காதல் ஸ்கொயர் - 06

By ஜி.ஆர்.சுரேந்தர்நாத்

கோத்தகிரியிலிருந்து கோடநாடு செல்லும் சாலையில், தேயிலைத் தோட்டங்களுக்கு நடுவே அமைந்திருந்தது ஃபேர்வியூ மவுன்ட்டன் ரிசார்ட்ஸ். கௌதம் ரிசப்ஷனில் விசாரித்துக்கொண்டு, அந்த சூட்டில் நுழைந்தபோது அப்பா ஹிண்டுவைப் படித்தபடி அமர்ந்திருந்தார். ஐம்பது வயதுக்கு டை அடித்து (-5வயது), ஷார்ட்ஸ் (-3 வயது), டீசர்ட் (-2 வயது) அணிந்து நாற்பது வயது தோற்றத்தில் இருந்தார்.

“அப்பா… இங்க வந்தும் ஹிண்டுவா?” என்று கௌதம் சத்தமாகக் கேட்டவுடன் நிமிர்ந்த அப்பாவின் முகம் கௌதமைப் பார்த்தவுடன் மலர்ந்தது. சிரித்தபடி, “பேப்பர் படிக்கலன்னா, காலைல எந்திரிச்சு காபி குடிக்காத மாதிரி டிஸ்டர்ப்டாவே இருக்கும்” என்று எழுந்து வந்த அப்பா கௌதமை உற்று பார்த்தபடி, “எப்படிரா இருக்க?” என்றார். “ம்... குட்” என்ற கௌதம் அப்பாவின் சிறு தொப்பையைத் தடவியபடி, “உங்க தொப்பையைப் பாத்தாலே நல்லா இருக்கீங்கன்னு தெரியுது. அம்மா எங்க?” என்றான்.

“அம்மா குளிச்சுட்டு வயச குறைச்சுட்டிருக்கா” என்றவுடன் கௌதம் அப்பாவைக் கேள்வியுடன் பார்த்தான். அப்பா சிரித்தபடி, “மேக்கப் பண்ணிட்டிருக்கா. கண்ணாடி முன்னாடி உக்காந்து அரை மணி நேரம் ஆவுது” என்றபடி படுக்கை அறைக் கதவைத் திறக்க, அம்மா கண்ணாடி முன் அமர்ந்து கூந்தலை முன்னால் போட்டு சீவிக்கொண்டிருந்தார். “அம்மா…” என்று கௌதம் அழைக்க, திரும்பி கௌதமைப் பார்த்தவுடன் அம்மாவின் முகம் சந்தோஷமாக மாறியது. வாயெல்லாம் சிரிப்புடன், “கௌதம்…” என்று எழுந்து வந்த அம்மா கௌதமின் தலையைக் கோதி, கன்னத்தைத் தடவி, “என்னடா… இளைச்சுட்ட?” என்றார்.

“வந்து பத்து நாள்தான் ஆவுது. அதுக்குள்ள இளைச்சுட்டனா? அதெல்

லாம் ஒண்ணுமில்ல. இது உன்னோட பாசப்பார்வை” என்றான் கௌதம்.

“நான் குண்டாயிட்டனா?” என்றார் அம்மா. கௌதம், “இல்லம்மா… கொஞ்சம் இளைச்ச மாதிரி இருக்கு” என்றவுடன் அம்மாவின் முகத்தில் அவ்வளவு சந்தோஷம்.

அம்மாவுக்கு 47 வயதாகிறது. பெரிய குண்டெல்லாம் இல்லை. கொஞ்சம்

சதை போட்டிருக்கிறார். அவ்வளவுதான். ஆனால் இந்த 45-ஐத் தாண்டிய பெண்களுக்குச் சில பிரத்யேகக் கவலைகள்/ சடங்குகள் இருக்கின்றன. தினமும் எழுந்தவுடன் கண்ணாடியில் சில நிமிடங்கள் கவலையுடன் முகத்தைப் பார்ப்பது. வாரத்துக்கொரு முறை “குண்டாயிட்டனா?” என்று தெரிந்தவர்களிடம் கேட்பது. யாராவது, ‘லைட்டா சதை போட்டுருக்கீங்க’ என்று சொல்லிவிட்டால் உடனே கணவனுடன் வாக்கிங் சென்று, இரண்டு ரவுண்டு அடித்துவிட்டு, “இளைச்சுட்டனா?” என்று கணவனிடம் கேட்பது. கண்ணுக்குக் கீழ் கருவளையம் விழுந்துவிட்டால் பதறிப்போவது. கல்லூரி சென்று தாமதமாக வரும் மகன் அருகில் வந்து சிகரெட், ஆல்கஹால் வாடை அடிக்கிறதா என்று மோப்பம் பிடிப்பது என்று அசல் இந்திய அம்மா.

“ட்ரெய்னிங் சென்டர்ல சாப்பாடெல்லாம் எப்படி?” என்றாள் அம்மா. “சூப்பர்” என்ற கௌதம் தன் அம்மாவின் இரண்டு கன்னங்களையும் பிடித்து செல்லமாகக் கிள்ளியபடி, “உன்ன மாதிரி நாலு பாசக்கார அம்மா சேர்ந்து, பயங்கர அன்போட சமைக்கிற மாதிரி அட்டகாசம்” என்றபோது பின்னாலிருந்து யாரோ சிரிக்கும் சத்தம் கேட்டது. கௌதம் திரும்பினான்.

சிரித்தபடி வாசலருகில் நின்றுகொண்டிருந்த அந்த இளம்பெண் வெளுத்த நீல நிறத்தில் ஜீன்ஸ், வெள்ளை நிற டாப்ஸ் அணிந்திருந்தாள். அப்பா, “இதுதான் டாக்டர் சந்திரகுமாரோட டாட்டர் பூஜா… மை ஸன் கௌதம்…” என்று அறிமுகப்படுத்தினார். “ஹாய்…” என்று நீட்டிக் குலுக்கிய கையில் குளிர்ச்சி. பூஜா மாநிறத்துக்கும் சிவப்புக்கும் நடுவே ஒரு பெயரில்லாத நிறத்தில் இருந்தாள். பூஜாவை நடிகை த்ரிஷாவுக்குப் பக்கத்தில் நிறுத்தினால், த்ரிஷா குண்டாகத் தெரிவார். காதில் ஒரு சின்ன வளையத்தைத் தவிர உடம்பில் எந்த ஆபரணங்களுமில்லை. நெற்றியில் சின்னதாய் ஒரு கறுப்புப் பொட்டு. காண்பவர்களைக் கவிதை எழுதத் தூண்டும் ஆபத்தில்லாத சராசரி கண்கள். ஆனால், அபாரமான அழகிய சிரிப்பு. அவள் சிரித்து முடித்த பிறகு அந்த இடத்தில் சட்டென்று மின்சாரம் நின்றுவிட்டதுபோல் இருந்தது.

“காலைலயே எங்க போயிட்ட?” என்றார் அம்மா.

“சும்மா டேன்டீ வரைக்கும் ஒரு வாக் போனேன். ஜனங்களே இல்லாத ரோடு. அங்கங்க தேயிலை வாசனை.  திடீர் திடீர்னு பாதையை மறைக்கிற பனி…பனிக்கு நடுவுல ஹெட்லைட்டோட பைக்கு… உடம்ப உலுக்காத குளிரு…சொர்க்கம் இப்படித்தான் இருக்குமா?” என்று கேட்ட பூஜாவின் பேச்சை ரசித்தபடி, கௌதம், “இங்கிலீஷ் லிட்ரேச்சர் படிக்கிறீங்களா?” என்றான்.

“இல்ல. எம்பிபிஎஸ் ஹவுஸ் சர்ஜன் போயிட்டிருக்கு.”

அப்பா, “பூஜா உங்கம்மா ஹாஸ்பிட்டல்லதான் ஹவுஸ் சர்ஜனா இருக்கா. ஏற்கெனவே சந்திரகுமார் டாட்டர்ன்னு தெரியும். இப்ப ரொம்ப

க்ளோஸாயிட்டாங்க. கோத்தகிரி போறன்ன

வுடனே அவளும் வரன்னா. அழைச்சுட்டு வந்தோம்” என்றார்.

“ஓகே... என்ன ப்ரொக்ராம் இன்னைக்கி?”

“முதல்ல உங்க ட்ரெய்னிங் சென்டரைப் பாக்குறோம்.”

பார்த்தார்கள். நந்தினி தஞ்சாவூர் சென்றிருந்ததால், அம்மா அப்பாவுக்கு நந்தினியை அறிமுகப்படுத்த முடியவில்லை.

மதியம் கோடநாடு வியூ பாயின்ட்டில் எதிரே பச்சைப் பசேலென்று இல்லாமல்,பெரும் மணற்குன்றுகள்போல் தெரிந்த மலைகளைப் பார்த்தபடி, “எனக்கு டாக்டருக்குப் படிக்கிறதே பிடிக்கல. வீட்டு கம்பல்ஸன்” என்றாள் பூஜா.

சற்றுத்தள்ளி அம்மா, அப்பா முன்பு போட்டோ

வுக்கு போஸ் கொடுப்பதைப் பார்த்தபடி, “ஏன் டாக்டருக்குப் படிக்கப் பிடிக்கல?” என்றான் கௌதம்.

“அம்மாப்பா ரெண்டு பேரும் டாக்டர். வீட்டுல உக்கார நேரமில்லாம பறந்துகிட்டேயிருப்பாங்க. என்கிட்ட டெய்லி இருபது வார்த்தைங்க பேசினா அதிகம். அதுவும் ரிப்பீட்டடா, ‘குட்மார்னிங்’, ‘சாப்பிட்டியா?’, ‘டிவி ரிமோட் எங்க?’, ‘குட் நைட்’... இப்படித்தான். அதனால அதே ப்ரொஃபஷன் பிடிக்கல.”

“ஆனா… நமக்கு இந்தப் பணக்கார லைஃப் அதனாலதான கிடைச்சது?”

“அஃப்கோர்ஸ்... ஆனா புதுசாப் பணக்காரனா ஆனாதான் த்ரில்லா இருக்கும்.பொறந்ததுலருந்தே பணக்காரனா இருந்தா அது பெரிய போர்.”

“ஆமாம்… நம்ம ‘இன்னக்கி சனிக்கிழமை’ன்னு சொன்னாக் கூட கெக்கேபிக்கேன்னு இளிக்க ஒரு கும்பல் இருக்கும்.”

“நம்ம சுமாரா ட்ரெஸ் பண்ணிட்டு வந்தாக்கூட சூப்பர்ன்னு சொல்றஃப்ரெண்ட்ஸ்...”

“எதுவும் அழுது, அடம் பிடிச்சு ஏக்கத்தோட காத்திருந்து கிடைக்காமகேட்டவுடனே எல்லாம் கிடைக்கும்.”

கேத்தரினா அருவியை நோக்கி மிகவும் சிரமமாக இறங்கியபடி பூஜா, “ஹவுஸ் சர்ஜன் முடிச்சவுடனே எனக்குக் கல்யாணம் பண்றதா இருக்காங்க. இப்பவும் கல்யாணம் பண்ணா, புருஷனுக்கு காபி போட்டுக் கொடுக்கணும்ன்னு பசங்க எதிர்பாக்கிறாங்களா?” என்றாள் மூச்சு வாங்க.

“பின்ன? எங்களுக்கெல்லாம் பொண்டாட்டின்னா காலைல எந்திரிச்சவுடனே தலைக்குக் குளிச்சுட்டு, ஈரக்கொண்டையோட, துளசி மாடத்தை சுத்தி வரணும்.அப்புறம் தூங்கிட்டிருக்கிற எங்க கால தொட்டுக் கும்பிட்டுட்டு…” என்ற கௌதமின் பேச்சில் இடைமறித்த பூஜா, “தாலிய கண்ல எடுத்து ஒத்திகிட்டு,கைல காபியோட உங்கள எழுப்பணும். சரியா?”

“அய்யோ… சூப்பர்ங்க. எப்படி இவ்ளோ கரெக்டா சொல்றீங்க?”

“நாங்களும் சீரியல்லாம் பாப்போம். நீங்க ஆசைப்படுற பொம்பளைங்க எல்லாம்அஞ்சு ஒலிம்பிக்ஸ்க்கு முன்னாடியே செத்துப்போயிட்டாங்க.”

“தெரியும்ங்க. சும்மா சொன்னேன். காலைல எந்திரிச்சவுடனே எங்கள தூக்கிப்போட்டு மிதிக்காம இருந்தா சரி” என்று கூற… பூஜா சத்தமாகச் சிரித்தாள்.

மறுநாள் குன்னூர் ரயில் நிலையத்தில் மலை ரயிலுக்காகக் காத்திருந்தபோது பூஜா, “நீங்க லவ் பண்ணியிருக்கீங்களா?” என்றாள்.

“லவ்வா? அது பயங்கர பேஜாருங்க. ரெண்டு மணி நேரம் பேசிட்டுப் பிரிஞ்ச அடுத்த செகண்டே ‘ஐ மிஸ் யூ’ன்னு மெசேஜ் அனுப்பணும். காலைல தூங்கி எந்திரிச்ச முகத்தோட செல்ஃபி எடுத்து வாட்ஸ்-அப்ல கேவலமா ஒரு போட்டோவ அனுப்புவாங்க. ‘ஆஸம்’ன்னு சொல்லணும். ‘நீ சிரித்தாய். கோடை குளிர்ந்தது. நீ அழுதாய். பூமி பிளந்தது’ன்னு கூசாம கவிதை எழுதணும். அது எல்லாத்தையும் விட, இந்தக் காலத்து பொண்ணுங்கள பீச்சுல சுண்டல் வாங்கிக் கொடுத்தெல்லாம் லவ் பண்ணிட முடியாது. பர்கர், கேஎஃப்ஸி, பீஸா… காபி ஷாப்ன்னு காசு அந்துரும்” என்று கௌதம் சொல்ல பூஜா சத்தமாகச் சிரித்தாள்.

திங்கள்கிழமை மாலை கிளம்பினார்கள். அம்மாவும் அப்பாவும் காரின் முன்பக்கம் ஏறிக்கொண்டார்கள். பின்னால் ஏறுவதற்கு முன்பு பூஜா, “மூணுநாள் உங்ககூட இருந்தது, முப்பது நாள் இருந்த மாதிரி இருந்துச்சு. என் லைஃப்ல சேர்ந்த மாதிரி நான் இவ்ளோ சிரிச்சதில்ல. ஐ வில் மிஸ் யூ” என்று கூறிவிட்டு ஏறினாள். கார் முனையில் திரும்புவதற்கு முன்பு ஒருமுறை திரும்பி பின் கண்ணாடி வழியாக கௌதமைப் பிரியத்துடன் பார்த்தாள். ஆனால், கௌதம் அதைக் கவனிக்

காமல் பக்கவாட்டில் பனி மூடிக்கொண்டிருந்த தேயிலைத் தோட்டங்களைப் பார்த்தபடி நடந்தான்.

(தொடரும்)

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE