பி. சுவாமிநாதன்
ஒரு வழக்கு என்று நீதிமன்றத்தின் படி ஏறிவிட்டால் ‘கோர்ட் ஃபீஸ்’ செலவு, வக்கீல் ‘ஃபீஸ்’ செலவு எவ்வளவு செலவழிக்கப் போகிறோம் என்பது தெரியாது.
வழக்கு எப்போது முடியும் என்று தெரியாது. வழக்கு யாருக்கு சாதகமாக முடியும் என்றும் கணிக்க முடியாது. வழக்கு தொடுத்தவரும் எதிர்த்தரப்பாரும் இருவரும் சொத்தை அனுபவிக்க முடியாமல் ‘கோர்ட்’ சார்பில் ‘ரிஸீவர்’ வைத்தால் என்ன செய்ய முடியும்? ..இப்படி அக்குவேறு ஆணிவேறாக அலசி கேரள பக்தரிடம் மிக இயல்பாகக் கேட்டார் மகா பெரியவா.
எல்லாவற்றையும் பொறுமையாகக் கேட்டுக் கொண்டிருந்த கேரள பக்தரும் மனைவியும் அடுத்து பெரியவா சொல்லப் போகும் பதிலுக்காக அவரது திருமுகத்தையே பார்த்துக் கொண்டிருந்தனர்.
தொண்டையை செருமிக் கொண்டு காஞ்சி மகான் பேச ஆரம் பித்தார்: ‘‘நா சொல்றதெல்லாம் ஒனக்குப் புரியறதா... அண்ணனும் தம்பியுமா நீங்க ரெண்டு பேரும் ஒத்துமையா இருந்த காலம் போய், இப்ப ‘கோர்ட்’ படி ஏறின உடனே, ரெண்டு பேரும் எலியும் பூனையுமா மாறிப் போயிடுவேள்... அப்புறம் இன்னொண்ணும் நடக்கும், தெரியுமா? ’’
‘என்ன? ’ என்பது போல் அதிர்ச்சியுடன் மகானையே ஏறிட்டனர் இருவரும்.
‘‘கோர்ட்டுக்கு ஒரு வழக்கு வந்துடுத்துன்னா, அது எல்லாருக் கும் மறைச்சு மூடுற விஷயம் இல்லை. எல்லோருக்கும் தெரிஞ்ச மாதிரி... வழக்கு ‘கோர்ட்’டுக்கு வந்துட்டதுனால ஒங்களோட குடும்பச் சண்டை ‘ஹிண்டு’ல (மகா பெரியவா அப்போதே ‘இந்து’ ஆங்கிலப் பத்திரிகையின் பெயரைத்தான் பயன்படுத்தி இருக்கிறார்) செய்தியா போட்டுடுவா. அதுல நியூஸ் வந்துடுத்துன்னா ஊர் உலகம் எல்லாருக்கும் தெரிஞ்சுடு மில்லியா? இதெல்லாத்தையும் நீ பாக்கணும்.’’
கேரள பக்தரது முகம் காற்று இறங்கின பலூன் மாதிரி பொசுக் கென்று வற்றிப்போனது. குழப்பம் அதிகமானதுடன் பெரியவா எப்படியும் தீர்வு சொல்வார் என்ற நம்பிக்கையும் அவருக்குப் பிறந்தது. ‘‘ஆமா பெரியவா... நீங்க சொல்றதெல்லாம் வாஸ்தவம் தான். நான் என்ன பண்ணணும்னு நீங்கதான் சொல்லணும்.’’
ஒரு சில நிமிடங்கள் அமைதியாக இருந்த மகான், தொடர்ந்தார்: ‘‘வழக்குன்னு நீ போயாச்சுன்னாலே உன்னோட பணம் விரயமாகும். உன்னோட நேரமும் வீணாகும். உன்னோட சக்தியும் செலவாகும். மன நிம்மதிங்கறது முழுக்கப் போயிடும். குடும்ப கவுரவத்துக்கும் கெட்ட பேரு வந்துடும். இதெல்லாம் இன்னிக்கு இருக்கிற விஷயம். என்ன ஆனாலும் பரவால்லைனு நீ எல்லாத்துக்கும் தயாரா இருக் கியா? யோசிச்சுப் பாரு, எது நல்லதுன்னு...’’
தம்பியோடு ஏற்பட்ட மனஸ்தாபம் காரணமாக ‘கோர்ட்’ படி ஏற வேண்டும்... வழக்கை எதிர்நோக்கியே ஆக வேண்டும் என்று படபடப்புடன் வந்த கேரள பக்தரது மனம், பெரியவாளின் அறிவுரை களைக் கேட்டதும் சற்றே அமைதி ஆனது.
போருக்குப் பின் ஏற்படக் கூடிய உயிரிழப்புகளை, பாதிப்புகளை, அதனால் ஏற்படும் விளைவுகளை எந்த அரசு நிதானமாக உட்கார்ந்து யோசித்தாலும், போரை விரும்பாது. இத்தனை பேரை அழித்து, இத்தனை இடங்களை நாசம் செய்து, மிகப் பெரிய சீரழிவுக்கு வித்திடுகிற இந்த யுத்தம் தேவைதானா என்று ஆற அமர உட்கார்ந்து யோசித்தால், என்ன முடிவு கிடைக்கும்?.. சமாதானம்தானே!
கேரள பக்தர், மகா பெரியவாளைக் கூர்ந்து பார்த்தார். ‘‘பெரியவா... நீங்க சொல்றதெல்லாம் புரிஞ்சுண்டேன். வழக்குன்னு ஆரம்பிச்சுட்டா, என்ன எப்படி ஆகும்னு சொல்ல முடியாது. நீங்க சொன்ன அத்தனையும் சத்தியம். தம்பியை கேஸ் போட வைக்காம இருக்கறதுக்கு என்ன பண்ணறதுனு பாக்கணும் பெரியவா. நானும் கொஞ்சம் இறங்கித்தான் வரணும்னு புரியறது.
காரணம், இத்தனை நாளா கட்டிக் காத்த எங்க குடும்பத்து கவுரவம் முச்சந்திக்கு வந்துடுத்துன்னா, அதை யாராலுமே தாங்க முடியாது. எல்லாருக்கும் பெரிய தலை குனிவு ஏற்படும். எனவே, வழக்கு விவகாரம், இதெல்லாம் வேண்டாம் பெரியவா’’ என்று சொன்னவர், இரு கைகளையும் குவித்து மகானை வணங்கினார்.
தன் பக்தனை ஒரு புன்னகையுடன் பார்த்தார் மகான்.
‘‘பெரியவா... இந்த விஷயத்துல நான் மேற்கொண்டு என்ன பண்ணணும், எப்படிப் பண்ணணும்னு நீங்கதான் எனக்கு வழி காட்டணும்’’ என்று வேண்டினார் பக்தர்.
‘‘அண்ணா - தம்பிங்கிற உறவு எப்படி? ஏதோ மனஸ்தாபத்தினால பிரிஞ்சா நிரந்தரமா பிரிஞ்சுடற உறவா அது? அவனும் நீயும் உடன் பிறந்தவா இல்லியா... உங்க ரெண்டு பேருக்குள்ள எத்தனை சண்டை வந்தாலும், தற்காலிகமா பிரிஞ்சாலும் சேரணும்னு நினைச்சா சட்டுன்னு ஒட்டிக்கிற உறவுதானே இது... உங்களுக்குள்ள சண்டை, சச்சரவுன்னா அண்ணா - தம்பி உறவு இல்லேன்னு ஆயிடுமா?’’.. மக்களுக்கு நல்வழி காட்டும் கருணாமூர்த்தி இதமாகச் சொன்னார்.
ஒரு குழந்தைக்கும் புரியும்விதத்தில் தெளிவாக எடுத்துரைத்த பெரியவாளைப் பார்த்தார் பக்தர். அவரது கண்களில் நீர்த் துளிகள் எட்டிப் பார்த்தன.
‘‘என்னிக்கு இருந்தாலும் அவன் நம்மோட தம்பிதானேங்கிற எண்ணத்தை உன் மனசுல வளர்த்துக்கப் பாரு... அதுதான் காலாகாலத்துக்கும் நல்லது’’... மகான் சொன்னதும், தன் தலையை அசைத்து ஆமோதித்தார்.
‘‘அடுத்து நீயும் உன்னோட ஆத்துக்காரியும் என்ன பண்றேள்னா, நடந்தது எல்லாத்தையும் மறந்து தம்பியோட கிரஹத்துக்குப் புன்னகையோட போகணும். நமக்கு ரொம்பவும் வேண்டப்பட்ட சொந்தக்காரா கிரஹத்துக்குப் போகிறபோது என்னென்ன வாங்கிண்டு போறோம்... அது மாதிரி நிறைய பழங்கள், புஷ்பம் எல்லாம் வாங்கிண்டு ரெண்டு பேரும் போங்கோ.
பழம் மற்றும் பூவோட புன்னகை முகத்தோட தன்னோட கிரஹத்துக்கு முன்னால் வந்து நிக்கற உங்க ரெண்டு பேரைப் பார்த்ததும், அவன் பழசை எல்லாம் மறந்து, உங்களை ‘வாங்கோ வாங்கோ’னு வரவேற்பான். ஆசை ஆசையா உள்ளே கூட்டிண்டு போய் உக்காத்தி வெச்சு உபசாரம் பண்ணுவான். தன்னோட ஆத்துக்காரியைக் கூப்பிட்டு, ‘ஏய், வந்திருக்கிறது யாருன்னு பாரு’..ன்னு உரக்கக் குரல் கொடுப்பான்.
அப்ப நீ என்ன பேசறேன்னா, ‘தம்பி... உடன் பிறந்த நம்ம ரெண்டு பேருக்குள்ள ஏண்டா பிரிவினை... பழசை மறந்துடுவோம். சொத்துல உனக்கு என்ன வேணுமோ, எடுத்துக்கோ. எனக்கு எந்தவிதமான ஆட்சேபணையும் இல்லை. நம்ம குடும்பத்தோட சொத்து முழுக்க உன்கிட்ட இருந்தாலும் அது எங்கிட்ட இருக்கிறாப்லதான். உன் மனசுக்கு என்ன தோன்றதோ, அதை நீயே எனக்குப் பிரிச்சுக் குடு... நானும் குடும்பத்தை ஓட்டணும் இல்லியா’ன்னு சொல்லு... அப்புறம் என்ன... ‘அண்ணா, என்னை மன்னிச்சுடுங்கோ’ன்னு உன் கால்ல விழுந்துடுவான்’ என்று நடக்கப் போவதை குறிப்பால் உணர்த்தினார் காஞ்சி முனிவர்!
கேரள பக்தரும், அவரது மனைவியும் பெரியவாளின் பேச்சில் கரைந்தே போனார்கள். இருவரது முகத்திலும் சந்தோஷம் கூடியது. இங்கே வருவதற்கு முன் இருந்த இறுக்கம், இப்போது எங்கே போனது என்று தெரியவில்லை.
இருவரும் புதுத் தெம்பு பெற்றது போல் எழுந்தார்கள். பரப்பிரம்ம சொரூபமாக வீற்றிருக்கக் கூடிய மகா பெரியவாளுக்கு மீண்டும் நமஸ்காரம் செய்தார்கள்.
அவர்களுக்கு பிரசாதம் கொடுத்து உத்தரவு தந்தார் பெரியவா.
இருவரும் மடத்தை விட்டு வெளியேறினார்கள்.
அதுவரை தன் அருகில் இருந்த ஒரு தொண்டரைப் பார்த்து அவரிடம் மகான் சொன்னார்: ‘‘பாவம், ரொம்ப பயந்து போயிட்டான் இவன். சண்டைன்னு போறதைவிட, சமாதானமா போய்ப் பார்த்தா எல்லாத்துக்கும் ஒரு தீர்வு கிடைச்சிடும். இவன் தம்பி ஆத்துக்குப் போனதும், ‘அண்ணாவே மனசு இரங்கி நம்ம கிரஹத்துக்கு வந்திருக் கான்’னு நினைப்பான் தம்பி. அப்பவே அண்ணன் மேல இருக்கிற பாதி விரோதம் போயிடும். அப்புறம் ரெண்டு பேரும் உக்கார்ந்து பேசினா, இருக்கிற மிச்ச விரோதமும் போயிடும். தம்பியே அண்ணன் கால்ல விழுந்து, ‘இந்தாண்ணா... இந்த சொத்தை எல்லாம் நீங்களே வெச்சுக்குங்கோ’னு சந்தோஷமா குடுத்துடுவான். நாம நல்லவனா நடந்துண்டா, மத்தவாளும் அதுபோலத்தான் நம்மகிட்ட நடந்துப்பா...’’ என்று சொல்லிவிட்டு எழுந்து நடக்க ஆரம்பித்தார் அந்த நடமாடும் தெய்வம்.
மகானுடைய வாக்கு வேத வாக்கு ஆயிற்றே!
அது பலிக்காமல் போகுமா?
பெரியவா வகுத்துக் கொடுத்த பாதையின்படி சென்ற அண்ணன், தன் தம்பியோடு அடுத்து வந்த ஒரு சில நாட்களிலேயே இணைந்தார். எல்லாம் சுபமாக முடிந்தது. விரோதத்தை மறந்து ஒன்றான சகோதரர்கள், நன்றிப் பெருக்குடன் காஞ்சி மகானை நினைத்து கண்ணீர் மல்க கரம் கூப்பித் தொழுதனர்.
(ஆனந்தம் தொடரும்)