அதிமுக 5.. திமுக 15- இழுப்பு வலையில் எம்எல்ஏக்கள்!

By காமதேனு

குள.சண்முகசுந்தரம்

மே 23-ம் தேதி வெளிவர இருக்கும் தேர்தல் முடிவுகள் மத்திய பாஜக அரசுக்கு மட்டுமல்ல... தமிழகத்தில் இருக்கும் அதிமுக ஆட்சியின் ஆயுளையும் தீர்மானிக்கக் காத்திருக்கிறது!

அதிமுக, திமுக, அமமுக இந்த மூன்று கழகங்களுமே மக்களவைத் தேர்தல் முடிவுகளைவிட 22 சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் முடிவுகளையே பெருத்த ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றன. கள நிலவரம் சரியில்லை என்று அரசல்புரசலாக வந்துகொண்டிருக்கும் தகவல்களால் அதிமுக தலைமை சற்று உதறலில் தான் இருக்கிறது. தமிழகத்தில் மத்திய மாநில அரசுகளுக்கு எதிரான அலை வீசுவதால், அனைத்திலும் ஜெயம் நமக்கே என்ற உற்சாகத்தில் இருக்கும் ஸ்டாலின், அடுத்த முதலமைச்சராக அரியணை ஏறுவதற்கு நாள்கூட குறித்துவிட்டதாகச் சொல்கிறது திமுக உள்வட்டம். ஆனால், “அதிமுக ஆட்சியைக் கலைக்க திமுகவுக்கு கை கொடுப்போம்” என்று சொல்லும் அமமுக, “அதற்காக ஸ்டாலின் முதல்வராக ஒருபோதும் துணை நிற்க மாட்டோம்” என்று தடாலடி கிளப்புகிறது. ஒருவகையில் பார்த்தால் தினகரனின் வாதம் சரிதான். ஆட்சிக் கலைப்பு என்பதையே அதிமுகவினரால் ஜீரணிக்க முடியவில்லை. இருந்தாலும் கலைப்பு என்னும் கசப்பு மருந்தைக் கொடுத்தால் கட்சி நம்மிடம் வரும் எனக் கணக்குப் போடுகிறார் தினகரன். அதேநேரத்தில் அதிமுக ஆட்சியைக் கலைத்துவிட்டு ஸ்டாலினை அரியணை ஏற்ற துணை போனால் அரசியலில் அட்ரஸ் இல்லாமல் போய்விடுவோம் என்பதும் அவருக்கு நன்றாகவே தெரியும்.

ஸ்டாலின் சொல்வது போல் 22 தொகுதிகளிலுமே திமுக ஜெயித்தால், திமுக கூட்டணியின் பலம் 118 ஆக உயரும். அப்படி வந்துவிட்டால் ஸ்டாலின் நினைப்பது நடக்கலாம். ஆனால் அதற்கு, மத்தியில் காங்கிரஸ் அல்லது காங்கிரஸ் ஆதரவிலான ஆட்சி அமையவேண்டும். அப்படி இல்லாமல் பாஜக ஆட்சியே தொடருமானால் எடப்பாடியாருக்கு மீண்டும் கொண்டாட்டம்தான். மத்தியில் பாஜக ஆட்சி நீடித்து மாநிலத்தில் திமுக கூட்டணியின் பலம் கைமீறிப் போனால் அதைச் சமாளிக்க ‘பி’ பிளானையும் தயாராய் வைத்திருக்கிறது அதிமுக.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE