மண்... மனம்... மனிதர்கள்! - 11

By ஸ்ரீராம் சர்மா

ஆதியை அமுதை என்னை ஆள் உடை அப்பனை ஒப்பவர் இல்லா

மாதர்கள் வாழும் மாட மா மயிலைத் திருவல்லிக்கேணிக் கண்டேனே!

- திருமங்கையாழ்வார்.

திருவல்லிக்கேணி என்பது இந்து மத ஷேத்திரமாக அறியப்பட்டாலும் திருவல்லிக்கேணிவாசிகள் மனிதர்களுக்குள் பேதம் பார்ப்பதில்லை. பாரதி வாழ்ந்த பூமியில் சாதியாவது மதமாவது?

அன்றைய திருவல்லிக்கேணியில் பெசன்ட் ரோடும் கிருஷ்ணாம்பேட்டையும் கிளை பிரியும் அந்தக் கோணவாட்டில் 30-க்கு 20 அளவில் தெருவோடு பிதுங்கி அமைந்திருந்தது ‘நாகூர் பாய்' பலசரக்குக் கடை.

காலையில் அரை வயிற்றோடு மாநகராட்சி ஸ்கூலுக்குக் கிளம்பும் ஏழை சிறுவர்களெல்லாம் நேராக அங்கே போய்த்தான் நிற்பார்கள்.

“கொஞ்சம் வெல்லம்தான் குடு பாய்...”

“பாய்... கொஞ்சம் ஒட்ச்ச கடல குடேன்...”

“தேங்கா பத்த பாய்...”

அரிசி மூட்டையில் சாய்ந்து உரிமையோடு அடம் பிடிக்கும் பள்ளிக் குழந்தைகளிடம் தாவித் தாவி திணித்தபடியே, “ஓடுங்க... போய் ஒழுங்காப் படிங்க...” என்று சிரித்தபடியே அனுப்பி வைப்பதில் நாகூர் பாய் என்றுமே சலித்தல்லை.

ஏரியா மக்கள் மீது அவருக்கு பாசம் அதிகம். யார் கல்யாணப் பத்திரிகை வைத்தாலும் தவறாமல் முன்னே நிற்பார். கழுத்து வைத்த சில்வர் குடத்தில் சக்கரையை நிரப்பிக் கொடுக்கும் பாய், கைலியோடு பந்தியில் அமர்ந்து பருப்பு ரஸத்தை முழங்கையில் உறிஞ்சுவார்.

போட்டோவுக்கு நிற்கச் சொன்னால் மட்டும் எஸ்கேப் ஆவார். நாகூர் பாய்க்கு கூச்சம் அதிகம்.

நாகூர் பாய் கடையில் ஆச்சரியமான சென்ட்டிமென்ட் ஒன்று உண்டு.

எல்லாவிதமான மளிகைப் பொருட்களும் கிடைக்கும் அவரது கடையில் ‘கிஸ் மிஸ்’ எனப்படும் உலர் திராட்சை மட்டும் கிடைக்காது.

“இன்னா பாய் அக்குருமம் பண்ற... பாயாசம் வெச்சிட்டு திராட்சை போடத் தாவலையா... அதுக்குன்னு இன்னொரு கடைக்கு ஓட சொல்றியா?”

“கோவிச்சுக்காதம்மா, நான் வேணா இறங்கிப் போயி பக்கத்துக் கடையில வாங்கித் தாரேன். ஆனா, நான் விக்கறதில்ல...”

நாகூர் பாய் ஏன் கிஸ் மிஸ் விற்பதில்லை?

ஒவ்வொரு மாதமும் முதல் வாரத்தில் திருவல்லிக்கேணியின் உயர்தர சம்பளக்காரர்கள் நீளமான லிஸ்டை எடுத்துக்கொண்டு நாகூர் பாய் கடைக்கு குழந்தைகளோடு வருவார்கள்.

பெரிய பட்ஜெட்காரர்களான அவர்களை கவர் செய்யும் விதமாக குழந்தைகளிடம் கொஞ்சம் ‘கிஸ் மிஸ்’ ஸை அள்ளிக் கொடுப்பது பாய்க்கு வழக்கம்.

ஒருநாள் கடையில் பாய் இல்லை. தொழுகைக்குச் சென்றவர் திரும்பிக் கொண்டிருந்த நேரம் கடையில் ஒரே சத்தம்.

வெளியே ஸ்கூல் யூனிஃபார்மோடு நிற்கும் தண்டபாணியின் கையை எட்டிப் பிடித்துக்கொண்டிருந்த நாகூர் பாயின் மச்சான் அஷ்ரஃப்.

மூட்டையில் சரிந்து தொங்கியபடி தண்டபாணியின் தலையில் ‘மட்...மட்டென்று’ அடித்துக் கொண்டிருந்தான்.

தண்டபாணியின் அப்பா தர்மலிங்கம் ஏரியாவில் பிரபலமான ‘ஸைன் போர்டு ஆர்டிஸ்ட்’. பாய்க்கு ரொம்ப வேண்டப்பட்டவர்.

சைக்கிளை அப்படியே போட்டுவிட்டுக் கத்திக் கொண்டே வந்தார் பாய்.

“ஏய்...ஏய்... ஏண்டா சின்னப் புள்ளையப் போட்டு அடிக்குற?”

“அத்தான், கிஸ் மிஸ் டப்பாவுக்குள்ள கையை வுட்டுட்டான் அத்தான்...”

“அதுக்கு..? புள்ளைய அடிச்சிடுவியா? எட்றா கைய...”

தேம்பி அழுதுகொண்டிருந்த தண்டபாணியை அரவணைத்துக்கொண்டு தனியே அழைத்துப்போய் அவன் தலையை தடவிக்கொடுத்த படியே நாகூர் பாய் கேட்டார்.

“தண்டபாணி, உங்கப்பா எப்பேர்ப்பட்ட ஆர்டிஸ்ட். அவர் புள்ள நீ இப்படி செய்யலாமாப்பா? வேணும்னு கேட்டா பாய் நான் தர மாட்டேனாப்பா?”

“இல்ல பாய், நீ நெறையா வாங்குறவங்களுக்குத் தான் கிஸ்மிஸ் தருவ. எங்கம்மா எப்பப் பாத் தாலும் நாலணாவுக்கும் எட்டணாவுக்கும் வாங்கியாடான்னுது. என்னிக்குத்தான் பாய் நான் கிஸ்மிஸ் துன்றது?”

பொட்டில் அடித்தாற்போல அதிர்ந்த நாகூர் பாய் “யா... அல்லாஹ்...” எனத் தன் இரண்டு காதுகளையும் பிடித்துக் கொண்டார்.

“பாரபட்சம் பார்த்து குழந்தைகள் மனசைக் கெடுத்தது என்னுடைய தப்புதான். அறியாமல் செய்துவிட்ட ஏழை என்னை மன்னித்துவிடு” என்று மனதுக்குள் வருந்திக் கேட்டவர்...

அன்றோடு ‘கிஸ் மிஸ்’ விற்பதையே விட்டுவிட்டார். யாராயிருந்தாலும் வெல்லம்தான்.

அது, ஆவணி மாதம்!

ஒவ்வொரு விநாயகர் சதுர்த்தியின் போதும் திருவல்லிக்கேணியில் பிள்ளையார் ஊர்வலம் நடக்கும். அது, திலகர் காலத்து வழக்கம். பல்லாயிரக்கணக்கில் கூட்டம் கூடும்.

சென்னையின் எட்டுத் திக்கிலுமிருந்தும் ஆயிரக் கணக்கான பிள்ளையார்கள் கூடி அணிவகுக்க தலைமையகமான திருவட்டீஸ்வரன் பேட்டையிலிருந்து ஆர்ப்பாட்ட ஊர்வலமாக அழைத்துச் சென்று மெரினா கடலில் ‘விசர்ஜனம்’ செய்வார்கள் பக்தர்கள்.

அன்று, பிள்ளையார் ஊர்வலம்!

மதியம் 1 மணிபோல முதல் தேரில் ஏறி நின்ற விட்டல் நாராயணன், காவிக் கொடியை சுழற்றிச் சுழற்றி ஆட்டிக் காட்ட வானளாவிய கோஷத்தோடு ஊர்வலம் நகரத் துவங்கியது.

“பாரு பாரு பிள்ளையாரு, ஆடி வரும் தேரு...” டி.எல்.மகாராஜனின் குரலோடு உற்சாகமாக ஆடிப்பாடி வந்த ஊர்வலம் மாலை 4 மணி போல ஐஸ் அவுஸ் ஜங்ஷனை அடைந்தது. நாலு முனை கூடும் இடம் என்பதால் கூட்டத்தின் உற்சாகம் எகிறியது.

ஆட்டமும் பாட்டமுமாக இருந்த நேரம், யார் செய்த சதியோ... ‘ஐஸ் அவுஸ்’ மசூதிக்குள்ளிருந்து செருப்பு ஒன்று பறந்து வந்து பிள்ளையார் சிலையின் மீது விழுந்தது.

அவ்வளவுதான். மொத்தக் கூட்டமும் மூர்க்கமானது. பெரிய தெரு தங்கராஜோடு வந்த கூட்டம் மசூதிக்கு உள்ளிருந்தவர்களை எச்சரித்து எகிறிக்கொண்டிருக்க பதற்றம் கூடியது. மீசை பிரகாஷ் ஜி எல்லோரையும் அமைதிப்படுத்த முயன்று கொண்டிருந்தார்.

அதற்குள் சில சமூக விரோதிகள் ‘மசூதியைத் தாக்குகிறார்கள்’ என்று செய்தியைத் திரித்துப் பரப்பி விட, மீர்சாகிப் பேட்டையிலிருந்து புஸுபுஸுவென்று கூடிவிட்டார்கள். எல்லோர் கையிலும் இரும்பு ராடுகள், தடிகள், கறி வெட்டும் கத்திகள்.

வந்த வேகத்தில் இரண்டு பேருக்கு வெட்டு விழ கூட்டம் சிதறி ஓடியது.

மார்க்கெட்டிலிருந்து பதறியபடி ஓடி வந்த சில முஸ்லிம் பெரியவர்கள் “ஜகடா வேணாம்பா... வுட்ருங் கப்பா” என்று மடக்கினாலும் சமூக விரோத சக்திகள் ஆயுதங்களைக் கைவிட மறுத்து முன்னேறியது.

மைலண்ட்ஸ் ஹோட்டல் வாசலில் மேலும் இரண்டு பேரை வெட்டியது. எதிர்பாராத கலவரத்தால் ‘லா அண்ட் ஆர்டர்’ நிலை குலைய, போலீஸ் ஸ்ட்ரெங்த் போதாமல் திணறியது.

அராஜகத்துக்குப் பழக்கமில்லாத அமைதியான திருவல்லிக்கேணிவாசிகள் ரத்தத்தைக் கண்டு அலறினார்கள்.

செய்தி அயோத்திக் குப்பத்துக்கு போனது. திருவல்லிக்கேணிவாசிகளை அடித்துவிட்டார்கள் என்றதும் அயோத்திக் குப்பம் கோபத்தின் உச்சத்துக்கே சென்றது.

ரத்தம் சொட்டச் சொட்ட எதிரே வந்த ஏரியா வாசி களைக் கண்டதும் கண் சிவந்தது. திருக்கை வால், மீன் வெட்டும் கத்திகளோடு களமிறங்கியது.

அடுத்த சில நிமிடங்களில் கலவரம் முற்றி வெடித்தது. போலீஸ் ஃபோர்ஸ் வந்து சேர்வதற்குள் சிலர் பலி யாகிவிட நூற்றுக்கணக்கான சமூக விரோதிகள் ரத்த மேனியோடு தப்பியோடி மறைந்தார்கள்.

ரணகளப்பட்ட திருவல்லிக்கேணி கண்ணீர்ப் புகை வீச்சுக்குப் பிறகே கட்டுக்குள் வந்தது.

இதற்கிடையில்தான் நடக்கக் கூடாத அந்த மாபாதகம் நடந்துவிட்டது.

விநாயகர் சிலைகளை ஆங்காங்கே நடுரோட்டில் விட்டுவிட்டு செய்வதறியாமல் வெறியோடு அலைந்து கொண்டிருந்த வட சென்னை இளைஞர் பட்டாளம் ஒன்று, குப்பங்கள் எல்லாம் ஒன்றுகூடி சப்போர்ட் கொடுக்கிறது என்று தெரிந்ததும் வெறி அவிழ்த்துக் கொண்டு ஆட ஆரம்பித்தது.

அழுக்கேறி நெளிந்து தொங்கிக்கொண்டிருந்த ‘நாகூர் பாய் கடை’ போர்டு அந்தக் கும்பலின் கண்களில் பட்டுவிட்டது.

“தூக்குங்கடா அதை...”

அடுத்த கணம் கடைக் கதவுகள் பிய்த்து எறியப்பட்டன.

அரிசி பருப்பு மூட்டைகள், எண்ணெய் டின்கள், பெருங்காய குப்பிகள், கல்லு உப்பு இருந்த பீங்கான் பீப்பாய், ஊதுபத்திக் கற்பூரக் கட்டுகள், வெல்ல மூட்டை, ஊறுகாய் பாட்டில்கள், டால்டா டப்பாக்கள், புளி மூட்டை என ஒன்றுவிடாமல் மொத்தத்தையும் தூக்கி தெருவில் வீசி கடாசிக் கொண்டிருந்தார்கள்.

இதில் கொடுமை என்னவென்றால் கடையின் முதல் கதவை பிய்த்து எடுத்த போதே அங்கே ஆஜராகியிருந்தார் நாகூர் பாய்.

கடைக்கு எதிரே இருக்கும் ‘ஹாப்பி கார்னர்’ பில்டிங் மாடியில் சாய்ந்து நின்றபடி, தன் 35 வருட உழைப்பு சம்ஹாரம் செய்யப் படுவதை இறுகிய முகத்தோடு வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தார்.

அருகே இருந்தவர்கள் தர்மசங்கடத்தோடு நாகூர் பாயின் தோளைப் பற்றிப் பிடித்து ஆறுதல் சொல்ல...

“அட, வுடுங்கப்பா... பாத்துக்கலாம்...” என தைரிய மாகச் சொல்லிக்கொண்டே இருந்தவருக்கு ஒரு சமயத்தில் பொலபொலவென வேர்த்துக் கொட்ட ஆரம்பித்தது.

சட்டென மார்பைப் பிடித்துக்கொண்டு சரிந்தார் நாகூர் பாய்.

ரோந்து சுற்றிக்கொண்டிருந்த போலீஸ் ஜீப் ஒன்றை மடக்கி அவசர அவசரமாக பாயை ஏற்றி பீச் ரோடு வழியாக சுற்றிக்கொண்டுபோய் ‘ஜி எச்’ல் அட்மிட் செய்தார்கள்.

மூன்று நாள் அபாயக் கட்டத்தில் இருந்த நாகூர் பாயை நான்காம் நாள் ஜெனரல் வார்டுக்குக் கொண்டு வந்தார்கள்.

கிருஷ்ணாம்பேட்டை ஏழை ஜனங்கள் ஓடோடிப் போய்... “நாங்க இருக்கோம் பாய்...” என்று அவரது கைகளை இறுக்கிப் பிடித்துக் கொண்டு விம்மியது.

பிறகென்ன? மருந்தாவது, மாத்திரையாவது ரெண்டே வாரத்தில் நிமிர்ந்துகொண்டார் நாகூர் பாய்.

ரிக்ஷாவில் வந்து இறங்கிய பாய், சிதிலமாகிக் கிடந்த தன் கடை வாசலில் ஒரு பாயை விரித்துப்போட்டு அமைதியாய் உட்கார்ந்து கொண்டார்.

கண்ணீரோடு தன்னைக் காண வந்த ஏரியா ஜனங்களிடம்...

“அட, படைச்சவனுக்குத் தெரியாதா நமக்கு என்ன செஞ்சு வைக்கணும்னு? இன்னமும் என்னைய மவுத் ஆக்காம வெச்சிருக்கானே... அதுக்கு நன்றி சொல்லிக் குவோம்... கேட்டீயளா?”

அடுத்தடுத்த நாட்களில் பல விஷயங்கள் சத்த மில்லாமல் நடந்தேறின.

ஐ.ஓ.பி பாங்க் கேஷியர் நரசிம்மன் அதிசயமாக அவரே ஷ்யூரிட்டி போட்டு லோனை க்ளியர் செய்து கொடுத்தார்.

டர்க்கி டவலில் சுருட்டி எடுத்து வரப்பட்ட பணக் கட்டுக்களை “பெரிசு குடுத்தம்ச்சுது...” என்று பாயிடம் கொடுத்துவிட்டு ஆட்டோவில் ஏறிப் பறந்தார்கள் அயோத்தி குப்பத்து ஆட்கள்.

கான்ட்ராக்டர் சண்முகம் தானே முன்னின்று இரண்டே நாளில் கடையைப் புத்தம் புதிதாய் செப்பனிட்டுக் கொடுத்தார். பந்தல் கார சேகர் தன் பங்குக்கு பளபளக் கும் ஷட்டரை ஃபிட் பண்ணிக் கொடுக்க லாரியில் புது சரக்குகளாக வந்து இறங்கின.

ஆறு மாதங்களுக்கு ‘கணக்கு நோட்டு’ வைத்துக் கொள்வதில்லை. ரொக்கத்துக்கே பொருள் வாங்குவது என்று தங்களுக்குள் பேசி முடிவெடுத் தார்கள் ஏரியாவாசிகள்.

திருவல்லிக்கேணி சமையல்காரர்கள் எல்லோரும் சீசன் முழுவதும் தங்களது மளிகை லிஸ்டை பாய் கடைக்கே திருப்பிவிட்டார்கள். சுற்றிவர இருக்கும் மொத்தக் கோயில் விசேஷங்களுக்கும் நாகூர் பாய் கடையிலேயே கொள்முதல் செய்யப்பட்டது.

திருவல்லிக்கேணி ஜனங்கள் தன் மீது வைத்துள்ள பாசத்தை இம்மி இம்மியாக அனுபவித்த நாகூர் பாய் பளபளவென கலர் கூடிப் போனார்.

ஆறே மாதத்தில் நாகூர் பாய் கடை முன்பைவிட பொலிவாகி நின்றது.

அவ்வப்போது நேரில் சென்று தனக்கு உதவிய எல்லோருக்கும் பணத்தைத் திருப்பிக் கொடுத்து நன்றி சொல்லி வந்தார் நாகூர் பாய். ஒரே வருடத்தில் பேங்க் லோனும் அடைபட்டு விட்டது.

மீண்டும் விநாயகர் சதுர்த்தி வந்தது.

சென்ற ஆண்டின் கலவரமும் பதற்றமும் நினைவுக்கு வந்துகொண்டேயிருக்க... அதை மறக்க முயன்று கொண்டிருந்தார்கள் திருவல்லிக்கேணிவாசிகள். ஐஸ் அவுஸ் கார்னரில் போலீஸ் குவிக்கப்பட்டிருந்தது.

விடிந்தால் பிள்ளையார் ஊர்வலம்.

“கடவுளே, அசம்பாவிதம் ஏதும் நடந்துவிடக் கூடாதே” வெளியே காட்டிக்கொள்ளாத பதற்றம் அன்றைய திருவல்லிக்கேணி முழுவதும் படர்ந்து இருந்தது.

வழக்கம்போல மதிய தொழுகைக்குச் சென்றிருந்தார் நாகூர் பாய்.

அவரது கடை வாசலுக்கு சற்றுத் தள்ளி மீன் பாடி வண்டி ஒன்று நிறுத்தப்பட்டிருந்தது. நீல நிற தார்ப்பாய் போர்த்தி மறைக்கப்பட்டிருந்த அந்த மீன் பாடி வண்டியின் அருகே அடர்ந்த தாடியோடு காத்துக் கொண்டிருந்தான் தண்டபாணி.

அவனிடம் ஒரு அவசரம் தெரிந்தது. ஆனாலும், ஒரு முடிவோடு வந்தவன் போல பாய் திரும்பி வரட்டும் என்று பொறுமை காத்துக்கொண்டிருந்தான்.

வேகவேகமாக சைக்கிளில் வந்திறங்கினார் பாய்.

“ஏ...தண்டபாணி... நல்லாயிருக்கி யாப்பா ?”

“..............”

“என்னாப்பா தாடியெல்லாம் பெரிசா வளத்திருக்கே..”

“குலசாமிக்கு வேண்டுதல். ”

“வெரிகுட். நல்லபடியா போய்வா... ஏம்ப்பா... எங்க பாத்தாலும் உன் பேரத்தான் சொல்றாங்க கேட்டியா. ஸைன் போர்டுன்னாலே தண்டபாணின்னு ஆயிடுச்சாமேப்பா... அப்பாவுக்கு மேல தொழில்ல பேரெடுத்துடுவ போலருக்கே..?”

நறநறவென தாடியை சொறிந்துகொண்டான் தண்டபாணி.

“உன்னப் பத்தி, நாலு பேர் நல்லா சொல்றது காதுக்கு வரேயில மனசு நெறையுதுல்லா. சரி சொல்லு, என்னா விஷயம்?”

அதுவரை பொறுமையாக காத்திருந்த தண்டபாணி சடாரென ஒரே தாவாக தாவி மீன் பாடி வண்டியில் ஏறி நின்றான். அதில், போர்த்தப்பட்டிருந்த நீலத் தார்ப்பாயை சரேலென உருவினான்.

உள்ளே, 20 க்கு 6 அளவில் வண்ணங்கள் கொப்பளிக் கும் சைன் போர்டு ஒன்று பெரிய பெரிய எழுத்துகளோடு ‘நாகூர் பாய் கடை’ என மின்னியது.

“பாய், உன் கடைக்கு ஒரு போர்டு செஞ்சி எடுத்தாந்திருக்கேன். ஏணி குடு பாய். மாட்டி வுட்டுட்டு கிளம்பறேன்...”

நாகூர் பாய் திடுக்கிட்டார்.

“அட ஆமாய்யா, கடையை இவ்வளவு ரெடி பண்ணியும் புது போர்டு மாட்டணும்னு யாருக்கும் தோணாமப் போச்சேப்பா...” நெற்றியில் தட்டியபடி சிரித்துக்கொண்டார்.

“எப்டியிருக்கு பாய்?”

பாய்க்கு கண்கலங்கிவிட்டது. உதடுகளை அழுந்தக் கடித்துக்கொண்டே சட்டெனக் கடைப்பக்கம் திரும்பிக் கொண்டார்.

“யே... அஷ்ரஃபு, அந்த ஏணிய வெளிய எடுத்து போடுப்பா...”

சரசரவென மேலே ஏறியது போர்டு.

நாலு முக்கில் எங்கிருந்து பார்த்தாலும் கண்ணை பறிப்பது போல வண்ணம் தீட்டியிருந்தான் தண்டபாணி. பாய்க்கு வாயெல்லாம் பல்லாகிப் போனது. தண்டபாணியைக் கட்டிப்பிடித்துக் கொண்டார்.

“சரி, பாய் நான் கிளம்புறேன். பிள்ளையார் ஊர்வல வேலை நிறைய பாக்கி கெடக்கு. அப்படியே போட்டுட்டு உனக்காகத்தான் வந்தேன்...”

“அட, கொஞ்சம் இருப்பா...” என்று தண்டபாணியை அணைத்தபடி கடைக்கு வந்தவர் உள்ளே தாவி ஏறி கல்லாவில் அமர்ந்துகொண்டார்.

“ரொம்ப நல்லா பண்ணியிருக் குற தண்டபாணி. இன்னா மனசுபா உனக்கு. சரி, சொல்லுப்பா, எவ்ளோ செலவாச்சு, நான் என்னா தரணும்?”

“அட, வுடு பாய், அதெல்லாம் ஒண்ணும் வேணாம். கிளம்புறேன்...”

தண்டபாணி ஓடிப் போய் மீன் பாடி வண்டியில் தாவி ஏறினான்.

“இதப் பாரப்பா, வளர்ற புள்ள நீ. உன் கைக்காசப் போட்டா பண்ணுவ... அதெல்லாம் தப்பு கேட்டியா..?”

“அட, கம்முன்னு இரு பாய். அதெல்லாம் ஒண்ணும் வேணாம்...”

தண்டபாணி பெடலை ஏறி மிதித்து நகரப் பார்க்க... நாகூர் பாய் அடித்தொண்டையில் இறைந்தார்.

“ஏ...தண்டபாணி, இங்க பாரு. நீ மட்டும் இப்பம் ஏதும் வாங்காம போனேன்னு வையி... நான் போர்டை அவுத்துருவேன் கேட்டுக்க...”

குறுக்கு பிரேக்கை இழுத்து நிறுத்திய தண்டபாணி சிரித்தபடியே மெல்ல இறங்கி வந்தான்.

“சரி, எதுனா குடு பாய்...”

“நீ என்னா கேட்டாலும் தருவேன் இந்த பாய்... சும்மா கேளுப்பா..”

அரிசி மூட்டையில் வாகாக சாய்ந்துகொண்ட தண்டபாணி உரிமையோடு கை நீட்டிக் கேட்டான்...

“கொஞ்சம் வெல்லம்தான் குடு பாய்...”

(சந்திப்போம்)

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE