நாராயணசாமியா... ரங்கசாமியா..?-புதுச்சேரிக்கு கச்சைகட்டும் கதர் தலைவர்கள்!

By காமதேனு

கரு.முத்து

புதுச்சேரி மக்களவைத் தொகுதியில் என்ஆர் காங்கிரஸ் - அதிமுக கூட்டணி நாராயணசாமியையும் காங்கிரஸ் - திமுக கூட்டணி முன்னாள் முதல்வர் வைத்திலிங்கத்தையும் வேட்பாளர்களாக நிறுத்தி இருக்கிறது. களத்தில் நிற்பது நாராயணசாமியும் வைத்திலிங்கமும் தான் என்றாலும் நிஜமான போட்டி என்னவோ முன்னாள் முதல்வர் ரங்கசாமிக்கும் இந்நாள் முதல்வர் நாராயணசாமிக்கும்தான்!

தமிழகத்தைத் தழுவி இருந்தாலும் புதுச்சேரி அரசியல் சற்றே வித்தியாசமானது. காங்கிரஸ் என்று சொன்னால்தான் அங்கே அரசியல் எடுபடும். திமுக, அதிமுக எல்லாம் அங்கே ரெண்டாம்பட்சம்தான். புதுவையில் புகழ்பெற்ற மணக்குள விநாயகர் கல்வி நிறுவனங்களின் செயலாளரும், திமுக முன்னாள் எம்எல்ஏ கேசவனின் மகனுமான மருத்துவர் நாராயணசாமியை என் ஆர் காங்கிரஸ் வேட்பாளராக நிறுத்தி இருக்கிறார் ரங்கசாமி. தனது தனிப்பட்ட செல்வாக்கு மற்றும் பணபலத்தால் ஆரம்பகட்ட நிலையிலேயே முதல்வர் நாராயணசாமியின் வேட்பாளரான வைத்திலிங்கத்தை மிரளவைத்துக்கொண்டிருக்கிறார் மருத்துவர் நாராயணசாமி.

கடந்த தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி வைத்திருந்த என்ஆர் காங்கிரஸ் பாரம்பரியமிக்க காங்கிரஸையும் திமுக, அதிமுக கட்சிகளை எல்லாம் பின்னுக்குத் தள்ளி வெற்றிவாகை சூடியது. அந்தச் சமயத்தில் காங்கிரஸிலிருந்து கூடுவிட்டு கூடு பாய்ந்த ராதாகிருஷ்ணனை வேட்பாளராக நிறுத்தி ஜெயிக்க வைத்தார் ரங்கசாமி. ஓட்டு வாங்கிப் போனதோடு மக்களை மட்டுமல்ல... டெல்லிக்கு அனுப்பிய ரங்கசாமியையும் மறந்துபோனார் ராதாகிருஷ்ணன். இதுவரை இருந்த நாடாளுமன்ற உறுப்பினர்களிலேயே ஒன்றுக்கும் உதவாமல் இருந்த ஒரே நபர் இவர் என்பதுதான் ஆளாக்கிய ரங்கசாமிக்கு ராதாகிருஷ்ணன் சம்பாதித்துக் கொடுத்த பேரு!

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE