மண்... மனம்... மனிதர்கள்! - 10

By ஸ்ரீராம் சர்மா

கோடை விடுமுறை வந்தால் எல்லோரும் ஊரிலிருக்கும் பாட்டி வீட்டுக்குப் போய் கும்மாளம் போட்டு வருவதுதானே வழக்கம்.

எங்கள் வீட்டுக் கதை தலைகீழ். பாட்டியே  திருவல்லிக்கேணிக்கு வந்து விடுவாள்.

அம்மு பாட்டிக்கு சொந்த ஊர் ஸ்ரீரங்கம். காரணம் கிடைத்தால் போதும் திருவல்லிக்கேணி வந்திறங்கி விடுவாள். வந்ததும் வராததுமாக அதிகாலை நாலரை மணிக்கெல்லாம் குளித்து முடித்து பார்த்தசாரதி கோயில் கொட்டாரத்துக்கு ஓடி விடுவாள்.

விடிந்தும் விடியாத ஒளியில் கொட்டாரத்து ஜன்னலில் எட்டி எட்டிப் பார்த்து கால் வலி தெரியாமல் ரசித்துக் கொண்டிருப்பாள்.

அம்மு பாட்டி ஆனைப் பைத்தியம் என்பதைவிட ஆழ்வார் பைத்தியம் எனலாம்.

ஆழ்வார்!

திருவல்லிக்கேணி பார்த்தசாரதி சுவாமி திருக்கோயிலின் யானை.

அன்றைய திருவல்லிக்கேணிக் குழந்தைகளின் ஸ்டார் அட்ராக் ஷன்.

9 அடி உயரமும் பருத்த ஆகிருதியுமாக அசைந்தாடி வருவார்.

ஆம், வருவார் என்றுதான் சொல்ல வேண்டும். யானை வந்தது என்றோ ஆழ்வார் வந்தது என்றோ சொல்லிவிட்டால் போதும்; பாட்டிக்கு கோபம் பொத்துக் கொண்டுவிடும்.

“பெருமாளைச் சுமப்பவர்டா... மரியாதை வேண்டாம்..?” என்று முறத்தால் அடிப்பாள்.

ஆழ்வார் வீதி வழி வரும் மணியொலி கேட்டுவிட்டால் போதும்; வாரி சுருட்டிக்கொண்டு எழுந்து, ‘‘ஆழ்வார் அழைக்கிறார்... ஆழ்வார் அழைக்கிறார்...” என்றபடியே வேகவேகமாக ஓடி வீட்டு வாசலில் நின்றுகொள்வாள் அம்மு பாட்டி.

பாட்டியைக் கண்டதும் ஆழ்வார் சற்றே எட்ட நடை போட்டு தெருவைக் குறுக்கே கடந்து, வீட்டு வாசலுக்கு வருவார்.

அவருக்கென்றே இருக்கும் பெரிய முறத்தில் பச்சரிசியும் வெல்லமும் வாழைச் சீப்பும் சேர்த்து திண்ணையில் வைத்துக் கொடுப்பாள் பாட்டி.

ஆழ்வார் சென்றதும் திண்ணையில் சிந்தியிருப்பதை எடுத்து அட்சதைப் போல எங்கள் மீது “ரங்கா....ரங்கா..” என்றபடியே போட்டு விடுவாள்.

1960-ல் கோயிலுக்கு வந்தார் ஆழ்வார். அப்போது அவருக்கு ஒரு வயது. அவருக்கு மாவுத்தராக மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் இருந்து சங்கரம் பூசாரியைத் தருவித்தார்கள்.

ஆழ்வாரை தகதகவென வளர்த்தெடுத்தார் சங்கரம் பூசாரி.

ஸ்வாமி புறப்பாட்டின்போது சிறுவர்கள் எல்லோரும் ஓவென்று கோஷமிட்டபடி ஆழ்வாரோடுதான் இருப்போம். ஆழ்வாரும் அசைந்தாடி விளையாடியபடியே வீதி வலம் வருவார்.

கூடை நிறைய வாழைப்பழங்களோடு அம்மு பாட்டியும் எங்கள் கூடவே வருவாள். நாளடைவில் சிறுவர்கள் மத்தியில் ஆனைப் பாட்டி என்றே அழைக்கப்பட்டாள்.

ஸ்ரீ ரங்கத்தில் இருந்த இரண்டு வீடுகளும், கொஞ்சம் நிலமும் பாட்டி கன்ட்ரோலில்தான் என்பதால், அங்கிருந்து சேதி வந்தால் அரை மனதோடு ஊருக்குத் திரும்புவாள்.

அம்மு பாட்டி திருவல்லிக்கேணியில் இல்லாத போதெல்லாம் ஆழ்வார் கொஞ்சம் ரெஸ்ட்லெஸ்ஸாக இருப்பதாக எங்களுக்குப் படும்.

ட்ரங்காலில் பேசும்போது அதைச் சொல்லிவிட்டால் போதும், பாட்டி எமோஷனலாகி ஓடி வந்துவிடுவாள்!

ஸ்ரீரங்கத்திலும் கோயில் யானை உண்டுதான் என்றாலும், ஆழ்வாரின் மீது தனி பக்தி கொண்டு ஆவி கலந்து போயிருந்தாள் அம்மு பாட்டி.

நன்றாக வலம் வந்து கொண்டிருந்த ஆழ்வார் 1978- ம் ஆண்டு ஜனவரி மாத இறுதியில் திடீரென்று சுகவீனப்பட்டார். என்ன ஏது என்று சொல்லாமல் கொட்டாரத்திலேயே வைத்திருந்தார்கள்.

பொங்கல் விடுமுறைக்கு வந்திருந்த அம்மு பாட்டிக்கு சோறு தண்ணி இறங்கவில்லை. புலம்பிக்கொண்டே இருந்தாள்.

ஒரு ஏகாதசியன்று, மழை பெய்து சற்றே விட்டிருந்த நேரம். பார்த்தசாரதி கோயில் குளத்தில் அம்மு பாட்டியும் நானும் கால் நனைத்துக் கொண்டிருதோம்.

அந்த நேரம் பார்த்து கொட்டாரத்திலிருந்து ஆழ்வார் பிளிற, “ஆழ்வார் அழைக்கிறார் வாடா...” என்றபடி என்னை இழுத்துக்கொண்டு அவசரமாக குளப்படி ஏறும்போது பாட்டிக்கு லேசாக ஸ்லிப் ஆகிவிட, படியில் விழுந்து இடுப்பை உடைத்துக் கொண்டாள்.

இராயப்பேட்டை ஹாஸ்பிட்டலில் நலம் விசாரிக்க வருபவர்களிடம் எல்லாம் ஆழ்வாரைப் பற்றியே

விசாரித்துக்கொண்டிருந்தாள். அவர்களும் நல்ல வார்த்தை சொன்னபடியே இருந்தனர்.

ஆச்சரியமாக பாட்டிக்கு சீக்கிரம் எலும்பு கூடிக் கொண்டு விட்டது.

“வெரிகுட், சீக்கிரம் டிஸ்சார்ஜ் செய்து விடலாம்” என்று டாக்டர் சொல்லிவிட, பாட்டி பரபரக்க ஆரம்பித்தாள்.

இங்கே திடீரென்று ஆழ்வாருக்கு நிலைமை மோசமானது. ஜன்னி கண்டுவிட்டதாகச் சொல்லி மருத்துவர்களை அவசரமாக வரவழைத்தனர். உடல் நிலை மேலும் மேலும் பாதிக்கப்பட்டுக்கொண்டே வர...

அந்த ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு தாண்டி சுமார் ஒரு மணி போல திருவல்லிக்கேணியை அணி செய்து வந்த ஆழ்வார் உலக வாழ்வை நீத்துக்கொண்டார்.

சங்கரம் பூசாரி கொட்டாரமே அதிரும்படி மோதி மோதி கதறிக்கொண்டிருந்தார். சங்கரம் பூசாரியின் மகன் முருகன், ஆழ்வாரின் காலைப் பிடித்துக்கொண்டு கதறிய கதறல் சுங்குவார் தெருவைத் தாண்டி கேட்டது. பார்த்தசாரதி கோயில் கதவம் அடைக்கப்பட்டது. கோயில் வாசலுக்கு வந்து நின்ற சாரதி பட்டர் உரத்து விம்மி எழுந்த குரலில்…

“ஆழ்வார் திருநாடலங்கரிக்க போயிட்டேர்....” என்றபடி முகம் பொத்திக்கொண்டார்.

ஒட்டுமொத்த திருவல்லிக்கேணியே சோகத்தில் மூழ்கியது.

ஆழ்வாரை ஓர் ட்ரக்கில் ஏத்தி வைத்திருந்தார்கள்.

ஆழ்வார் படம் போட்ட அஞ்சலி வால் போஸ்டர்கள் ஒட்டப்பட்டன.

ஆழ்வாருக்கு மரியாதை செலுத்தும் முறையில்பள்ளிகள், அலுவலகங்கள், ஸ்டார், பாரகன் தியேட்டர் கள் எல்லாம் மூடப்பட்டன. நல்ல காரியங்கள் இரண்டு நாட்களுக்குத் தள்ளி வைக்கப்பட்டன.

அரசாங்கத்தின் முக்கியஸ்தர் ஒருவர் மறைந்து விட்டது போல் அலையலையாய் கூட்டம் கூடியது.

வரிசையில் நின்ற மக்கள் அவருக்கு மங்கல மாலை, ஊதுபத்தி, பன்னீர், பச்சரிசி, வெல்லம் எனச் சார்த்தியபடியே நகர்ந்துகொண்டிருந்தனர்.

அந்த இடமே கலந்து கட்டிய மணத்தால் நிரம்பியிருந்தது.

இந்தக் கூட்ட நெரிசலில் காரை வெளியே எடுப்பது ஆகாத வேலை என்பதால், பாட்டியை இரண்டு நாள் கழித்து டிஸ்சார்ஜ் செய்து கொள்ளலாம் என்று அப்பா முடிவெடுத்தார்.

ஆழ்வார் தவறிய நியூஸ் பாட்டிக்குத் தெரிந்து விடக்கூடாது என்று பயந்த அம்மா, வார்டு முழுக்க அலர்ட் செய்து விட்டாள்.

இரண்டாவது நாள் மாலை ஆழ்வார் கிளம்பப் போகும் நேரம் நெருங்க நெருங்க கூட்டம் அம்மியது.

ஈ.ஓ. பொன்னப்ப பிள்ளையின் முன்னிலையில் நான்கு புறமும் திரை சீலையால் மறைக்கப்பட்டு ஆழ்வாரின் தந்தங்கள் அறுத்து எடுக்கப்பட்டு கோயில் நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டது.

ஆழ்வாரைச் சுமந்திருந்த அந்த ட்ரக் திருவல்லிக் கேணியின் நான்கு மாட வீதிகளையும் சுற்றி வந்தது.

ட்ரக்குக்கு முன்னே புயலில் சிக்கிய வாழை மட்டையாய் வந்துகொண்டிருந்தார் சங்கரம் பூசாரி.

ஆழ்வார் உலவிய வீதிகளை ஓங்கி ஓங்கி அறைந்தபடி புரண்டு துடிக்கும் சங்கரம் பூசாரியைக் காணச் சகிக்காமல் கூட்டம் கதறியது.

மாடிகளில் இருந்து கூடை கூடையாய் பூக்கள் இறைக்கப்பட மாலை சுமார் ஐந்து மணி போல என்.கே.டி. கலா மண்டபத்துக்கு வந்தடைந்தார் ஆழ்வார்.

25 அடி ஆழ குழியில் 10 மூட்டை வாசனைத் திரவியங்களும் 50 மூட்டை உப்பும் கொட்டப்பட...மந்திரங்கள் ஓங்க...கிரேனில் வைத்து ஆழ்வாரைத் தூக்கி மெல்ல குழிக்குள் இறக்க... சங்கரம் பூசாரி மூர்ச்சையானார்.

அகண்ட குழியில் மண் சரிக்க சரிக்க... திருவல்லிக்

கேணி மவுனமாய் வீடு திரும்பிக் கொண்டிருந்தது.

இப்போது, எங்களுக்கு அம்மு பாட்டியை எப்படிச் சமாளிப்பது என்ற கவலை தொற்றிக்கொண்டது.

ஆஸ்பத்திரியில் இருந்து அழைத்து வந்தால் அவள் நேராக கொட்டாரத்தில் போயல்லவா இறங்குவாள். மறைத்து  நாடகமாடிய  எங்களை ச் சுட்டெரித்து  விடுவாளே?

குழம்பிக்கொண்டிருந்தோம்.

அந்த நேரம் பார்த்து ஸ்ரீரங்கத்து நிலப் பிரச்சினை ஒன்றில் பாட்டியின் கையெழுத்து அவசியம் என்ற செய்திவர, அதையே சாக்காக வைத்து அம்மாவும் மாமாவும் சேர்ந்து அநாவசியப் பதற்றம் காட்டி...

பாட்டியை அவசர டிஸ்சார்ஜ் செய்த கையோடு நேராக ரயில்வே ஸ்டேஷனுக்குக் கூட்டிப்போய் அப்படியே ஸ்ரீரங்கத்துக்குக் கடத்திப் போய்விட்டார்கள்.

அம்மு பாட்டியிடம் இருந்து ஆழ்வார் விஷயம் முற்றிலும் மறைக்கப்பட்டது.

சங்கரம் பூசாரி பைத்தியக்காரர் போல திருவல்லிக்

கேணி வீதிகளில் சுற்றி வந்துகொண்டிருந்தார். கோயிலுக்காக மோகன் என்ற பெயரோடு இன்னொரு யானை வரவழைக்கப்பட்டது.

“ஆழ்வாரைத் தொட்ட கையால்..?”

தழுதழுத்து மறுத்த சங்கரம் பூசாரி தன் பிள்ளை முருகனுக்குக் கோயிலில் வாட்ச்மேன் வேலைக்கு ஏற்பாடு செய்துவிட்டு ஊர் போய்ச் சேர்ந்தார்.

திருவல்லிக்கேணி மெல்ல சகஜ நிலைக்குத் திரும்பி சத்தம் போட்டுக் கொண்டிருந்தது.

பாட்டியின் கால் வீக்கம் கொடுத்து விட்டதாகவும் வீட்டோடு முடங்கி விட்டாள் என்றும் தகவல் வந்தது.

அவ்வப்போது அம்மாவுக்கு ட்ரங்கால் செய்யும் பாட்டி போனை என்னிடம் கொடுக்கச் சொல்வாள். நானும், பாட்டியைத் தேற்ற நன்றாக ரீல் விடுவேன்.

வழக்கம் போல கொட்டாரத்தில் ஆழ்வார் லூட்டி அடிப்பதாக புரூடா விடுவேன்.

“தெரியுமா பாட்டி, உன் பேரைச் சொல்லி அஞ்சு வாழைப்பழம் கொடுத்தேன். ஆசை ஆசையாய் வாங்கி விழுங்கினார் ஆழ்வார்...” என்பேன்!

“நீ என் தங்கம்டா...” என்பாள்.

பாட்டியை  ஏமாற்றுகிறோம்  என்று  மனசாட்சி உறுத்தி

னாலும், உண்மையைச் சொல்ல தைரியம் வரவில்லை.

கொஞ்ச நாளில் பாட்டிக்கு உடல் நிலை மோசமானது. ரங்கம் கிளம்பினோம். ரயில்வே ஸ்டேஷனில் இறங்கி பாட்டியின் வீடு நோக்கிச் செல்லும்போதே அம்மா தேம்ப ஆரம்பித்து விட்டாள் !

வீட்டுக்குள் நுழைந்ததும் பாட்டியின் வாசம் அடிக்கத் துவங்கியது.

உள் அறையில் முக்காலடி கட்டிலில் ப்ரக்ஞையற்று படுத்திருந்தாள் பாட்டி. மூச்சுவிட முடியாமல் ரொம்பவும் சிரமப்பட்டுக் கொண்டிருந்தாள்.

தலை பின்மடங்கி முன் வருவதும் மார்பு அதீதமாக ஏறி இறங்குவதுமாக அவள் மூச்சுவிட்டுக்கொண்டிருந்த கோலம் ஏதோ யானை மீது போவது போலவே இருந்தது.

பாட்டி கடைசி கட்டத்தில் இருப்பது தெரிந்துபோக அந்த அறையை விட்டு அகன்று வந்த அம்மா சுவற்றில் சாய்ந்தபடி வாயைப் பொத்திக்கொண்டு அழுது கொண்டிருந்தாள்.

உடை மாற்றலாம் என்று உள்ளே சென்றவன் கொடியில் இருந்த வேட்டியை உருவி எடுத்தேன். சிமென்ட் அலமாரியில் இருந்த பாட்டியின் பச்சைக்கலர் ட்ரங்குப்பெட்டி கண்ணில் பட்டது.

திருவல்லிக்கேணிக்கு வரும்போதெல்லாம் அந்த ட்ரங்குப் பெட்டியோடுதான் வருவாள். ஒவ்வொரு முறையும் எனக்காக எதையாவது வாங்கி வருவாள்.

வாங்கியதை நாலைந்து புடவைகளுக்கு இடையில் மறைத்து வைத்திருப்பாள். “டடாய்ங்...” என்று எடுத்துக் கொடுத்து முகம் பார்த்து சிரிப்பாள்.

அந்த ட்ரங்குப் பெட்டியை மெல்ல திறந்தேன்.

பாட்டியின் புடவைகள் சீராக அடுக்கப்பட்டு அதன் மேல் அந்த ஆண்டின் பஞ்சாங்கம் வைக்கப்பட்டு இருந்தது.

புடவைகளை ஒவ்வொன்றாய் விலக்கிப் பார்த்துக் கொண்டே வந்தவன், அதிர்ந்து நின்றேன்.

புடவைகளுக்கு கீழே...

ஆழ்வாரின் புகைப்படம் ஃப்ரேம் போடப்பட்டு, நான்கு பாதங்களிலும் துதிக்கையிலும் குங்குமம் வைக்கப்பட்டு லேசாக மங்கிக் கலைந்திருந்தது.

பாட்டியின் கண்ணீர் அதைக் கலைத்திருக்கக் கூடும் !

பாட்டியின் அறையிலிருந்து “அம்மா...” என்ற அலறல் கேட்டது.

ஓடோடிச் சென்று பார்த்தால், அங்கே அம்மு பாட்டி இல்லை.

ஆழ்வார் அழைத்திருப்பார்!

(சந்திப்போம்)

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE