பேசும் படம் - 17: கடைசி நிமிடங்கள்...

By பி.எம்.சுதிர்

இந்திய கிரிக்கெட் ரசிகர்களின் கடவுள் சச்சின் டெண்டுல்கர். 1989-ம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் தடம் பதித்த சச்சின், இந்தியாவுக்காக அடித்த ரன்கள் கணக்கில் அடங்காதவை. 200 டெஸ்ட் போட்டிகளில் 15,921 ரன்கள், 463 ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் 18,426 ரன்கள் என அடித்துக் குவித்த சச்சின், தனது துடிப்பான ஆட்டத்தால் இந்திய கிரிக்கெட் ரசிகர்களின் மனங்களைக் கொள்ளைகொண்டார். பல சாதனைகளை முறியடித்தார். எந்த விஷயத்துக்கும் ஒரு முடிவு உண்டல்லவா? சச்சினின் கிரிக்கெட் பயணத்துக்கும் அந்த முடிவு வந்தது. கடந்த 2013-ம் ஆண்டு நவம்பர் மாதத்தில் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார் சச்சின்.

இந்திய கிரிக்கெட் ரசிகர்களைக் கண்ணீரில் ஆழ்த்திய அந்த நாளின் மறக்க முடியாத சாட்சியாக இப்படம் விளங்குகிறது. கடைசி இன்னிங்ஸை விளையாடுவதற்காக மும்பை வாங்கடே மைதானத்தின் டிரெஸ்ஸிங் ரூமில் இருந்து வெளிவரும் சச்சினின் இந்தப் படத்தை ‘மிட் டே’ பத்திரிகையின் புகைப்படக்காரரான அதுல் காம்ப்ளே (Atul Kamble) எடுத்துள்ளார். 2013-ம்ஆண்டில் சிறந்த கிரிக்கெட் படத்துக்கான விஸ்டன் விருது (2013 Wisden – MCC Cricket Photograph of the Year) இப்படத்துக்கு வழங்கப்பட்டது. போட்டிக்கு வந்த 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட படங்களில் இருந்து இப்படம் விருதுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படத்தை எடுத்ததைப் பற்றி பெருமையுடன் கூறும் அதுல் காம்ப்ளே, “சச்சினின் கடைசிப் போட்டி என்பதால் வாங்கடே மைதானமே அன்று கண்ணீர் வடித்தது. சச்சினின் ஆக்ரோஷமான பேட்டிங்கை கடைசியாக ஒரு முறை காணும் ஆசையுடன் மைதானத்தில் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் குழுமியிருந்தனர். அவர்களைப் போலவே நானும் சச்சின் விளையாடுவதை  படம்பிடிக்கும் ஆசையுடன் அன்று மைதானத்துக்குச் சென்றேன்.

நான் 1996-ம் ஆண்டுமுதல் வாங்கடே மைதானத்தில் கிரிக்கெட் போட்டிகளைப் படம்பிடித்து வருகிறேன். அதனால் எந்த இடத்தில் நின்றால் துல்லியமாக படமெடுக்க முடியும் என்பது எனக்கு அத்துபடி. போட்டி தொடங்குவதற்கு அரை மணி நேரம் முன்பே மைதானத்துக்குள் சென்றதால், சரியான இடத்தைத் தேர்ந்தெடுத்து நிற்க முடிந்தது. அன்றைய தினம் என்னைப் போலவே சுமார் 60 போட்டோகிராபர்கள் மைதானத்தில் இருந்தனர்.

சச்சின் பேட்டிங் செய்யும் தருணம் வந்ததும், ரசிகர்களின் வாழ்த்தொலியால் மைதானம் குலுங்கியது. சச்சின் டிரெஸ்ஸிங் ரூமை விட்டு வெளியில் வந்ததும், தங்களை ரட்சிக்க வந்த கடவுளைப் பார்த்ததுபோல் ரசிகர்கள் கைகளை உயர்த்தி அவரை வரவேற்றனர். ஆனால், சச்சின் யாரையும் கவனிக்கவில்லை. கிரிக்கெட்டை விட்டு ஓய்வுபெறும் வருத்தம் அவர் மனதில் இருந்ததாலோ என்னவோ, சற்றே இறுக்கத்துடன் அவர் பிட்ச்சை நோக்கி நடந்து வந்தார்.

டிரெஸ்ஸிங் ரூமில் இருந்து பிட்சுக்கு சச்சின் நடந்து வருவதற்குள் நான் அவரை 20 படங்கள் எடுத்தேன். அதில் இந்தப் படமும் ஒன்று. ஆனால், நான் இதை பிரசுரத்துக்குக் கொடுக்கவில்லை. மாறாக சச்சின் ரசிகர்களை நோக்கி பேட்டை உயர்த்துவதைப் போன்ற படத்தைத்தான் பிரசுரத்துக்குக் கொடுத்தேன்.

விஸ்டென் நிறுவனம் நடத்திய புகைப்படப் போட்டியைப் பற்றி நண்பர் ஒருவர் என்னிடம் கூறினார். இதைத்தொடர்ந்து, சச்சின் பெவிலியனில் இருந்து வெளியில் வரும் இந்தப் படத்தையும், அவர் பிட்சில் மண்டியிட்டுக் கும்பிடும் மற்றொரு படத்தையும் போட்டிக்கு அனுப்பினேன். எனது இந்தப் படம் விருதை பெற்றது. விருதைவிட இப்போட்டியின் நடுவரான பாட்ரிக் ஈகர், ‘இப்படம் ஒரு ஓவியத்தைப் போல் உள்ளது’ என்று வாழ்த்தியிருப்பதை எனக்குக் கிடைத்த பெருமையாகக் கருதுகிறேன்” என்கிறார்.

அதுல் காம்ப்ளே

18 வயதில் ஒரு புகைப்படக்காரராக பத்திரிகை உலகில் நுழைந்த அதுல் காம்ப்ளே, இத்துறையில் 25 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வருகிறார். 2000-ம்

ஆண்டு முதல், புகழ்பெற்ற ‘மிட் டே’ நாளிதழின் மூத்த புகைப்படக்காரராக இவர் இருந்து வருகிறார். விளையாட்டுத் தொடர்பான புகைப்படங்கள் மட்டுமின்றி, 2012-ம் ஆண்டில் மும்பை ஆசாத் மைதானத்தில் நடந்த வன்முறை உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகளையும் இவர் படம் பிடித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE