லாரா கொல்லப்பட்டதற்குப் பிறகு, கொலம்பிய அரசு போதைப் பொருள் கடத்தல்காரர்கள் மீது அறிவிக்கப்படாத தனது முதல் போரை ஏவியது. நூற்றுக் கணக்கில் கைதுகள், ரெய்டுகள், தனிப்பட்ட விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்கள் கைப்பற்றப்படுதல், வங்கிக் கணக்குகள் முடக்கப்படுதல் என எங்கு திரும்பினாலும் எங்கிருந்தோ ஒரு கல் வந்து தாக்கியது. இதில் கடத்தல்காரர்கள் மட்டும்தான் பாதிக்கப்பட்டார்கள் என்றில்லை. நியாயமான முறையில் உழைத்துச் சம்பாதித்த செல்வந்தர்களும் அரசின் கெடுபிடிகளுக்கு ஆளானார்கள்.
மெர்ஸிடஸ் அல்லது ஃபெராரி காரில் சாலையில் சென்றால்கூடப் போதும். அரசின் சந்தேகக் கண்கள் அவர்கள் மீது விழப் போதுமானதாக இருந்தது. அப்படிச் சென்றவர்களை காரிலிருந்து இறங்கச் சொல்லி, அவர்களைத் தூற்றுவதில் போலீஸாருக்கு அப்படி ஒரு ஆனந்தம் இருந்தது. லஞ்சம் கொடுத்துச் சரிகட்டுகிற வேலை எல்லாம் அந்த நாட்களில் வேலைக்கு ஆகவில்லை.
எனினும் நியாயவான்கள் சந்தோஷப்பட்டார்கள். இறுதியாக, கொலம்பியாவில் ஒரு மாற்றம் நிகழ்கிறது, ஊழலை முடிவுக்குக் கொண்டு வர முயற்சிகள் மேற்கொள் ளப்படுகிறது என்று பெருமைப்பட்டார்கள். ஆனால், போதைப் பொருள் கடத்தல் நீங்கலாக இதர குறுக்குவழியில் சம்பாதித்த செல்வந்தர்கள் பனாமாவை நோக்கிப் படை யெடுத்தார்கள். ஆம்… அவர்களுக்கு அன்று சுவிஸ் வங்கி யின் மீதுகூட நம்பிக்கை இருக்கவில்லை போல. அதனால் பனாமா நாட்டுக்குச் சென்று, அங்கு தங்களின் பணத்தைப் பாதுகாத்தார்கள். அதில் பாப்லோவும் ஒருவன்!
படுகொலை செய்யப்பட்ட லாராவுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக, அதிபர் பென்ட்டாகியூர் கொலம்பிய கடத்தல்காரர்களை அமெரிக்காவுக்கு நாடு கடத்தும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார். அப்படி நாடு கடத்தப்பட வேண்டியவர்களின் பட்டியலில் முதலிடத்தில் இருந்தது, பாப்லோவின் நண்பனும் கூட்டாளியுமான கார்லோஸ் லெஹ்டர். அது பாப்லோவுக்கு வைக்கப்பட்ட முதல் செக்!
லாராவைக் கொன்றது நிச்சயம் பாப்லோவாகத்தான் இருக்க வேண்டும் என்று கொலம்பிய அரசு நம்பியது. எனவே, பாப்லோவுடன் சம்பந்தப்பட்ட அனைவரை யும் அது துரத்தத் தொடங்கியது. முதலில் அப்படி துரத்தப்பட்டது பாப்லோவின் அண்ணனும் அவரது குடும்பமும்தான்.
ராபர்ட்டோவின் மனைவியும் நான்கு வயது மகனும் கைது செய்யப்பட்டார்கள். கெரில்லா போராளிகளுக்கு ஆயுதம் சப்ளை செய்வதாகக் கூறி ராபர்ட்டோவின் மீது பொய் வழக்குப் போடப்பட்டது. இன்னொரு பக்கம், கஸ்தாவோவின் வீட்டிலும் போலீஸ் நுழைந்து அவனது மனைவியைக் கைது செய்தது. அந்த நாளில் ராபர்ட்டோவும் கஸ்தாவோ வும் வெவ்வேறு இடங்களில் இருந்ததால், அவர் களால் போலீஸ் கையில் அகப்படாமல் தப்பிக்க முடிந்தது.
இன்னொரு பக்கம், விரிஜீனியாவுக்கு ஏகப்பட்ட தொல்லைகள் கொடுத்தது போலீஸ். திடீரென்று அவள் வீட்டின் முன்பு போலீஸார் என்று சொல்லிக் கொண்டு சிலர் வந்து நிற்பதும், நள்ளிரவில் போன் செய்து கொலை மிரட்டல் விடுப்பதும் என அவள் தனது நிம்மதியை இழந்தாள். அதிலிருந்து தப்பிக்கும் விதமாக, அவள் நண்பன் ஒருவனுடன் பிரேசிலுக்குச் சென்றாள்.
பாப்லோவோ எல்லாவற்றையும் கவனித்துக்கொண்டு பனாமாவில் இருந்தான். எட்டு மாத கர்ப்பிணியாக இருந்த தனது மனைவியையும் மகனையும் இரவில் ஹெலிகாப்டர் மூலம் கொலம்பியாவிலிருந்து பனாமாவுக்கு வரவழைத்தான்.
அப்போது பனாமாவில் தேர்தல் நடைபெறவிருந்த காலம். கொலம்பியாவின் முன்னாள் அதிபர் அல்ஃபோன்ஸோ லோபெஸ் மிஷெல்சன் அந்தத் தேர்தலைக் கவனிக்கும் பார்வையாளராக நியமிக்கப்பட்டிருந்தார். அவரைத் தொடர்பு கொண்டு, தான் கொலம்பிய அரசுடன் சமாதானமாகப் போக விரும்புவதாகவும், எனவே அரசுடன் அவர் பேச வேண்டும் என்றும் கேட்கலாம் என்று நினைத்தான் பாப்லோ.
அதன்படியே, லோபெஸ், அதிபர் பென்ட்டாகியூரின் நண்பரும் முன்னாள் தகவல் தொடர்பு அமைச்சருமான பெர்னாடோ ராமிரேஸைச் சந்தித்தார். சந்திப்பு நல்லபடியாக முடிந்தது. பனாமாவில் பாப்லோவைச் சந்திக்க கொலம்பிய அரசிலிருந்து அதிகாரி ஒருவரை அனுப்பி, மேற்கொண்டு நடக்க வேண்டியவற்றைப் பார்க்கலாம் என்று முடிவெடுக்கப்பட்டது.
இந்தச் சமயத்தில் டாடாவுக்குப் பிரசவ வலி எடுத்தது. பனாமா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாள். அங்கு அவளுக்குப் பெண் குழந்தை பிறந்தது. யுவான் பாப்லோ, தனது முதல் கேர்ள் ஃப்ரெண்ட் நினைவாக அவளுக்கு மேனுவலா என்று பெயர் வைக்கச் சொன்னான்.
“அவ பெரியவளானதுக்கு அப்புறம், தன்னோட பேரு சரியில்லைன்னு சொன்னா, அவளை உன்கிட்டதான் நாங்க அனுப்புவோம்” என்று சொல்லிப் புன்னகைத்தான் பாப்லோ. முதலில் சில நொடிகள் அவன் சொன்னது புரியாமல் முழித்த யுவான், பிறகு ஓடிச்சென்று பாப்லோவைக் கட்டிக் கொண்டான். ஆம்… யுவானின் ஆசை ஏற்கப்பட்டது!
அடுத்த சில நாட்களில், கொலம்பிய அரசு அதிகாரி ஒருவர் பனாமாவுக்கு வந்தார். அவரிடம், தான் மட்டுமல்லாது, நாட்டிலுள்ள இதர நார்கோஸ் களின் கிச்சன்கள், விமான ஓடுதளங்கள், விமானம் மற்றும் ஹெலிகாப்டர்கள் ஆகியவற்றை அரசிடம் ஒப்படைப்பதுடன், அமெரிக்காவுக்கான கொக்கைன் சப்ளையை நிறுத்தவும், சட்டத்துக்குப் புறம்பாக வளர்க்கப்பட்ட கொக்கைன் செடிகளை அழிக்கவும் அவர்களை எல்லாம் சம்மதிக்க வைப்பதாகவும் கூறினான் பாப்லோ. பதிலுக்கு, அரசு தங்களை அமெரிக்காவுக்கு நாடு கடத்தும் ஒப்பந்தத்தைக் கைவிட வேண்டும் என்று கேட்டுக்கொண்டான். அதை அந்த அதிகாரியும் ஏற்றுக்கொண்டார்.
எல்லாம் கூடி வந்த நேரத்தில், பாப்லோவுக்கும் கொலம்பிய அரசுக்கும் இடையில் ரகசியமாக நடைபெற்ற இந்த பேரம், ‘எல் டியெம்போ’ எனும் நாளிதழில் கசிந்தது. கொலம்பிய கடத்தல் உலகின் 95 சதவீதத்தை இல்லாமல் செய்வதற்கான வாய்ப்பு கொலம்பிய அரசுக்குக் கிடைத்தது, அதுதான் கடைசி. பத்திரிகையில் வந்த அந்தக் கசிவுடன், நார்கோஸ்களுக்கு வேறு வழி தெரியவில்லை… கொலம்பிய அரசை நேரடியாக எதிர்ப்பதைத் தவிர!
பாப்லோவின் கடிதங்கள்!
மிகச் சரியாக இந்தக் காலத்தில்தான் பாப்லோவின் இன்னொரு முகம் உலகுக்குத் தெரிய வந்தது. ஆம்… அவன் ஒரு சிறந்த கடித எழுத்தாளனாக இருந்தான். இக்கட்டான சூழ்நிலைகளில் அவன் விடும் ஒவ்வொரு அறிக்கையும் அவ்வளவு தெளிவாகவும், வாதங்களைச் சரியாக முன்வைப்பதாகவும் இருந்தது.
ஒவ்வொரு முறை பத்திரிகைகளுக்குத் தான் அறிக்கை எழுதும்போது, தன்னை ஏதோ சேகுவேரா, ஃபிடல் காஸ்ட்ரோ ஆகியோரின் ரேஞ்சுக்கு நினைத்துக்கொண்டு எழுதுவான். அவன் எழுதும் தோரணையைப் பார்த்தால், இந்த மானுடத்தைச் சகல சிக்கல்களிலிருந்தும் விடுவிக்கிற அறிக்கையை எழுதுகிறானோ என்பது போலத் தோன்றும். ஆனால், அவை மக்களிடம் எடுபட்டாலும், அரசிடம் எடுபடவில்லை. ஏனென்றால் அவை பெரும்பாலும் அரசைக் குற்றம் சாட்டுவதாகவே இருக்கும்.
இந்த அனுபவங்களால்தானோ என்னவோ, பின்னா ளில் ‘மெதஜின் சிவிக்கா’ என்ற நாளிதழைத் தொடங்கி னான் பாப்லோ. அதில் பெரும்பாலும் அவனைப் போற்றுகிற கட்டுரைகளே அதிகம் இடம்பெற்றன.
(திகில் நீளும்)