பாப்லோ தி பாஸ் - 21: நீதியின் மீது தாக்குதல்..!

By ந.வினோத் குமார்

நவம்பர் 6, 1985..!

கார்டாஜெனா ஹில்டன் ஹோட்டலின் லாபியில் அமர்ந்து, தன் கேமராவைச் சரி பார்த்துக்கொண்டிருந்தாள் விர்ஜீனியா. கொலம்பியாவின் அழகிப் போட்டி அன்று நடைபெறவிருந்தது. அதை செய்தியாக்க வந்திருந்தாள் அவள்.

லாபி முழுவதும் மெல்லிசை பரவியிருந்தது. நளினமான பெண்கள் சிரிப்பதற்கென்றே பிறந்தவர்கள் போல யாரைப் பார்த்தாலும் புன்னகையை இலவசமாகத் தந்து கொண்டிருந்தார்கள். விஸ்கி பாதி நிரம்பிய கண்ணாடிக் கோப்பைகள் ‘டோஸ்ட்’ செய்துகொள்ளும் சத்தம் நிமிடத்துக்கொருமுறை ஒலித்தது.

வியாபாரிகள்… சினிமாக்காரர்கள்… அரசியல்வாதிகள்… அரசுடன் நட்பாக இருக்கும் கொஞ்சமே கொஞ்சம் கடத்தல்காரர்கள்… என அந்த இடம் முழுவதும் திருவிழாக் கோலம் பூண்டிருந்தது.

மணி சரியாகக் காலை 11:40. விர்ஜீனியாவின் தோழி ஒருத்தி அரக்கப்பரக்க ஓடி வந்தாள்.

“ஹேய்… பார்த்து, மேல கீழ விழுந்து வைக்கப் போற…”

“விர்ஜீனியா… விர்… ஜீஜீன்ன்னியா…”

“ஹேய்… ஏன் இப்படி பதற்றமா இருக்கே… என்ன விஷயம்..?”

“போச்சு… எல்லாம் போச்சு…”

“ஹேய்… என்னன்னு சொல்லேண்டி…”

“பேலஸ் ஆஃப் ஜஸ்டிஸ்…”

“உச்ச நீதிமன்றம்… ஆமா… அதுக்கென்ன இப்போ..?”

“அதை… அதை… யாரோ சில தீவிரவாதிங்க பிடிச்சு வெச்சிருக்காங்களாம்…”

அவள் சொல்லி முடிக்கும் முன், ஹோட்டலின் ரிசப்ஷனுக்கு வந்தவள் அங்கிருந்த டிவி-க்கள், ரேடியோக்கள் எல்லாவற்றையும் திருப்பினாள். எல்லா ஊடகங்களும் கிளிப்பிள்ளை போல சொன்னதையே சொல்லி வைத்தன:

“பேலஸ் ஆஃப் ஜஸ்டிஸ் தீவிரவாதிகளால் கைப்பற்றப்பட்டது..!”

அந்தக் கட்டிடத்தின் முன்பு சீருடை அணிந்த உடல்கள் சிதறிக் கிடப்பதைப் பார்த்த விர்ஜீனியாவுக்கு, அவளின் காலடியில் உலகம் நழுவத் தொடங்கியிருந்தது.

நார்கோக்களை அமெரிக்காவிடம் ஒப்படைப்பது தொடர்பான கொலம்பியாவின் முயற்சிகளுக்கு முதல் அடியாக விழுந்தது, ‘பேலஸ் ஆஃப் ஜஸ்டிஸ்’ எனும் உச்ச நீதிமன்றத்தின் மீதான தாக்குதல்.

தாக்குதல் நடைபெற்ற அந்த நாளில்தான் பாப்லோ உள்ளிட்ட போதைப் பொருள் கடத்தல்காரர்களை அமெரிக்காவுக்கு நாடு கடத்துவது தொடர்பான உடன்படிக்கை குறித்த வழக்கு ஒன்று விசாரிக்கப்படுவதாக இருந்தது.

முதல் ஏழு பேர் சாதாரண குடிமக்கள்போல உச்ச நீதிமன்றத்துக்குள் நுழைய, இரண்டு சிறிய லாரிகளில் சுமார் ஐம்பதுக்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் நீதிமன்றத்தின் பின் வாசல் வழியாக வந்திறங்கினர். அங்கிருந்த சுமார் முந்நூறுக்கும் மேற்பட்டவர்களைப் பணயக் கைதிகளாகப் பிடித்து வைத்தனர். அவர்களில் நீதிபதிகள், நீதிமன்ற ஊழியர்கள் மற்றும் பார்வையாளர்கள் எனப் பலரும் இருந்தனர். உச்ச நீதிமன்றத்தைத் தாங்கள் சிறைப் பிடித்து வைத்திருப்பதை நாட்டுக்கு உணர்த்த விரும்பினார்கள் அந்தத் தீவிரவாதிகள்.

அப்படியே அவர்கள் செய்தார்கள். கூடவே, கொலம்பியர்களை அமெரிக்காவுக்கு நாடு கடத்துவது குறித்து கொலம்பிய அரசின் கையலாகாத்தனத்தை ஏசவும் செய்தனர். தங்களின் இந்தச் சிறைப் பிடிப்பும், அதற்கான காரணமும் பத்திரிகைகளில் வெளியாகவும் அரசைக் கட்டாயப்படுத்தினர். ‘நாடு கடத்தப்படும் ஒவ்வொரு கொலம்பியருக்கும் இணையாக அமெரிக்கக் குடிமகன் ஒருவர் கொல்லப்படுவார்’ என்று அமெரிக்காவுக்கும் கிலி ஏற்படுத்தினர்.

இந்த இக்கட்டான சூழ்நிலையில், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள், செஞ்சிலுவைச் சங்கம் உள்ளிட்ட சர்வதேச அமைப்புகள் எனப் பலரும் அந்தத் தீவிரவாதிகளுடன் சமரசம் பேச முயற்சிகள் மேற்கொண்டனர். ஆனால், எதுவும் பலனளிக்கவில்லை. கொலம்பியாவின் அதிபரோ இந்த விஷயத்தில் தேவைக்கு அதிகமாக நேரத்தை எடுத்துக்கொண்டு தன் அமைச்சர்களுடன் விவாதித்து வந்தார்.

அரசின் இந்தத் தாமதத்தைப் பயன்படுத்திக்கொண்டனர் தீவிரவாதிகள். பாப்லோ உள்ளிட்ட கடத்தல்காரர்களின் குற்ற வழக்குகள் தொடர்பான கோப்புகள் எல்லாம் அந்த நீதிமன்றத்தில்தான் இருந்தன. ஒன்றிரண்டு அல்ல... சுமார் 1,800 பெட்டிகளில் அந்த வழக்குகள் தொடர்பான விவரங்கள் இருந்தன. அவை இருப்பதால்தானே பாப்லோவை நாடு கடத்த முயல் கிறார்கள்..? அவற்றை இல்லாமல் செய்துவிட்டால்..? அந்தப் பெட்டிகள் அனைத்தும் கொளுத்தப்பட்டன. அப்போது பரவிய தீயில், நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் வெந்து செத்தார்கள்.

இதனால் ஆத்திரமடைந்த அதிபர் பென்டாகியூர், ராணுவத்தை முடுக்கிவிட்டார். தீவிரவாதிகள், ராணுவம் என இரண்டு பக்கமும் சேதாரங்கள் அதிகமிருந்தன. எனினும் இறுதியில், ராணுவம் வென்றதாக அறிவிக்கப்பட்டது. 11 நீதிபதிகள், 43 பொதுமக்கள், 33 தீவிரவாதிகள் மற்றும் 11 ராணுவ வீரர்கள் இந்தச் சம்பவத்தில் கொல்லப்பட்டதாக அரசு அறிவித்தது. இது அதிகாரபூர்வமான அறிவிப்பாக இருந்தாலும், எண்ணாமல் விடப்பட்ட சடலங்கள் நிறைய. அவற்றையும் சேர்த்தால் பலி எண்ணிக்கை இன்னும் அதிகமாக இருக்கும்.

’தி எக்ஸ்ட்ராடிடபிள்ஸ்’ அமைப்பின் வலிமையை அரசு இப்போது உணரத் தொடங்கியிருந்தது. ஆனாலும், அதன் மீது மேலும் பல அடிகள் விழுவது தவிர்க்க முடியாததாக இருந்தது.

(திகில் நீளும்)

நட்புக்குப் பரிசாக வாள்..!



இந்தத் தாக்குதலை நடத்தச் சொன்னது பாப்லோ என்பது எல்லோருக்கும் தெரியும். ஆனால், அதை முன்னின்று நடத்தியது யார் தெரியுமா..? ‘எம் – 19’ எனும் கெரில்லா அமைப்புதான். ஆம்… நீங்கள் ஊகிப்பது சரிதான். பாப்லோவின் கூட்டாளிகளுள் ஒருவனான ஜார்ஜ் ஒச்சாவோவின் தங்கை மார்த்தா ஒச்சாவோவைக் கடத்திவைத்துப் பணம் பறித்தார்களே… அதே எம் – 19 அமைப்புதான்..!

’நட்புக்கு ராகிங்கூட பாதை வகுக்கும்’ என்று பாடல் வரி இருப்பது போல, அந்தக் கடத்தல் எபிசோடே, நார்கோக்களுக்கும் கெரில்லாக்களுக்கும் இடையில் நட்பு ஏற்படவும் காரணமாக இருந்தது. அந்த நட்பின் நினைவாக கெரில்லா அமைப்பின் தலைவன் மரினோ ஓஸ்பினா, தன்னிடம் இருந்த வாள் ஒன்றை பாப்லோவுக்குப் பரிசளித்தான். அந்த வாள் பொலிவிய வீரன் சிமோன் பொலிவார் பயன்படுத்தியது. அது பிற்காலத்தில் கொலம்பிய அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டிருந்தது. அதை 1974-ல் அப்போதைய கெரில்லா தலைவன் ஜெயிம் பேட்மன் கொள்ளையடித்தான். கெரில்லாக்களுக்கும் கொலம்பிய அரசுக்கும் இடையில் எப்போது சமரசம் ஏற்படுகிறதோ, அப்போது அந்த வாள் அரசாங்கத்திடம் ஒப்படைக்கப்படும் என்று அறிவித்தான் பேட்மன். அந்த வாள் வழிவழியாக வந்த கெரில்லா தலைவர்களுக்குக் கைமாற்றப்பட்டு, கடைசியில் மரினோவிடம் வந்து சேர்ந்தது. பிறகு பாப்லோவின் கையில்!



சில காலம் கழித்து, வேறொரு சந்தர்ப்பத்தில் அந்த வாளை கெரில்லா அமைப்பிடமே திருப்பித் தத்துவிட்டான் பாப்லோ. அது 1991-ம் ஆண்டு கொலம்பிய அரசிடம் ஒப்படைக்கப்பட்ட அந்த வாளைத்தான் படத்தில் காண்கிறீர்கள்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE