இணையச் சிறையின் பணயக் கைதிகள் 6: ‘ஃபோமோ’ எனும் டிஜிட்டல் பதற்றம்

By டாக்டர் மோகன வெங்கடாசலபதி

மனிதன் ஒரு சமூக விலங்கு என்பார்கள். நாம் எல்லோருமே ஏதோ ஒரு வகையில் இணைக்கப்பட்டுதான் இருக்கிறோம். வண்டி ஓடத்தில் ஏறும். ஓடமும் ஒரு நாள் வண்டியில் ஏறும். அந்தத் தொடர்புகள் மாத்திரமல்ல... மற்றவர்கள் தன்னை எங்கு வைத்திருக்கிறார்கள், சமூகத்தில் நமக்கான இடமும் மரியாதையும் எந்த அளவில் இருக்கிறது என்பதையெல்லாம் தெரிந்துகொள்ளும் ஆர்வம் இல்லாத மனிதர்கள் மிகவும் குறைவு. அப்படியான மனநிலை இயல்பிலேயே வரப்பெற்ற நம்மிடம்தான் சமூக வலைதளங்கள் மாட்டிக்கொண்டு… மன்னிக்கவும், நாம்தான் அவற்றிடம் மாட்டிக்கொண்டு படாதபாடுபடுகிறோம்.

ஃபோமோ என்பதும் அப்படித்தான் (FOMO - Fear Of Missing Out).  நம்மை விட்டுவிடுவார்களோ, நாமும் மிஸ் பண்ணிவிடுவோமோ என்ற அதீத மனப்பதற்றமே இது. அதிலும் இது சமூகம் சார்ந்து அதாவது நம் மீதான சமூக மதிப்பீடுகள் குறித்த பதற்றமே முக்கிய அம்சமாக இருப்பதால், இதை ஒருவகையில் சமூகப் பதற்றம் (social anxiety) என்றே சொல்லலாம்.

பல்லாண்டுகளாக இருக்கும் ஒன்றுதான் இந்த ஃபோமோ. ஒரு பொருளையோ நிகழ்வையோ இழந்துவிடக் கூடாது என்று இயல்பாகவே நமக்குள் எழும் உஷார்தனத்தின் (loss aversion) வெளிப்பாடே இந்த ஃபோமோ. மற்றவர்கள் எல்லாம் நன்றாக இருக்கிறார்கள்; நாம் அப்படி இல்லையே என்ற சமூக ஒப்பீட்டின் விளைவே இந்த ஃபோமோ.

ஏதாவது நிகழ்ச்சிகளுக்குத் தன்னை அழைக்கவில்லை. எல்லோரும் அங்கிருக்கிறார்கள். நாம் அங்கு இல்லை என்று பதற்றப்படுவது ஒரு விதம். போனை மறந்துவிட்டு வந்துவிட்டோமே; யார் என்னென்ன செய்கிறார்கள் என்று தெரியவில்லையே, அச்சச்சோ எனக்குத் தெரியாமல் பெரிய விஷயங்கள் ஏதும் நடந்துவிட்டால் என்னால் தாங்க முடியாதே... என்பன போன்ற பதற்றங்கள்தான் அதிகம்.

மொபைல் போனுக்கு முந்தைய காலத்திலேயே கூட இயல்பான விஷயங்களுக்கே நமக்கு இந்த ஃபோமோ இருந்துகொண்டுதான் வருகிறது. தெரிந்த நண்பன் வீட்டு விஷேசத்துக்கு நமக்கு அழைப்பில்லை. அங்கே சென்று வந்த இன்னொரு நண்பர் புகைப்பட ஆல்பத்தைப் பல நாட்களுக்குப் பின்பு காண்பிப்பார். ‘அட என்னைக் கூப்பிடவில்லையே அவன்’ என்று கொஞ்ச நேரம் புலம்புவோம்; வருத்தப்படுவோம். அவனை நிந்திப்போம். பிறகு மறந்துவிடுவோம். காரணம், கால இடைவெளி. நிகழ்ச்சி முடிந்து மூன்று வாரமாகிவிட்டது. இனி எதுவும் செய்ய முடியாது. நாமும் மூன்று நாட்களில் மறந்துவிடுவோம்.

ஆனால், இப்போது அப்படியில்லை. ஒரு பட்டனை‘க்ளிக்’ செய்தால் ‘மிஸ்டர்எக்ஸ்’ஸின் பக்கத்துக்குள் நுழைந்து மூன்று நிமிடத்தில் அவரது ஜாதகத்தை முகர்ந்து அதிர்ந்துபோய் ஆச்சரியப்பட்டு வெளியேவந்துவிடுவோம். அதைவிட  தற்போது  தான் கொண்டாடிக்கொண்டிருக்கும் பார்ட்டியின் ‘லைவ்அப்டேட்’களை ஃபேஸ்புக்கிலும் இன்ஸ்டாகிராமிலும் நண்பர் போடப் போட அதை நாம் பார்க்கப் பார்க்க வெறி ஏறிக்கொண்டே போகும். பார்த்தால் ‘டென்ஷன்’ ஆகும் என்று தெரிந்தும் பார்க்காமல் இருக்கிறோமா அல்லது அப்படித்தான் இருக்க முடிகிறதா? ஊஹூம். என்ன பார்ட்டி, எந்த ஹோட்டல், என்னென்ன பரிமாறப்படுகிறது, எத்தனை பெண்கள் கலந்துகொண்டிருக்கிறார்கள், என் ‘எக்ஸ்’ போயிருக்கிறாளா, என்னென்ன சாப்பிட்டாள், இப்படியான தகவல்களைத் தெரிந்துகொள்ள வேண்டும் என்ற உந்துதலுக்குக் காரணமே இந்த ஃபோமோதான்.

குறிப்பிட்ட அந்தச் சமூக வலை தளத்துக்குப் போவோம். பார்ப்போம். மீண்டும் பதற்றமாவோம். இந்த உணர்வுச் சுழற்சி மீண்டும் மீண்டும் நடந்து கடைசியில் ஒரு மனப்பதற்ற நோயாளியாகவோ ஒரு மனச்சோர்வு நோயாளியாகவோ மாறிவிடும் அபாயம் இருப்பதை மறக்க வேண்டாம்.

சமூக வலைதளங்கள் நிமித்தமாக வரும் ஃபோமோஎன்ற நம் பலவீனத்தை அப்படியே மார்க்கெட்டிங்குக்காகப் பயன்படுத்தும் சூட்சுமமும் அறிந்துகொள்ளுங்கள். இன்றைக்குப் பிரபலமாக இருக்கும் பல வணிக இணையதளங்கள் வாடிக்கையாளர்களை ஒரு பொருளை வாங்க வைக்கும் முயற்சியில் பயன்படுத்துமொரு முக்கிய ஆயுதமே இந்த ஃபோமோதான்.

‘ஹோட்டல் ரூம் எல்லாம் ஃபுல் ஆகப்போகிறது; சீக்கிரம் புக் செய்யுங்கள்!’

‘இன்னும் மூன்று நாள், இருபத்தாறு நிமிஷம், ஐம்பத்தெட்டு வினாடிகளில் இந்த டீல் முடிகிறது. சீக்கிரம் வாங்குங்கள் சாரே!’

‘ஸ்டாக் உள்ளவரை மட்டுமே இலவச ஷிப்பிங்!’

இப்படியான விளம்பரங்களை எல்லோரும் பார்க்கிறோம்.

அந்தத் தளத்தை விட்டு வெளியேற நினைக்கும் அந்தக் கணத்தில்கூட ஏதேனும் கவர்ச்சிகரமான பரிசொன்று கிடைக்க வாய்ப்பிருப்பதாகத் தூண்டு

வது… இப்படிப் பலதரப்பட்ட வழிகளில் விசிட்டர்களாகத் தமது தளத்தைப் பார்வையிட வந்தவர்களை சந்தாதாரர்களாகவும் வாடிக்கையாளர்களாகவும் மாற்றும் உளவியல் உத்தி இந்த ஃபோமோவை அடிப்படையாக வைத்துதான்.

இந்த விஷயம் இப்படி இருக்கும்என்று ஒவ்வொரு அனுபவமும் மூளையில் ஓர் பதிவை உண்டாக்கி விடுகிறது. அடுத்த முறை அதே விஷயம் நடப்பதற்

கான அறிகுறிகள் தெரிய ஆரம்பிக்கும்போது அதே கிளர்ச்சியுடன் நாம் அதைஎதிர்பார்க்க ஆரம்பித்துவிடுகிறோம்.

போன முறை திருவிழாவுக்குக் கூட்டிக்கொண்டு போன அப்பா இந்த முறை தேர்வைக் காரணம் காட்டி அழைத்துச்செல்ல மறுக்கிறார். ‘அச்சச்சோ என்னைவிட்டுட்டு  எல்லோரும் போய்விடுவார்களோ’ என்ற  பதற்றத்தில் அப்போதிருந்து டென்ஷனாகவே இருப்போம். இதேதான் இந்தக் காலத்தில் ஃபோமோ என்கிறோம்.

சாப்பாடு இல்லாமல் கூட மக்கள் வாழ்ந்துவிடுவார்கள் போல… ஆனால், இந்தச் சமூக வலைதளங்கள் இல்லாமல் இயல்பு வாழ்க்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டுவிடும்போலத்தான் நிலைமை இருக்கிறது.

இது போன்ற உளவியல் சிக்கல்களிலிருந்து மீண்டு வருவது எப்படி என்கிறீர்களா?

1. பதிவுகள் அனைத்தையும் அப்படியே நம்பாதீர்கள்:

ஆம். பாதிப் பேருக்கு மேல் தம்முடைய சிறப்பான பொழுதுகளையும் கணங்களையும் மட்டுமே பதிவிட்டுத் தமக்கான அங்கீகாரத்தைத் தேட எத்தனிப்பார்கள். தமது சிரமங்களையும் மறுபக்கத்தையும் சொல்வார்களா என்ன? என்னதான் கொண்டாட்டமான போஸ் கொடுத்தாலும் அவருக்கும் நிஜமான முகம் ஒன்று உண்டு என்று நினைத்துப் பாருங்கள். உங்கள் பதற்றம் சற்றே தணியும்.

2. யதார்த்தத்தைப் புரிந்துகொள்ளுங்கள்:

நீங்கள் அந்த பார்ட்டிக்கு அழைக்கப்படாமலிருக்க வேறு காரணங்களும் இருக்கலாம். மிகவும் தூரத்தில் நீங்கள் இருப்பதால் அழைத்தால் வருவீர்களோ என்ற சந்தேகம், சமீபத்தில் ஒரு பிரச்சினையிலிருந்து நீங்கள் மீண்டிருப்பீர்கள், உங்களைத் தொந்தரவு செய்ய வேண்டாமென்ற நண்பர்களின் எண்ணம். (பின்னே, உங்கள் முன்னாள் காதலி/ காதலன் அந்த பார்ட்டியில் கலந்துகொள்ள இருக்கும்போது உங்களை அழைப்பது சரியாக இருக்குமா என்று ஏற்பாட்டாளர் கருதியிருக்கலாம்.) கொஞ்சம் நிதர்சனமாக யோசித்தாலே பாதிப் பதற்றம் குறைந்துவிடும்.

3. நட்பையும் உறவையும் மீண்டும் ஒரு முறை புரிந்துகொள்ள வாய்ப்பு:

ஆம். பேசிப் பழகுவது என்பது எல்லோரும் செய்வது. ஆபத்தில் உணரலாம் அருமை நண்பனை என்பது நாம்கேட்டுப் பழகியதுதான். கொண்டாட்டத்திலும் அறியலாம் ஆத்மார்த்த நண்பனை என்பது இனி நாம் புரிந்துகொள்ள வேண்டியது. ஃபேஸ்புக்கில் எனக்கு நாலாயிரத்து சொச்சம் நண்பர்கள் இருக்கிறார்கள் என்று பெருமைப்படும் அதே நேரத்தில் அதில் எத்தனை பேர் மனதுக்கு நெருங்கியவர்கள் அல்லது நட்புக்கு இலக்கணமாக இருப்பவர்கள் என்பதைப் பகுந்தாய்ந்து பார்க்க வேண்டும் நாம்.

ஆக, ஒவ்வொருவருக்குமான தனிப்பட்ட வெளியில் பிரவேசிக்க யாருக்கும் உரிமை இல்லை. அவரைப் போன்று நான் இல்லையே என்று ஒப்பிட்டு நீங்கள் பதற்றமடைய ஆரம்பித்தால், அது தீரவே தீராத பிரச்சினைப் பயணமாக மாறிவிடும்.

திரைப்பட நடிகர்களையோ, அரசியல் பிரபலங்களையோ நேரில் பார்க்காதவரை அவர்களைப் பற்றிய பயங்கர ‘ரொமான்டிசைஸ்’ உணர்வுகளோடு சிலர் இருப்பார்கள். அது தூரத்துப் பச்சை போல. அவர்களை அணுகி நெருங்கிப்பழகிப் பார்த்துவிட்டால், ‘அட அவங்களும் நம்மளை மாதிரிதான்’ என்று யதார்த்தத்தைப் புரிந்துகொள்வார்கள். அது போலத்தான் தொடு திரைகளில் நாம் காணும் நண்பர், நண்பரல்லாதோர், பகைவராகிப்போன நண்பர், நண்பர் மாதிரியே பழகும் பகைவர் இப்படியானவர்களின் புகைப்படங்களும் பதிவுகளும்.

தனிமையில் இருந்தவாறு ஒவ்வொரு புகைப்படமாக ‘ஜூம்’ செய்து விரல்கொண்டு விரித்துப் படத்தைப் பெரிதாக்கி நுண்ணிய விஷயங்களையும் கவனித்துப் பெருமூச்சு விடுவதற்கு இணையமும் திறன்பேசியும் (ஸ்மார்ட்போன்தான்) வழிவகை செய்யும்தான். டிஜிட்டல் திரைகள் நம் மனதை ஆக்கிரமித்துக்கொண்டே போவதற்கு நிறைய காரணங்களைச் சொல்லிக்கொண்டே போகலாம். ஆனால், நிஜம் இன்னும் ஆழமானது. எக்கச்சக்கத்துக்கு  பதற்றமாகிறோம். அது தேவையில்லை என்பதை சீக்கிரம் புரிந்துகொண்டு ஃபோமோவிலிருந்து வெளியே வந்துவிடுங்கள் நண்பர்களே.

(இணைவோம்)

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE