம்மைப் பழிவாங்கப் போறாங்க. அவங்களை வெளியில விடப் போறீங்களா..?”

அவர்கள் பேசுவது மெண்டோசாவுக்குக் கேட்டாலும் திரும்பிப் பார்க்கவில்லை. மெண்டோசாவும் நவாஸும் கேட்டுக்கு அருகில் சென்றுவிட்டார்கள். அப்போது அவர்களின் பின்னே சிலர் ஓடி வரும் சத்தம் கேட்டது. அவர்கள் சுற்றி வளைக்கப்பட்டார்கள்.

அந்த நொடி, மெண்டோசாவை வலுவாகத் தாக்கியது.  “முட்டாளே… என்ன காரியம் செய்துவிட்டாய்…” என்று மெண்டோசா யோசிக்கலானார். இங்கு தான் அல்ல, பாப்லோவே தனக்கு எஜமானன் என்ற உண்மை அவருக்கு உறைத்தது.

மெண்டோசா அங்குமிங்கும் பார்த்தார். வாழ்க்கையில் அதுபோன்ற சூழ்நிலையில் குவித்த கவனத்தை விட வேறு எப்போதும் அவர் குவிக்கவில்லை. தப்புவதற்கு வழியே இல்லை. அந்த நிலையைச் சரியாக வெளிப்படுத்துவதற்கு அப்போதைக்கு அவருக்குத் தெரிந்த ஒரே வார்த்தை… ‘கையாலாகாத்தனம்..!’

நீங்கள் என்னதான் நீதிமானாக வேண்டு மானாலும் இருக்கலாம். எவ்வளவு பெரிய அதிகாரம் வேண்டுமானாலும் உங்கள் கையில் இருக்கலாம். ஆனால், இந்த நிமிடம், யார் கையில் அதிக ஆயுதங்கள் இருக்கின்றன என்பதுதான் முக்கியம்.

இதையெல்லாம் அவர் யோசித்துக் கொண்

டிருக்கும்போது சிகாரியோக்களில் ஒருவன் அவரைப் பிடித்து அருகிலிருந்த சோபாவில் தள்ளினான். மெண்டோசா அதில் சரிந்தார். அவர் நிமிர்ந்தபோது பாப்லோ கையில் துப்பாக்கியுடன் அவர் முன் நின்றிருந்தான்.

“சென்யோர்… இந்த நிமிஷத்திலிருந்து நீங்க என்னோட கைதி. ராணுவம் உள்ளே வந்துச்சுன்னா, சாகிற முதல் ஆள் நீங்களாதான் இருப்பீங்க...”

“என்னைப் பிடிச்சி வெச்சிருக்கிறதால அவங்களை உன்னால நிறுத்த முடியாது. அவங்ககிட்ட மெஷின் கன் எல்லாம் இருக்கு. இங்கிருந்து நீ உயிரோட தப்ப முடியாது...” மெண்டோசா கத்தினார்.

பாப்லோ சிரித்தான். “டாக்டர்… இன்னும் உங்களுக்குப் புரிய லையா… ராணுவத்துல முக்காவாசிப் பேரு எனக்காக வேலை செய்யிறவங்க...”

அடுத்த சில நிமிடங்கள் ஒரே களேபரமாக இருந்தன. போன் கால்கள் பறந்தன. மெண்டோசாவின் வீட்டுக்குச் செய்தி சொல்லப் பட்டது. சேனல்கள் ஃப்ளாஷ் செய்துகொண்டிருந்தன.

“இந்தாங்க… பிரெஸிடென்ட்டுக்கு ஒரு போனை போடுங்க...”

“இந்நேரத்துக்கு அவர் போனை எடுக்க மாட்டார் பாப்லோ...”

“அப்ப வேற யாரையாவது கூப்பிடுங்க. ஏன்னா, கொஞ்ச நேரத்தில நீங்க சாகப் போறீங்க...”

மெண்டோசா எச்சிலை விழுங்கினார். அதிபர் அலுவலகத்தின் எண்களை அழுத்தினார்.

மறுமுனையில் அதிபரின் உதவியாளர்.

“உங்களைப் பணயக் கைதியா வெச்சிருக்காங்களா..?”

“ஆமா…” மறுமுனையில் போன் துண்டிக்கப்பட்டது.

செய்தி கேட்டது முதல் அதிபர் கவீரியா நிலைகொள்ளாமல் தவித்தார். மெண்டோசாவைக் காப்பாற்ற சிறப்புப் படையை அனுப்ப உத்தரவிட்டார்.

லா கதீட்ரல் சிறையைச் சில ஹெலிகாப்டர்கள் சுற்றி வந்தன. துப்பாக்கிச் சத்தமும் பூட்ஸ் சத்தமும் ஒரு சேரக் கேட்டன. ஆங் காங்கே குண்டுகள் வெடித்தன.

மெண்டோசா தன் சாவு நெருங்குவதை உணர்ந்தார். தோட்டாக்களிடமிருந்து தன்னைப் பாதுகாத்துக்கொள்ள அவரிடம் எந்தக் கவசமும் இல்லை. ஒரு மேஜையின் பின்னால் சென்று ஒளிந்துகொண்டார். அவர் ஒளிவதற்கும், அவர் இருந்த அறைக்குள் குண்டு ஒன்று வெடிப்பதற்கும் சரியாக இருந்தது. “இப்படித்தான் சாகப் போகிறோமோ..? ” என்ற கேள்வி அவருக்குள் பிறந்தது. ஆனால், அவர் சாகவில்லை.

ஏதோ ஒரு கை அவரை ’தரதர’வென்று இழுத்தது. மெண்டோசா சுதாரித்து எழுந்தார். புகை மண்டலத்துக்கு இடையே தன்னை இழுத்த நபரின் முகத்தை அவரால் பார்க்க முடியவில்லை.

“நாம இங்கிருந்து வெளியே போறோம். என்னோட பூட்ஸை மட்டுமே பார்த்துட்டு வாங்க. நான் ‘ஓடுங்க’ன்னு சொல்றப்போ திரும்பிப் பார்க்காம ஓடிடுங்க..” என்றது அந்தக் குரல். மெண்டோசா அடிபணிந்தார். பாதுகாப்பான இடத்தில் சேர்ந்த பிறகுதான் அவ ருக்கு உண்மை விளங்கியது. தன்னைக் காப்பாற்றியது சிறப்புப் படை என்பது. அது அவருக்கு சந்தோஷத்தைத் தரவில்லை. 

ஏன்? பாப்லோ தப்பித்துவிட்டான்… அதுவும் தன்னைக் கேடயமாக்கி..!

கட்டப்பட்ட ஷூ லேஸ்..!

பாப்லோ எப்போதும் வெள்ளை நிற டென்னிஸ் ஷூ அணிந்திருப்பது வழக்கம். ஆனால், அந்த ஷூவின் லேஸைக் கட்டுவது அவன் வழக்கமில்லை. அதற்கு அவன் சொன்ன காரணம்:

“எப்போது நான் ஷூ லேஸைக் கட்ட ஆரம்பிக்கிறேனோ, அப்போ எல்லோரும் கவலைப்படுங்க. எல்லோரும் ஓடுறதுக்குத் தயாரா இருங்க. ஏன்னா, அது நம்மோட அந்திமக் காலமா இருக்கும்..!”

லா கதீட்ரல் சிறையில் இருந்து பாப்லோ தப்பித்த போது, அவன் தனது ஷூ லேஸைக் கட்டியிருந்தான்.   

(திகில் நீளும்)

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE