நான் எப்படி அதிமுக ஆட்சியை பாராட்டிப் பேச முடியும்?- சுப்பிரமணியன் சுவாமி சுளீர்

By காமதேனு

கே.கே.மகேஷ்

தமிழ் சேனல் ஒன்றுக்கு அளித்த ஒரே பேட்டியில் தமிழகத்தில் பாஜக கூட்டணியை ‘டோட்டல் டேமேஜ்’ செய்துவிட்டார் சுப்பிரமணியன் சுவாமி. “அதிமுக தேர்தல் அறிக்கையை சீரியஸா எடுத்துக்காதீங்கோ. நாங்க நீட் கொண்டு வருவோம், ஏழு பேரை விடுதலை செய்ய மாட்டோம், அருண்ஜேட்லி சுத்த வேஸ்ட், மோடியோட ஆட்சி வெளியுறவு, பொருளாதார விஷயத்துல மோசம், சவுத்ல பிஜேபி வாஷ் அவுட் ஆகிடும், பாமக, தேமுதிக, அதிமுக பத்தியெல்லாம் கேட்காதீங்க. அவாள்லாம் தேச விரோதிங்க. தமிழ்நாட்ல இருந்து வந்த 40 எம்பிக்களும் வேஸ்ட்” என்றெல்லாம் சேட்டிலைட் வழியாக தமிழக பாஜக மற்றும் கூட்டணிக் கட்சிகள் மீது சரமாரி ஏவுகணைத் தாக்குதல் நடத்திவிட்டு, கடந்த வாரம் மதுரை வந்தார் சுப்பிரமணியன் சுவாமி.

மதுரை வருமான வரித்துறை அலுவலகம் அருகே உள்ள சுவாமியின் வீடு மற்றும் பழைய ஜனதா கட்சி அலுவலகம் ஒட்டடை அடித்து, சுத்தமாகக் காட்சி தந்தது. முற்றத்தில் போட்டிருந்த சாமியானா பந்தலில் சுமார் 30 பேரை அழைத்து வந்து உட்கார வைத்திருந்தார்கள். வந்திருந்தவர்கள் பொழுது போகாமல், பாதுகாப்புக்கு நின்றிருந்த சி.ஆர்.பி.எஃப். வீரர்களுடன் செல்ஃபி எடுத்துக் கொண்டிருந்தார்கள். இதோ வருகிறார், அதோ வருகிறார் என்றார்கள். ஆனால், மாலை 4 மணிக்குத்தான் வீட்டை விட்டே வெளியே வந்தார் சுவாமி. ஏற்கெனவே பாடம் படிக்கப்பட்டிருந்த, “சுவாமி வாழ்க” கோஷத்தை கூட்டத்தினர் மறந்துவிட்டதால், மொட்டையாக “வாழ்க” என்று மெல்ல முழங்கினார்கள்.

சிலர் பள்ளிக்கூடத்தில் தங்கள் பிள்ளைகள் வாங்கிய மெடல், சான்றிதழ்களைக் காட்டி, சுவாமியோடு செல்ஃபி எடுத்துக்கொண்டார்கள். ஒரு தம்பதி தங்கள் குழந்தையை சந்திரலேகாவிடம் கொடுத்து, “அய்யாவைப் பேர் வைக்கச் சொல்லுங்கம்மா” என்று கேட்க, இடுப்பில் கைவைத்தபடி யோசித்துவிட்டு “என்ன குழந்தை?” என்று சந்திரலேகாவிடம் கேட்டார். “கவுன் போட்டிருக்கே, கவனிக்கல” என்று அவர் சொல்ல, ஒரு கணம் யோசித்துவிட்டு “காமாட்சி” என்று பெயரிட்டார் சுவாமி. மீண்டும் வீட்டுக்குள் அவர் கிளம்ப ஆயத்தமாகையில், “கூட்டத்தில் நீங்க பேசணும்” என்று அன்புக்கட்டளையிட்டார் ஜனதா கட்சியின் முன்னாள் மாவட்டத் தலைவர் சசிக்குமார். “எங்கே கூட்டம்?” என்று சுவாமி தேட, முன்வரிசையில் செல்ஃபி எடுத்துக் கொண்டிருந்தவர்களை விலக்கி, பின்னால் உட்கார்ந்திருந்த 20 பேரைக் காட்டினார் சசி.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE