சாமானியர்களை சங்கடப்படுத்த வேண்டாமே!

By காமதேனு

தேர்தல் களத்தில் முறைகேடான பணப் புழக்கத்தைத் தடுக்க பறக்கும் படையினரும் தேர்தல் துறை அதிகாரிகளும் ஆங்காங்கே திடீர் சோதனைகள் நடத்தி கண்காணித்து வருகிறார்கள்.

அப்படித் தமிழகத்தில் கடந்த வாரம் வரை நடத்தப்பட்ட சோதனைகளில் சுமார் 13 கோடி ரூபாய் அளவுக்கு ரொக்கம் பிடிபட்டிருப்பதாகத் தேர்தல் துறை அதிகாரிகள் தெரிவிக்கிறார்கள். இப்படி பிடிபடும் பணத்துக்கு சரியான ஆவணம் காட்டவில்லை என்றால் வழக்கு தொடரப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்கிறார்கள். தேர்தலை நியாயமாகவும் நேர்மையாகவும் நடத்த வேண்டும் என்பதற்காக தேர்தல் ஆணையம் எடுக்கும் இத்தகைய நடவடிக்கைகள் இன்றைய காலகட்டத்துக்குத் தேவையான ஒன்றுதான் என்றாலும் சோதனை என்ற பெயரில் பல இடங்களில் சாமானியர்களிடமிருந்தும் பணத்தை அதிகாரிகள் கைப்பற்றுவதாகவும் புகார்கள் வருவதையும் கவனத்தில் கொள்ள வேண்டி இருக்கிறது.

 உரிய ஆவணங்களைக் காட்ட முடியவில்லை என்பதற்காக பொத்தாம் பொதுவில் அனைவரிடத்தும் பணத்தைக் கைப்பற்றுவது ஏற்புடையது அல்ல. சிறு வணிகர்கள், காய்கனி வியாபாரிகள் எல்லாம்கூட இன்றைய காலச் சூழலில் லட்சங்களை சர்வ சாதாரணமாகக் கையாள்கிறார்கள். இவர்கள் கையில் காலையில் பொருளாக இருக்கும் முதலீடு மாலையில் ரொக்கமாக மாறுகிறது. இதற்கு ஆவணம் கேட்டால் அவர்களால் எப்படிக் கொடுக்க முடியும்?

அதேசமயம், என்னதான் தேர்தல் அதிகாரிகள் கண்ணில் விளக்கெண்ணெய் விட்டுக்கொண்டு விழித்திருந்தாலும் தேர்தல் களத்தில் முறைகேடாக பயன்படுத்துவதற்கான பணமானது எத்தனையோ வழிகளில் எப்படியோ கைமாறிக்கொண்டுதான் இருக்கிறது. எனவே, சோதனை என்ற பெயரில் சாமானியர்களை சங்கடப்படுத்துவதைத் தவிர்த்து உண்மையிலேயே தேர்தலுக்காக முறைகேடாகக் கடத்தப்படும் பொருட்களையும் ரொக்கத்தையும் கைப்பற்றி நடவடிக்கை எடுத்தால் தேர்தல் ஓரளவுக்காவது நேர்மையாக நடக்கும்!

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE