பேசும் படம் - 19: மலை உச்சியில் பறந்த வெற்றிக்கொடி

By பி.எம்.சுதிர்

இரண்டாம் உலகப் போரின்போது இவோ ஜிமாவில் (Iwo Jima) உள்ள சுரிபாச்சி மலையின் உச்சியில் அமெரிக்க கடற்படை வீரர்கள் அந்நாட்டின் கொடியை ஏற்றும்போது எடுக்கப்பட்ட படம் இது. அமெரிக்க புகைப்படக்காரரான ஜோசப் ரோசென்தால் 1945-ம் ஆண்டு பிப்ரவரி 23-ம் தேதி இப்படத்தை எடுத்தார்.

 ஜப்பானின் தலைநகரான டோக்கியோவுக்குத் தென்கிழக்கே 1,046 கிலோமீட்டர் தூரத்தில் சிறு புள்ளிபோல் அமைந்துள்ள தீவுதான் இவோ ஜிமா. இதன் மொத்தப் பரப்பளவே 21 சதுர கிலோமீட்டர்தான். இரண்டாம் உலகப் போரின்போது ஜப்பானைத் தாக்க, அமெரிக்காவின் விமானப்படைகள் நீண்டதூரம் பறந்து வரவேண்டி இருந்தது. இந்நிலையில் ஜப்பானுக்கு அருகில் உள்ள இந்தத் தீவைக் கைப்பற்றினால், அங்கு தங்கள் விமானப் படைத்தளத்தை அமைத்து ஜப்பான் மீது சரமாரியாகத் தாக்குதல் நடத்தலாம் என்று அமெரிக்க படைகள் திட்டமிட்டன.

இதன்படி, எரிமலைகளைக் கொண்ட இந்தத் தீவை 1945-ம் ஆண்டு பிப்ரவரி 19-ம் தேதி அமெரிக்க கடற்படையின் 2 பிரிவுகளைச் சேர்ந்த 30 ஆயிரம் வீரர்கள் முற்றுகையிட்டனர். அமெரிக்கர்கள் படையெடுத்து வருவார்கள் என்று ஏற்கெனவே எதிர்பார்த்திருந்ததால் ஜப்பானும் ஆயிரக்கணக்கான வீரர்களை இந்தத் தீவில் குவித்திருந்தது. இதைத்தொடர்ந்து இரு படைகளுக்கும் இடையே கடுமையான யுத்தம் தொடங்கியது.

தீவுப் பகுதியில் பல இடங்களில் சுரங்கங்களையும், பதுங்கு குழிகளையும் ஜப்பானிய படைகள் தோண்டி வைத்திருந்ததால், அமெரிக்க படைகள் கடுமையாகப் போராடியே முன்னேற வேண்டி இருந்தது. முதல் நாளிலேயே நூற்றுக்கணக்கான அமெரிக்க வீரர்கள் கொல்லப்பட்டனர்.

4 நாட்கள் நடந்த கடும் யுத்தத்துக்குப் பிறகு அத்தீவில் அமைந்துள்ள சுரிபாச்சி மலையை (Mount Suribachi) அமெரிக்க படைகள் கைப்பற்றின. இதனால் உற்சாகமடைந்த அமெரிக்க கடற்படை வீரர்கள், தங்கள் நாட்டுக் கொடியை மலையின் உச்சியில் பறக்கவிடத் திட்டமிட்டனர். முதலில் ஒரு சிறிய கொடி அங்கு பறக்கவிடப்பட்டது. அதன்பிறகு அங்கு வந்த அமெரிக்க ராணுவ அதிகாரி, போரில் ஈடுபட்டுள்ள அமெரிக்க வீரர்களின் தன்னம்பிக்கையை அதிகரிக்கவும், ஜப்பானிய வீரர்களை மனத்தளர்ச்சியடைய வைக்கவும் ஒரு பெரிய கொடியைப் பறக்க விடுமாறு உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து 6 வீரர்கள் கூடி பிரம்மாண்டமான அமெரிக்க கொடியைப் பறக்கவிட்டனர். இந்தக் காட்சியை அமெரிக்க புகைப்பட நிபுணரான ரோசென்தால் படம் பிடித்தார்.

இரண்டாம் உலகப்போரின் அடையாளமாக இன்றளவும் கருதப்படும் இப்படம் உலகப் புகழ்பெற்றது. பல நாடுகளில் வெளியான பத்திரிகைகளின் முதல் பக்கத்தை இப்படம் அலங்கரித்தது.  ராணுவ வீரர்களுக்கு நிதி திரட்டுவதற்காக இப்படத்தை போஸ்டராக அடித்தும் பயன்படுத்தினார்கள். பின்னர் இந்தப் புகைப்படத்தை அடிப்படையாக வைத்து வாஷிங்டனில் சிலை ஒன்றும் நிறுவப்பட்டது. எல்லாவற்றுக்கும் மேலாக இப்படத்தை எடுத்ததற்காக ஜோசப் ரொசென்தாலுக்கு புலிட்ஸர் விருது வழங்கப்பட்டது.

சுரிபாச்சி மலையின் உச்சியில் நான்காம் நாளிலேயே அமெரிக்க படைகள் கொடியைப் பறக்கவிட்ட போதிலும் இவோ ஜிமா தீவில் போர் முடிவுக்கு வந்து, அமெரிக்கா அதைக் கைப்பற்ற 36 நாட்கள் ஆகின. இந்தப் போரில் பங்கேற்ற 18,000 ஜப்பானிய வீரர்களில் 216 பேர் மட்டுமே உயிர் பிழைத்தனர். அதே நேரத்தில் அமெரிக்க தரப்பில் 6,800 வீரர்கள் கொல்லப்பட்டதாகவும், ஆயிரக்கணக்கானவர்கள் படுகாயம் அடைந்ததாகவும் கூறப்படுகிறது. சுரிபாச்சி மலை உச்சியில் கொடியைப் பறக்கவிட்ட 6 வீரர்களில் 3 பேர் இந்தப் போரில் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது. மற்ற மூவரும், போர் முடிந்த பிறகு அமெரிக்காவில் பிரபலங்களாகக் கருதப்பட்டனர்.

ஜோசப் ரோசென்தால்  (Joseph Rosenthal)

அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் 1911-ம் ஆண்டு அக்டோபர் 9-ம் தேதி ஜோசப் ரோசென்தால் பிறந்தார். இளம் வயதிலேயே புகைப்படத் துறையில் ஆர்வம் கொண்ட இவர், 1932-ம் ஆண்டில் ‘தி சான் பிரன்ஸிஸ்கோ நியூஸ்’ நாளிதழில் புகைப்படக் கலைஞராகவும், நிருபராகவும் பணியில் சேர்ந்தார். ராணுவத்தில் புகைப்படக்காரராக விரும்பினாலும், இவரது பார்வையில் குறைபாடு இருப்பதாகக் கூறி, இவருக்கு அந்த வாய்ப்பு மறுக்கப்பட்டது. பின்னர் அசோசியேட்டட் பிரஸ் நிறுவனத்தில் சேர்ந்த இவர், இரண்டாம் உலகப் போரின்போது ஏராளமான படங்களை எடுத்துள்ளார். 1945-ம் ஆண்டின் புலிட்ஸர் விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளை இவர் வென்றுள்ளார். 1981-ம் ஆண்டில் பணியில் இருந்து ஓய்வுபெற்ற இவர், 2006-ம் ஆண்டில்  காலமானார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE